அரசு பணியில் சேர்வதற்கு முன்பு 2 குழந்தைகள் இருந்தால் அரசு ஊழியரான பிறகு பேறுகால விடுமுறை கோர முடியாது: ஆசிரியை தொடர்ந்த வழக்கில் ஐகோர்ட் உத்தரவு

சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் ஏற்காட்டை சேர்ந்த ஆசிரியை நித்யா தாக்கல் செய்த மனுவில், கடந்த 2012ல் சித்ரபாளையம் பஞ்சாயத்து யூனியன் ஆரம்ப பள்ளியில் ஆசிரியராக பணியில் சேர்ந்தேன். பின்னர் ஏற்காடு பேலத்தூரில் உள்ள பள்ளிக்கு மாற்றம் செய்யப்பட்டேன். இந்த நிலையில், கடந்த 2016 நான் கர்ப்பமாக இருப்பதால் பேறுகால விடுப்பு மற்றும் பயன்கள் கேட்டு தலைமை ஆசிரியர் வாயிலாக வட்டார கல்வி அதிகாரிக்கு மனு அனுப்பினேன். இரண்டு குழந்தைகளுக்கு மேல் சம்பளத்துடன் கூடிய பேறுகால விடுப்பு கோர முடியாது என்று காரணம் கூறி எனது மனு நிராகரிக்கப்பட்டது. நான் அரசு பணிக்கு சேருவதற்கு முன்பே எனக்கு 2 குழந்தைகள் பிறந்தனர். அவர்களுக்காக பேறுகால விடுப்பை அனுபவிக்கவில்லை. எனவே, எனக்கு பேறுகால விடுப்பு, பயன் வழங்குமாறு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, அரசு தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் வி.அருண் ஆஜராகி, பேறுகால விடுப்பு மற்றும் அதற்கான பலன்கள் குறித்து அரசு அப்போதைக்கப்போது முடிவுகளை எடுக்கும். அரசு பணியில் உள்ளவர்களுக்கு 2 குழந்தைகள்வரை சம்பளத்துடன் பேறுகால விடுப்பு வழங்கப்படும். மனுதாரருக்கு ஏற்கனவே 2 குழந்தைகள் உள்ளன. இந்த நிலையில், அவர் 3வது குழந்தைக்கு பேறுகால விடுப்பு கோர முடியாது. பேறுகால விடுப்பு சட்டத்தின்படி அரசு பணியில் இருப்பவர்களுக்கு சம்பளத்துடன் கூடிய பேறுகால விடுப்பு பொருந்தாது. அடிப்படை விதிகள் மட்டுமே அவர்களுக்கு பொருந்தும். இரண்டு குழந்தைகளுக்கு அடிப்படை விதிகளின் கீழ் விடுப்பு கோருவது மனுதாரரின் அடிப்படை உரிமை.

பேறுகால விடுப்பு விதி 101(ஏ)ல் அரசு பணியில் இருக்கும் பெண்களுக்கு 2 பேறுகால விடுப்பு தரப்படும். அதில், முதல் பிரசவத்தில் இரட்டை குழந்தை பிறந்தால் அவர் 3வது குழந்தைக்கு அதாவது 2வது பேறுகால விடுப்பு கோர முடியும். குழந்தைகளை தத்து எடுத்திருந்தால் 2 பேறுகால விடுப்பே கோர முடியும் என்று கூறப்பட்டுள்ளது. எனவே, மனுதாரர் 3வது குழந்தைக்கு பேறுகால விடுப்பு கோர முடியாது என்று வாதிட்டார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ‘‘நிறுவனங்களில் பணியாற்றும் பெண்களுக்குத்தான் பேறுகால விடுப்பு சட்டம் பொருந்தும். அரசு பணியில் உள்ளவர்களுக்கு அடிப்படை விதிகள்தான் பொருந்தும். அடிப்படை விதிகளில் 2 குழந்தைக்கு மேல் பேறுகால விடுப்பு கோர முடியாது என்று கூறப்பட்டுள்ளது. இரண்டு குழந்தைகள் ஏற்கனவே உள்ளதால் மனுதாரர் 3வது குழந்தைக்காக பேறுகால விடுப்பு சட்டத்தின்கீழ் விடுப்பு கோர முடியாது. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது’’ என்று தீர்ப்பளித்தார்.

Related posts

வினேஷ் போகத்துக்கு துணை முதல்வர் உதயநிதி வாழ்த்து: உதயநிதி ஸ்டாலின்

குட்டி குட்டி வீட்டு குறிப்புகள்

மடிக்கணினியால் ஏற்படும் பாதிப்புகள்