அனைத்து அரசு பள்ளிகளிலும் பள்ளி மேலாண்மை குழு மறுகட்டமைப்பு கூட்டம்: இன்று முதல் 4 கட்டமாக நடக்கிறது

சென்னை: சென்னை மாவட்டத்திலுள்ள ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, அனைத்து அரசு, ஆதி திராவிட நல தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் இன்று முதல் 4 கட்டங்களாக பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு கூட்டம் நடைபெற உள்ளது. இதுகுறித்து சென்னை மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்ட அறிவிப்பு: சென்னை மாவட்டம் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, அனைத்து அரசு, சென்னை, ஆதி திராவிட நல தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 2022ம் ஆண்டு முதல் பள்ளி மேலாண்மைக் குழுக்கள் மறுகட்டமைப்பு செய்யப்பட்டு உறுப்பினர்களின் பதவிக் காலம் 2024ம் ஆண்டு நிறைவடையும் நிலையில், அரசாணையின்படி, அனைத்து வகை அரசு பள்ளிகளிலும் 2024-26ம் ஆண்டுகளுக்கான பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு செய்து 24 புதிய உறுப்பினர்களை கொண்டு செயல்பட உள்ளது. அதன்படி, 506 அரசு, சென்னை, ஆதி திராவிட நல தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 10ம் தேதி (இன்று) முதல் வரும் 31ம் தேதி வரை 4 கட்டங்களாக பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு நடைபெற உள்ளது.

முதற்கட்டமாக 10ம் தேதி (இன்று) 112 தொடக்கப்பள்ளிகளிலும், இரண்டாம் கட்டமாக 17ம் தேதி 106 தொடக்கப் பள்ளிகளிலும், 3ம் கட்டமாக 24ம் தேதி 159 உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளிலும் மற்றும் 4ம் கட்டமாக வரும் 31ம் தேதி 129 நடுநிலைப் பள்ளிகளிலும் பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு நடைபெற உள்ளது. அதில் 24 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். இதில் 75 சதவீதம் (18 உறுப்பினர்கள்) பெற்றோர்களாக இருக்க வேண்டும். மொத்த உறுப்பினர்களில் குறைந்தப்பட்சம் 12 பெண்கள் இடம்பெற்றிருக்க வேண்டும். பள்ளிகளின் தரம் மற்றும் மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்திட, பள்ளிக் கல்வித் துறையுடன், பிற துறைகளும் ஒருங்கிணைந்து அனைத்து வகை அரசு பள்ளிகளின் மறுகட்டமைப்பு நிகழ்வில் பெற்றோர்கள் அனைவரும் கலந்து கொண்டு பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர் மற்றும் உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க அழைக்கப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related posts

மணல் கடத்திய டிராக்டர் டிப்பர் பறிமுதல்

உளுந்தூர்பேட்டையில் அக். 2ம் தேதி விசிக மது ஒழிப்பு மகளிர் மாநாடு ஆயத்தப் பணி

ஆசிரியரை பீர் பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல்