சனாதனத்தை ஒழிக்க ஆட்சியே போனாலும் கவலை இல்லை: கொள்கை பக்கம் தான் நிற்போம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி

சென்னை: திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி ஆலோசனை கூட்டம் ராயப்பேட்டை புதுக்கல்லூரியில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது, நிருபர்களிடம் அவர் கூறியதாவது: ஜி20 மாநாட்டில் பிரதமர் மோடியின் முன் பாரத் என பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது என கேட்கிறீர்கள். பிரதமருக்கு வாழ்த்துகள் (சிரித்துக் கொண்டே) 9 ஆண்டுகளுக்கு முன்பு சொன்னது போலவே, இந்தியாவையே மோடி மாற்றி காட்டிவிட்டார். சனாதனம் ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்டதற்காக என்னையும், சேகர் பாபுவையும் அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என கவர்னரிடம் பாஜவினர் புகார் மனு அளித்துள்ளனர்.

திமுக கட்சியே சனாதனத்தை ஒழிப்பதற்காக தொடங்கப்பட்ட கட்சி தான். எங்களுக்கு ஆட்சியை பற்றி எல்லாம் கவலை கிடையாது. கொள்கை பக்கம் நிற்போம். ஆட்சி அதிகாரத்தை விட கொள்கையே முக்கியம். வருகிறவர் போகிறவர்கள் எல்லாம் எனது தலைக்கு விலை பேசுகிறார்கள். சனாதனம் தர்மம் ஒழிப்பு காரணமாக ஆட்சியே போனால் பரவாயில்லை என்றும் எடுத்துக் கொள்ளலாம். அம்பேத்கர், பெரியார், அண்ணா ஆகியோர் பேசாததை நான் பேசவில்லை.

மாநாட்டில் நான் பேசிய பேச்சு மட்டும் விமர்சனமாக்கப்படுகிறது. நான் பேசியதை எல்லாம் திரித்து பொய்யை பரப்பி வருகின்றனர். இது தான் அவர்களின் முழு நேர வேலை. என்னோட ஒரே கேள்வி அதிமுகவை பற்றியது தான். அதிமுக வில் அண்ணா பெயர் உள்ளது. அண்ணா தான் அதிக அளவில் சனாதன தர்மத்தை எதிர்த்து பேசியுள்ளார். அதிகமாக பேசியுள்ளார். சனாதன தர்மம் விவகாரத்தில் அதிமுகவினருடைய கருத்து என்ன? அதிமுக தலைவர்களிடம் பதிலை எதிர்பார்க்கிறேன் என்றார்.

Related posts

அரசின் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் தாயார் மறைவு: முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

சொல்லிட்டாங்க…

சொந்த மாவட்டத்திலேயே தலைமறைவு வாழ்க்கை வாழும் மாஜி மந்திரியை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா