அரசு நிலம் ஆக்கிரமிப்பை கண்டித்து விஏஓ அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் திடீர் ஆர்ப்பாட்டம்

உத்திரமேரூர்: உத்திரமேரூர் அருகே ஊராட்சி நிலம் ஆக்கிரமிப்பு செய்த தனிநபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி விஏஓ அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே சித்தாலப்பாக்கம் கிராமத்தில் ஊராட்சிக்கு சொந்தமான கருந்தோப்பு என்ற இடம் உள்ளது. இந்த பகுதியில் மகாத்மா காந்தி தேசிய வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் மரம் நடும் பணிக்காக கிராம மக்கள் 50க்கும் மேற்பட்டோர் நேற்று கருந்தோப்பு பகுதிக்கு சென்றனர். கருந்தோப்பு நிலத்தினை அதே பகுதியை சேர்ந்த தனிநபர் ஆக்கிரமிப்பு செய்து வைத்திருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், மரம் நடும் பணிக்காக சென்ற 100 நாள் வேலைதிட்ட பணியாளர்கள் 50க்கும் மேற்பட்டோரை பணி செய்யவிடாமல் தடுத்ததோடு ஆக்கிமிப்பாளர் மிரட்டி திருப்பி அனுப்பியதாக கூறப்படுகிறது.

இதனால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் நேற்று விஏஓ அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அப்போது, ஆக்கிரமிப்பின் பிடியில் உள்ள ஊராட்சிக்கு சொந்தமான நிலத்தை மீட்க வேண்டும். ஆக்கிரமிப்பாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். 100 வேலை திட்டத்தில் மரக்கன்றுகள் நடும் பணியினை மேற்கொள்ள வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த ஆர்ஐ சீனிவாசன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி ஆக்கிரமிப்பை அகற்றி உரிய நடிவக்கை எடுக்கப்படும், என உறுதி அளித்தார். இதையடுத்து, பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Related posts

தாயகம் வந்தது இந்திய கிரிக்கெட் அணி

ஜூலை-04: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

ஆட்சி அமைக்கப் போவது யார்? இங்கிலாந்தில் இன்று பொதுத்தேர்தல்: சுனக் – ஸ்டார்மர் இடையே கடும் போட்டி