சுகமான வாழ்விற்கு சுஞ்சனகட்டே கோதண்டராமர்

அருவியின் சத்தம்

கர்நாடக மாநிலம் மைசூரிலிருந்து சுமார் 40 கிலோமீட்டர் தொலைவில், கிருஷ்ணராஜா நகர் (கே.ஆர்நகர்) அருகில் சுஞ்சனகட்டே கிராமம் உள்ளது. இங்கு மிக பழமையான ராமர் கோயில் உள்ளது. கோயிலின் அருகில் காவேரிநதி, இங்கு 20 மீட்டர் உயரத்திலிரூந்து நீர் வீழ்ச்சியாக கொட்டுகிறது. இதன் சத்தம் “ஹோ’’ என காதை கிழிக்கிறது‌.ஒரு ஆச்சர்யம்! அருகில் உள்ள கோயிலுக்குள்ளும் இந்த சப்தம் கேட்கிறது. கர்ப்பகிரகத்தினுள் சென்று தரிசிக்கும்போதுமட்டும் கேட்பதில்லை. இது இங்குள்ள ராமரின் அருள் என பக்தர்கள் நம்புகின்றனர்.

கற்சிலையாக மாறிய ராமர்

ஒருகாலத்தில், இந்த காட்டுப்பகுதி தண்டகாரண்யம் நாட்டுடன் இணைந்து இருந்தது. அப்போது சீதை மற்றும் லட்சுமணனுடன் வனவாசம் மேற்கொண்ட ராமர், இங்கு வந்தாராம்‌. அப்போது இந்த பகுதியில் வேடன் சுன்ச்சா மற்றும் அவன் மனைவி சுன்சி வசித்து வந்தனர். அவர்கள் வந்தவர்களின் முகத்தில் ராஜகலை ஜொலிப்பதை பார்த்து அவர்களை இங்கேயே தங்கி இருங்கள் என்று கேட்டுக் கொண்டார்கள். ராமனும் சம்மதித்து அங்கே சிறிது காலம் தங்கினாராம். ஆனால் சீதைக்கு குளிக்க, துவைக்க தண்ணீர் இல்லையாம். உடனே லட்சுமணனிடம் ஒரு நீரூற்றை உருவாக்கிக் கொடு என்றாராம். லட்சுமணனும் பிரார்த்தித்து அருகில் உள்ள பாறையை நோக்கி சில அம்புகளை விட்டாராம்.

ஆச்சர்யம்! நீருற்று ஏற்பட்டு தண்ணீரானது வந்த வேகத்தில் அடித்து, குளம் போல் நிரம்ப, சீதை அதனை பயன் படுத்திக் கொண்டாளாம். இந்த பகுதியில் ராமர் இருந்த போது தருண்பந்து என்ற ரிஷி தவம் செய்து கொண்டிருந்தார். அவர் சிறந்த விஷ்ணு பக்தர். ராமரை சந்தித்தபோது, விஷ்ணு, ராமராக பிறந்து சீதாவை திருமணம் செய்து லட்சுமணருடன் காட்டில் இருப்பதாக அறிந்தேன். ராமரை பார்க்கவேண்டும் என்று ஏக்கத்துடன் கூறினாராம். அவருடைய அபிமானத்தைக் கண்டு வியந்த ராமர், சீதையை வலது பக்கத்திலும், லட்சுமணனை இடது பக்கத்திலும் நிற்க வைத்து, நானே ராமர் எனக்கூறி தரிசனம் தந்தாராம்.

அருகில் சென்ற ரிஷி, காட்சிதந்த இடத்திலேயே நிரந்தரமாய் சிலைகளாக நின்று அருள வேண்டும் என வேண்ட, ராமரும் தங்களை கற்சிலைகளாக நிறுத்தம் செய்துவிட்டு அந்த இடத்தை விட்டுச் சென்றுவிட்டார் என, ஸ்தல வரலாறு கூறுகிறது. இன்று கோயில் அதே இடத்தில்தான் உள்ளது. கோயிலின் அருகிலேயே நீர் வீழ்ச்சி உள்ளது.

ஜொலிக்கும் ராமர்

சுமார் 20 படிகள் ஏறிச் சென்றால், கோயிலை அடையலாம். மூன்று நிலைகள் கூடிய கோபுரத்தை தரிசித்து உள்ளே சென்றால், ஒன்றுக்கு இரண்டாக துஜஸ்தம்பத்தை காணலாம். நுழைவு வாயில் சிறியதாக உள்ளது. நேரே கர்ப்பகிரகம்தான். அங்கு நின்ற கோலத்தில் ராமர், சீதை, லட்சுமணனை தரிசிக்கலாம். ராமரும், லட்சுமணனும் கையில் வில் அம்புடன் காட்சி தருகின்றனர். ராமருக்கு வலப்புறத்தில் சீதையும், லட்சுமணர் இடப்புறத்திலும் நிற்கின்றனர். மூவர் தலையில் அழகான கிரீடம் உள்ளது. மூவருமே பூமாலை அலங்காரத்தில் ஜொலிக்கிறார்கள். எதிரே வெளியே ஆஞ்சநேயர் கை கூப்பியபடி காட்சி தருகிறார். கர்ப்பகிரகத்துக்கு மேலே வெளியே விமானம் மிக அழகாக இருக்கிறது. முன்மண்டபத்தில், வேடன் சுன்ச்சா மற்றும் அவன் மனைவிக்கு சிலைகள் உள்ளன.

கோயிலுக்கு பின்புறம், காவிரிக்கரையை ஒட்டி மற்றொரு ஆஞ்சநேயர் கோயில் உள்ளது. சீதா குளித்ததாக கருதப்படும் ஒரு குளத்தையும் பார்க்கலாம். மஞ்சள்பொடி வண்ணம்‌ மற்றும் அபிஷேகப் பொடி வண்ணக்கலவையையும் அந்த தண்ணீரில் காணலாம். பக்தர்கள் பலரும் அந்த தண்ணீரை எடுத்து தலையில் தெளித்துக் கொள்கிறார்கள்.

சிறப்பாக நடைபெறும் தேர்த்திருவிழா

இந்த கோயிலில் மகாசங்கராந்தியின்போது தேர்த்திருவிழா நடைபெறும். அதேபோல், ஆகஸ்டு மாதம் நடக்கும் கால்நடை கண்காட்சியின் போதும் தேர்த்திருவிழா நடைபெறும்.இதனுள் வைத்து பவனிவரும் உற்சவசிலைகள் இங்கு வைக்கப்படவில்லை. மாறாக, அருகில் உள்ள கே.ஆர்.நகரில் உள்ள கோயிலில் பாதுகாப்பாக வைத்திருந்து,தேர்த்திருவிழா சமயம் கொண்டுவந்து விழா முடிந்ததும் திரும்ப எடுத்துக் கொண்டு போய் வைத்துவிடுவார்களாம். இந்த கோயிலை 1924ம் ஆண்டு மைசூர் மகாராஜா
கிருஷ்ராஜ உடையார் புதுப்பித்து கட்டினார்.

கோயில் திறப்பு: காலை: 6-12மணி, மாலை: 6-7 மணி. எப்படி செல்வது: பெங்களுரில் இருந்து 205கி.மீ தூரத்தில் இந்த திருத்தலம் உள்ளது. குறிப்பு: நீர்விழ்ச்சியை ரசிக்க வாரக் கடைசியில் நல்ல கூட்டம் வரும். காடு, மரங்கள், நீர்வீழ்ச்சி, காவிரி என உள்ளதால் ரம்யமான சூழலை ரசிக்கலாம்.

ராஜிராதா

Related posts

ஆடி அமாவாசை: காகத்திற்கு இப்படி உணவு வைத்து பாருங்க… வாழ்க்கை உயரும்!!

ஆடி தகவல்கள்

சகல நோயும் தீர்க்கும் சாம்பார் சாத பிரசாதம்!