அரசு, ஆன்மீக பயணமாக பிரதமர் மோடி 3 நாள் தமிழகத்தில் முகாம்: கேலோ இந்தியா போட்டியை நாளை தொடங்கி வைக்கிறார் 20, 21ம் தேதிகளில் ஸ்ரீரங்கம், ராமேஸ்வரத்தில் வழிபாடு

சென்னை: அரசு மற்றும் ஆன்மீக பயணமாக பிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார். 3 நாள் பயணம் மேற்கொள்ளும் அவர் கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளை தொடங்கி வைத்த பிறகு, ஸ்ரீரங்கம், ராமேஸ்வரம் சென்று சாமி தரிசனம் செய்கிறார். அரிச்சல்முனை பகுதியை பார்வையிட்டு கடற்கரையில் புகைப்படங்களை எடுக்கிறார். இதனால் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேகம் வரும் 22ம்தேதி நடக்கிறது. இந்த விழாவில் பிரதமர் மோடி உள்பட முக்கிய தலைவர்கள், பிரபலங்கள் என 8 ஆயிரம் பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதில், 4 ஆயிரம் சாதுக்களுக்கும், 4 ஆயிரம் விஐபிக்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில்தான் மோடி தமிழகம் வருகிறார். நாளை (19ம் தேதி) மாலை 5 மணிக்கு சிறப்பு விமானத்தில் சென்னை விமானநிலையம் வருகிறார். அவரை கவர்னர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள், அதிகாரிகள் வரவேற்கின்றனர். பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் ஐஎன்எஸ் அடையாறு பகுதிக்கு வருகிறார். அங்கிருந்து கார் மூலம் சென்னை நேரு ஸ்டேடியம் செல்கிறார். அங்கு கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டியை தொடங்கி வைக்கிறார். அதன்பின்னர் சென்னை ஆளுநர் மாளிகையில் தங்குகிறார். அதன்பின்னர் 20ம் தேதி காலை 9.30 மணிக்கு சென்னையில் இருந்து, சிறப்பு விமானத்தில் புறப்பட்டு திருச்சி செல்கிறார்.

தொடர்ந்து சாலை மார்க்கமாக காரில் செல்லும் பிரதமர் மோடி, காலை 11 மணியளவில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சாமி தரிசனம் செய்கிறார். அங்கு சுமார் அரை மணி நேரம் கோயிலில் இருக்கும் பிரதமர், கோயில் பகுதிகளை பார்வையிட உள்ளதாக தெரிகிறது. உழவாரப் பணிகளையும் மேற்கொள்கிறார். பின்னர் அங்கிருந்து மீண்டும் விமான நிலையம் வரும் பிரதமர், அங்கு இருந்து மதுரை விமானநிலையம் புறப்பட்டு செல்கிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் ராமேஸ்வரம் செல்லும் பிரதமர் மோடி, கடலில் இறங்கி நீராடுகிறார்.

அதன்பின்னர் கோயில் கிணற்றில் குளிக்கிறார். பின்னர் ராமநாதசாமி கோயிலில் சாமி தரிசனம் செய்கிறார். 2 மணி நேரம் ராமாயணம் படிக்கிறார். பின்னர் ராமேஸ்வரத்தில் உள்ள ராமகிருஷ்ணா மடத்தில் இரவு தங்குகிறார். மறுநாள் காலை (21ம்தேதி) கோதண்டராமர் கோயிலில் தரிசனம் செய்கிறார். பின் அரிச்சல்முனை பகுதிக்குச் சென்று ராமர் பாலம் கட்டியதாக கூறப்படும் இடத்தை பார்வையிடுகிறார். கடற்கரையில் புகைப்படம் எடுத்துக் கொள்கிறார். பின்னர் புனிதநீர் எடுத்துக்கொண்டு சிறப்பு விமானத்தில் டெல்லி செல்கிறார். அதன்பின்னர் 22ம் தேதி அயோத்திக்கு மோடி சென்று கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்கிறார்.

பிரதமர் வருகையை முன்னிட்டு சென்னை மற்றும் ஸ்ரீரங்கம் உள்வீதி, திருவடிவீதி மற்றும் கோயிலை சுற்றி உள்ள வீடுகளில் வசிப்பவர்கள், கடைக்காரர்கள் பற்றிய விவரங்களை போலீசார் நேற்று முதல் சேகரிக்க தொடங்கினர். பிரதமர் வந்து செல்லும் வழித்தடங்களில் வெடிகுண்டு தடுப்பு பிரிவு நிபுணர்கள் தீவிர சோதனை செய்து வருகின்றனர். ஸ்ரீரங்கம் பகுதி முழுவதும் போலீசாரின் முழுக் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. பிரதமர் வருகையை முன்னிட்டு உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்வது, விமான நிலையத்தில் இருந்து கோயிலுக்கு வரும் வழித்தடம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து போலீஸ் அதிகாரிகள் தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

கோயிலுக்குள் இயங்கி வரும் பொம்மை மற்றும் இரும்பு கடை உள்ளிட்ட கடைகளை மூட உத்தரவிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அதேபோல, ராமநாதபுரம் கலெக்டர் விஷ்ணு சந்திரன் தலைமையில் எஸ்பிஜி ஐஜி, ராமநாதபுரம் எஸ்பி சந்தீஷ், மத்திய உளவுத்துறை எஸ்பி சுதீப்குமார், கோயில் உதவி கோட்டப் பொறியாளர் மயில்வாகனம் உள்ளிட்ட அதிகாரிகள் ராமேஸ்வரம் கோயிலுக்கு நேற்று சென்றனர். அங்கு 22 தீர்த்தமாடும் இடங்கள், செல்லும் வழிகள், சுவாமி, அம்பாள் சன்னதி, மூன்றாம் பிரகாரம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளையும் பார்வையிட்டதுடன் கோயிலுக்குள் சில பணிகளை செய்ய உத்தரவிட்டனர்.

பின்னர் கோயில் நான்கு ரத வீதிகள், ராமகிருஷ்ண மடம் வளாகத்தையும் ஆய்வு செய்தனர். அடுத்து ராமேஸ்வரத்தில் உள்ள தனியார் தங்கும் விடுதி உள்ளரங்கத்தில் நடைபெற்ற அதிகாரிகள் கூட்டத்தில் மோடியின் வருகை பாதுகாப்பு குறித்தும், மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டது. மண்டபம் முகாமில் அமைந்துள்ள ஹெலிபேட் தளம் சுத்தம் செய்யப்பட்டு தயார் செய்யும் பணிகள் நடைபெற்றது. தொடர்ந்து பிரதமர் கார் செல்லும் வழிகளையும் ஆய்வு செய்தனர்.

* அரசியல் பேச தடை
பிரதமர் மோடி நாளை மாலை சென்னை வருகிறார். அவரை கவர்னர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் வரவேற்கின்றனர். மேலும் பிரதமரை வரவேற்க பாஜ மற்றும் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த 60 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஓ.பன்னீர்செல்வம், ஜி.கே.வாசன், கிருஷ்ணசாமி, ஏ.சி.சண்முகம், ஜான்பாண்டியன், பாரிவேந்தர் ஆகியோருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இரவு சென்னையில் ஆளுநர் மாளிகையில் பிரதமர் மோடி தங்குகிறார். அப்போது அவரை சந்திக்க அனுமதி கேட்டு ஓ.பன்னீர்செல்வம் கடிதம் கொடுத்துள்ளார். ஆனால் நேற்று இரவு வரை அவருக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. பிரதமர் மோடி விரதத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேக விழா முடியும் வரை அரசியல் பேச மாட்டேன் என்று அவர் விரதம் உள்ளார். இதனால் அவர் ஓ.பன்னீர்செல்வத்தை தனியாக சந்திக்க அனுமதி அளிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், மோடியை வரவேற்கவும், வழி அனுப்பவும் மட்டும் அவருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Related posts

மதுரை மண்டலத்திற்கு தேவையான அறிவியல் பரிசோதனை நிபுணர்களை உடனே நியமிக்க வேண்டும்: ஐகோர்ட் கிளை உத்தரவு

இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹிஸ்புல்லா மூத்த தளபதி பலி

அமெரிக்கா சென்றடைந்தார் பிரதமர் மோடி