‘குப்பைக்காக அரசு நிதி வீணாகிறது’ நெல்லியாளம் நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் காரசார விவாதம்

பந்தலூர் : நெல்லியாளம் நகர்மன்ற கூட்டத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள ஆணையாளருக்கு கவுன்சிலர்களின் பணிவான கோரிக்கைகள். நீலகிரி மாவட்டம் நெல்லியாளம் நகராட்சியின் மாதாந்திர கூட்டம் துணை தலைவர் நாகராஜா தலைமையில் நடைபெற்றது. ஆணையாளர் குமரிமன்னன் முன்னிலை வகித்தார். பல்வேறு பணிகளுக்கு மன்றம் ஒப்புதல் பெறுவதற்கான அறிக்கை உதவியாளர் பிரபு வாசித்தார். அப்போது அறிக்கையின் மீது விவாதம் நடைபெற்றது.

கூட்டத்தில் ஆலன் (திமுக) பேசும்போது, ‘‘புதிதாக பொறுப்பேற்றுள்ள ஆணையாளர் இப்பகுதியின் ஏழை எளிய மக்களின் மேம்பாட்டிற்காக வளர்ச்சிப்பணிகளை மேற்கொள்ளவேண்டும் கடந்த ஒன்றறை ஆண்டுகளாக மக்களிடம் வாக்குறுதி அளித்த எந்தவிதப்பணிகளும் முழுமையாக நடைபெறவில்லை, நகராட்சியில் தினந்தோறும் மூன்று டன்னுக்கு குறைவான குப்பைகளே சேகரிக்கப்படுகின்றது. ஆனால் அறிக்கையில் 7 டன் குப்பைகள் சேகரமாவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்காக செலவிடும் தொகை விரையம் ஆவதாக தெரிகிறது அரசு பணத்தை காரணமில்லாமல் விரையம் செய்யாதீர்கள், நகர்மன்ற தலைவர் கூட்டத்தில் கலந்து கொள்ளாததால் முடிவெடுப்பதை ஒத்தி வைக்கவேண்டும்’’ என்றார். இதையடுத்து அதனை பிற கவுன்சிலர்களும் ஆதரித்து பேசினர். இதைத்தொடர்ந்து புவனேஷ்வரன் (விசிக) பேசும்போது, ‘‘நகராட்சி பகுதியில் குப்பை சேகரமாகும் அளவு குறைந்து காணப்படுகிறது அதற்காக நிதி விரையம் தேவையில்லை மேலும் தனது வார்டில் சமீபத்தில் யானை தாக்கி தோட்டத்தொழிலாளி உயிரிழந்தார்.

அப்பகுதியில் தெருவிளக்குகள் முறையாக இல்லாதது காரணம் தெருவிளக்கை முறையாக பராமரிக்கவேண்டும்’’ என்றார். மேலும் ரமேஷ் (சிபிஐஎம்) பேசும்போது, ‘‘தெருவிளக்குகள் முறையாக எரிவதில்லை வளர்ச்சிப்பணிகளுக்கு கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்து தரமான பணிகள் மேற்கொள்ளவேண்டும் என்றார். முரளிதரன் (திமுக) பேசும்போது அனைத்து வார்டுகளிலும் உள்ள மண்சாலைகளை சிமெண்ட் சாலையாக மாற்றவேண்டும். குடிநீர் குழாய்கள் பதித்து சீரான குடிநீர் விநியோகம் செய்யவேண்டும்’’ என குறிப்பிட்டார்.

இதையடுத்து சாந்தி (திமுக) பேசுகையில், பந்தலூர் இன்கோநகர் பகுதியில் குடிநீர் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்றார். புவனேஸ்வரி (திமுக) பேசும்போது, தேவாலா அட்டிக்கு செல்லும் சாலை சீரமைக்கவேண்டும் என்றார். மேலும் பன்னீர்செல்வம் (திமுக) பேசுகையில், ‘‘பந்தலூர் அண்ணாநகர், அம்பேத்கர் நகர் பகுதியில் போதிய நடைபாதை, தடுப்புசுவர் வசதிகளை செய்துதரவேண்டும்’’ என்றார்.தொடர்ந்து, பிற கவுன்சிலர்களும் வளர்ச்சி பணிகள் குறித்து பேசினர். இதற்கு ஆணையாளர் பதில் அளித்து பேசும்போது, புதிதாக பொறுப்பேற்றுள்ளேன் அனைத்து பகுதிகளிலும் ஆய்வு செய்து கவுன்சிலர்கள் ஒத்துழைப்போடு வளர்ச்சி பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்’’என்றார். முடிவில் கவுன்சிலர் முரளிதரன் நன்றி கூறினார்.

Related posts

கீழ்முதலம்பேடு ஊராட்சி அலுவலகத்தின் பழுதடைந்த கட்டிடம் சீரமைக்கப்படுமா? பொதுமக்கள் அச்சம்

கோயில் மாடுகளை காப்பகத்திற்கு அனுப்ப பொதுமக்கள் எதிர்ப்பு

பள்ளிப்பட்டு பகுதியில் ரூ.4 கோடி மதிப்பீட்டில் திட்டப்பணிகள்: எஸ்.சந்திரன் எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார்