வேலூர் முத்துரங்கம் அரசு கலைக்கல்லூரியில் 2ம் சுற்று இளநிலை பாடப்பிரிவுக்கான கலந்தாய்வு தொடங்கியது

*165 மாணவர்கள் சேர்க்கை

வேலூர் : வேலூர் அரசினர் முத்துரங்கம் கலை அறிவியல் கல்லூரியில் 2ம் சுற்று இளநிலை பட்டப்படிப்புகளில் பொதுப்பிரிவுக்கான கலந்தாய்வு தொடங்கியது. நேற்று 165 மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.வேலூர் அரசினர் முத்துரங்கம் கலைக்கல்லூரியில் உள்ள 984 இடங்களில் சேர சுமார் 16 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளனர். இவர்களின் தரவரிசைப்பட்டியல், www.mgacvlr.edu.in எனும் கல்லூரி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இதில் இருக்கும் மதிப்பெண் அடிப்படையில், குறிப்பிட்ட நாட்களில் நடக்கும் கலந்தாய்வில் மாணவர்கள் பங்கேற்க வேண்டும். அதற்கு ஏற்றவாறு, கலந்தாய்வில் பங்கேற்பது குறித்து, கல்லூரியில் இருந்து இமெயில் மற்றும் எஸ்.எம்.எஸ். மூலமாக தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, முதற்கட்டமாக மதிப்பெண் தரவரிசை பட்டியல் அடிப்படையில், என்சிசி, விளையாட்டு, முன்னாள் படைவீரர், மாற்றுத்திறனாளிகள், அந்தமான், நிகோபார் தீவுகளை சேர்ந்த தமிழர்கள் ஆகியோர்களுக்கு கலந்தாய்வில் 36 மாணவர்கள் பாடப்பிரிவுகளை தேர்வு செய்தனர். பின்னர், பொதுப்பிரிவினருக்கு முதல்சுற்று கலந்தாய்வு கடந்த 10ம் தேதி தொடங்கியயது.

இதைதொடர்ந்து, பொதுப்பிரிவுக்கான 2ம் சுற்று கலந்தாய்வு நேற்று தொடங்கியது. இதில் அறிவியல், கலை பாடப்பிரிவுகளான வரலாறு, பொருளியல், வணிகவியல் மற்றும் வணிக மேலாண்மையியல், கணிதம், இயற்பியல், வேதியியல், விலங்கியல், கணினி அறிவியல், ஊட்டச்சத்து உணவு கட்டுப்பாட்டியல் ஆகிய பாடங்களுக்கான முதல் சுற்றுக்கு 340 முதல் 320 வரை கட்ஆப் மதிப்பெண் பெற்றவர்களுக்கு கலந்தாய்வு நடந்தது.

இதில் கலந்து கொள்ள 1000 பேருக்கு அழைப்பு விடுவிக்கப்பட்டது. நேற்று கலந்து கொண்ட மாணவர்கள், தங்கள் விரும்பமான பாடங்களை தேர்வு செய்தனர். நேற்று வரை 165 மாணவர்கள் பாடங்களை தேர்வு செய்தனர்.

தொடர்ந்து, இன்று தமிழ், ஆங்கில மொழிப்பாடப் பிரிவுகளில் தமிழில் 95 முதல் 93 வரை கட்ஆப் மதிப்பெண் பெற்றவர்களுக்கும், ஆங்கிலத்தில் 75 முதல் 60 வரை கட் ஆப் மதிப்பெண் பெற்றவர்களுக்கும் கலந்தாய்வு நடக்கிறது. மேலும் மாணவர் சேர்க்கை கட்டணம், கலை மற்றும் வணிக பாடப்பிரிவுக்கு ரூ.1556, அறிவியல் பாடப் பிரிவுக்கு ரூ.1586, கணினி அறிவியல் பாடப்பிரிவுக்கு ரூ.686 என நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கல்லூரி அதிகரிகள் தெரிவித்தனர்.

Related posts

விளைநிலங்களில் யானைகள் புகுவதை தடுக்க வனப்பகுதியில் மூங்கில் வளர்க்க வேண்டும் : விவசாயிகள் கோரிக்கை

ஆற்காடு சுரேஷின் பிறந்த நாளில் ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ததாக கைதானவர்கள் பரபரப்பு வாக்குமூலம்

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் மறைவு: சரத்குமார் இரங்கல்