மக்களை மீட்ட அரசு

செ ன்னையை ‘மழை சுனாமி’ புரட்டி போட் டது என்று கூறினால் அது மிகையல்ல. இதுபோன்ற இயற்கை பேரிடர் காலங்களில், ஒரு அரசு எப்படி செயல்பட வேண்டும், மீட்புப்பணிகளை எப்படி துரிதமாக மேற்கொண்டு, மக்களை மீட்க வேண்டும் என்பதற்கான கள உழைப்பை வெளிப்படுத்தி காட்டியுள்ளது திராவிட மாடல் அரசு. முதல்வர் மு.க.ஸ்டாலின் களத்தில் நின்று வெள்ளப்பகுதிகளை பார்வையிடுவதோடு, மீட்பு பணிகளையும் முடுக்கி விடுகிறார். இதன் காரணமாக சென்னையில் பெரும்பாலான இடங்களில் தண்ணீர் மெல்ல மெல்ல வடிந்து வருகிறது.

மீட்பு பணிகளில் மட்டும் சுமார் 75 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் களமிறங்கி உள்ளனர். சென்னை மட்டுமின்றி தமிழகத்தின் மற்ற மாவட்டங்களில் இருந்தும் அரசு அதிகாரிகள், சென்னையில் முகாமிட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட 42 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், சுமார் 370க்கும் மேற்பட்ட நிவாரண முகாம்களில், தங்கியுள்ளனர். அங்கு உள்ளவர்களுக்கும், வீட்டிலிருந்து வெளியே வர முடியாமல், உணவின்றி தவிப்பவர்களுக்கும் உணவு பொட்டலங்கள், பாய், போர்வை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

வெள்ள நிவாரணப்பணிகளில் தீயணைப்புத்துறையினர் உள்ளிட்ட மீட்புக்குழுவினரின் பங்கு பாராட்டிற்குரியது. வெள்ள நீர் சூழ்ந்த இடங்களில் தவிப்பவர்கள் தகவலின்பேரில், உடனடியாக சம்பவ இடத்திற்கு ரப்பர் மிதவை படகுகளில் சென்று, சிக்கியவர்களை மீட்டு வருகின்றனர். நடிகர்கள் அமீர்கான், விஷ்ணுவிஷால் உள்பட சுமார் 20 ஆயிரம் பேர், படகுகள் மூலம் மீட்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. மக்களின் அடிப்படை தேவையான மின்சாரம், பால் தடையின்றி கிடைக்கவும் வழி வகை செய்யப்பட்டுள்ளது. தண்ணீர் வடிந்த பகுதிகளில் மின்சார விநியோகமும் வழங்கப்பட்டுள்ளது. மற்ற பகுதிகளில் மின் விநியோகம் வழங்க மின் ஊழியர்களின் அர்ப்பணிப்பு உணர்வு மிகுந்த பங்களிப்பும் இங்கே பாராட்டிற்குரியது.

அதே நேரம் வலைத்தளங்களில் வெளிமாநிலங்களில் ஊர்ந்த முதலை மற்றும் வெள்ளம், 2015 வெள்ள வீடியோக்களை வெளியிட்டு, தமிழக மக்களை சில எதிர்க்கட்சிகள் அச்சுறுத்தி வருகின்றன. அதே நேரம், சென்னை வெள்ளத்திற்கான நிவாரணப்பணிகளில் அதிமுக, பாஜ உள்ளிட்ட கட்சிகளின் செயல்பாடு மிகவும் மந்தமாக உள்ளது. இந்த நேரத்தில் அரசியல் செய்யாமல், பாதிக்கப்பட்ட மக்களுக்காக சேவை செய்ய களமிறங்குவதே அரசியல் நாகரிகம். மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட பாதிப்பிற்காக ஒன்றிய அரசு ₹5,060 கோடியை வெள்ள நிவாரணமாக வழங்க வேண்டுமென முதல்வர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். இதுதொடர்பாக தனது கடிதத்தில், தமிழ்நாட்டில் மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட பெருமழையால், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் மிக அதிகமான மழைப்பொழிவு பெறப்பட்டது.மிகக்கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

பாலங்கள், சாலைகள், பொது கட்டிடங்கள் உள்பட பல்வேறு உள்கட்டமைப்புகள் சேதமடைந்துள்ளன. லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, தமிழ்நாட்டிற்கு, இடைக்கால நிவாரணமாக ₹5,060 கோடியை உடனடியாக வழங்க வேண்டும். சேதமான பகுதிகளை பார்வையிட ஒன்றிய அரசின் குழுவையும் தமிழ்நாட்டிற்கு அனுப்பி வைக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். வெள்ள சேதத்தை ஒன்றிய அரசின் குழு, முழுமையாக பார்வையிட்டு தமிழக அரசு கோரியுள்ள நிவாரணத்தொகையை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பதே அனைவரின் விருப்பமாகும்.

Related posts

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: நாளை மறுநாள் பிரசாரம் ஓய்வு: அமைச்சர் உதயநிதி 2 நாள் பிரசாரம்

பாஜ பிரமுகர் தொடர்பு உள்ள தங்க கடத்தல் விசாரணையில் தொய்வு

பிளஸ் 1 மாணவி பாலியல் பலாத்காரம்: அத்தையின் கணவர் கைது