தமிழக அரசு நுகர்வோர்களை பாதுகாக்க, குறைகளை தீர்க்க தனிக்கவனம் செலுத்தி வருகிறது

*திண்டுக்கல்லில் நடந்த விழாவில் அமைச்சர் ஐ.பெரியசாமி பேச்சு

திண்டுக்கல் : நுகர்வோர்களை பாதுகாக்கவும், அவர்களின் குறைகளை தீர்க்கவும் தமிழக அரசு தனிக்கவனம் செலுத்தி வருகிறது. இதற்காக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன என திண்டுக்கல்லில் நடந்த விழாவில் அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்தார்.திண்டுக்கல்லில் மாநில அளவிலான தேசிய நுகர்வோர் தினம், உலக நுகர்வோர் உரிமைகள் தின விழா நேற்று நடைபெற்றது. விழாவிற்கு, கலெக்டர் பூங்கொடி வரவேற்றார்.

உணவு பொருள் வழங்கல்- நுகர்வோர் பாதுகாப்பு துறை ஆணையர் பூஜா குல்கர்னி, கூட்டுறவு உணவு- நுகர்வோர் பாதுகாப்பு துறை செயலாளர் ஜெகநாதன் முன்னிலை வகித்தனர். எம்பி வேலுச்சாமி, எம்எல்ஏ காந்தி ராஜன், மேயர் இளமதி, துணை மேயர் ராஜப்பா, மாவட்ட ஊராட்சி தலைவர் பாஸ்கரன், மாவட்ட ஊராட்சி துணை தலைவர் பொன்ராஜ் வாழ்த்துரை வழங்கினர்.

இதில் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்ட ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, தமிழக கூட்டுறவு துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், உணவு- உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி ஆகியோர் கலந்து கொண்டு மாநில அளவில் பள்ளி- கல்லூரி மாணவர்களுக்கு இடையே நடைபெற்ற பேச்சு, கவிதை, கட்டுரை, ஓவிய போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு கேடயம், சான்றிதழ், ரொக்க பரிசு வழங்கினர். மேலும் ரேஷன் கடைகளில் சிறப்பாக பணியாற்றிய விற்பனையாளர்கள், எடையாளர்களுக்கு ரொக்க பரிசு, சான்றிதழ் மற்றும் மகளிர் சுயஉதவி குழுக்களை சேர்ந்த 2,182 பயனாளிகளுக்கு ரூ.14 கோடியே 57 லட்சம் மதிப்பிலான கடனுதவிகள் வழங்கப்பட்டது.

பின்னர் அமைச்சர் ஐ.பெரியசாமி பேசியதாவது, ‘தமிழ்நாடு முதலமைச்சர் இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் எல்லோருக்கும் எல்லாம் என்ற வகையில் மக்களுக்கு அனைத்து திட்டங்களையும் அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். அதோடு மட்டுமின்றி அனைத்து துறைகளிலும் தமிழகம் முன்னிலை பெற வேண்டும் என்பதற்காக அயராது உழைத்து வருகிறார். பொது விநியோக திட்டம், அத்தியாவசிய பொருட்கள் சுமார் 8 கோடி மக்களுக்கும் சென்றடையும் வகையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

ரேஷன் கடைகளில் தரமான அரிசி, பருப்பு, சர்க்கரை, எண்ணெய் போன்ற பொருட்கள் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படுகிறது. கூட்டுறவுத்துறை மூலம் ரேஷன் கடைகள் வாயிலாக கொரோனா காலத்தில் ரூ.4,000 வழங்கப்பட்டது. கூட்டுறவு துறையை பன்முகத்தன்மையுடன் செயல்படுத்துவதற்கான மேம்பாட்டு பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நுகர்வோர்களை பாதுகாக்கவும், அவர்களின் குறைகளை தீர்க்கவும் தமிழக அரசு தனிக்கவனம் செலுத்தி வருகிறது.

அதற்காக தேசிய நுகர்வோர் தினம், உலக நுகர்வோர் உரிமைகள் தினங்களை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன’ என்றார்அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் பேசியதாவது, ‘தமிழ்நாடு முதலமைச்சர் கடைகோடி மக்களையும் சென்றடையும் வகையில் பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். தமிழகத்தில் சுமார் 2.24 கோடி குடும்ப அட்டைகள் உள்ளன. இதன்மூலம் சுமார் 8 கோடி மக்களுக்கு தரமான பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. நெருக்கடியான காலகட்டங்களிலும் பொது விநியோக திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. பொதுமக்களின் பாதுகாப்பு, உரிமை, நலனை பாதுகாக்கும் வகையில் ஒன்றிய அளவிலும், மாநில அளவிலும் நுகர்வோர் பாதுகாப்பு ஆணையங்கள் உள்ளன.

நுகர்வோரின் பாதுகாப்பு- உரிமைகளை பாதுகாக்க இந்த ஆணையங்கள் செயல்பட்டு வருகின்றன. பொதுமக்கள் பொருட்களை வாங்கும் போது அதிலுள்ள தயாரிப்பு தேதி, காலாவதி தேதி, விலை ஆகியவற்றை கவனித்து வாங்க வேண்டும். இதில் ஏதேனும் முறைகேடுகள் இருப்பின் நுகர்வோர் பாதுகாப்பு ஆணையத்திடம் முறையிட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளிலும் நுகர்வோர் மன்றங்களை உருவாக்கி நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் குறித்து மாணவ, மாணவியர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு, அவர்களின் மூலமாக மக்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

தமிழ்நாட்டில் நுகர்வோர் பாதுகாப்பு துறையின் மூலம் மாநில அளவிலான நுகர்வோர் தகவல் மையம் செயல்பட்டு வருகிறது. பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் வானொலி, தொலைக்காட்சி வாயிலாக நுகர்வோர் கல்வி நிகழ்வுகளை நடத்தி வருகிறது. நுகர்வோர் மன்றங்கள் சீரிய செயல்பாடுகளுடன், புதிய யுத்திகளை செயல்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்பட்டு வருகின்றன.

நுகர்வோரின் பாதுகாப்பினையும், உரிமையையும் நிலைநாட்டும் வகையிலும் சந்தை ஏற்ற இறக்கங்களில் சாமானிய மக்களும் பாதிப்படையா வண்ணம் தமிழ்நாட்டில் கூட்டுறவு துறையின் மூலம் கூட்டுறவு அங்காடிகள், பண்ணை பசுமை காய்கறி கடைகள் ஆகியன செயல்பட்டு வருகின்றன. மேலும், நவீன உலகிற்கு ஏற்ப கூட்டுறவு பொருட்களை மக்களிடத்தில் கொண்டு சேர்க்கும் வகையிலும் கூட்டுறவு சந்தை என்ற செயலி அறிமுகம் செய்யப்பட்டு பயன்பாட்டில் உள்ளது.

பொதுமக்களிடத்தில் இந்த செயலிக்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் நுகர்வோர் குறைதீர் ஆணையம் செயல்பட்டு வருகிறது. நுகர்வோர் தங்களது பிரச்னைகளை இங்கு தீர்வு கண்டு பயனடையவும், இதுகுறித்த விழிப்புணர்வினை அனைவரிடத்திலும் ஏற்படுத்த வேண்டும்’ என்றார்.

Related posts

செந்தில்பாலாஜி வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு

2060-ல் இந்திய மக்கள் தொகை 170 கோடியாக உயரும்: ஐநா

தமிழ்நாட்டில் 3 நாட்கள் கனமழை பெய்ய வாய்ப்பு