வருங்காலம் சிறக்கட்டும்

தமிழ்நாட்டு இளைஞர்கள் கல்வியில், அறிவில், தனித்திறமைகளில் தலைநிமிர்ந்து நிற்க உருவாக்கப்பட்ட திட்டமே ‘நான் முதல்வன்’ திட்டம். தமிழ்நாட்டில் பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் மற்றும் இளைஞர்கள் படிப்பில் மட்டுமல்லாது, வாழ்க்கையிலும் வெற்றியாளர்களாக திகழ இத்திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் கீழ் மாணவ, மாணவிகளின் தனித்திறமைகள் அடையாளம் காணப்பட்டு, அடுத்து அவர்கள் என்ன படிக்கலாம், எப்படி படிக்காலம் என்கிற வழிகாட்டுதலோடு, சிறப்பு பயிற்சிகளும் அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் நேர்முக தேர்வுக்கும் அவர்களை தயார்படுத்தி வருகின்றனர். தமிழக இளைஞர்களுக்கு வளர்ந்து வரும் தொழில்நுட்பத்திற்கு ஏற்ப பாடத்திட்டத்துடன் கூடிய தனிப்பயிற்சிகள், இலவச திறன் பயிற்சிகள், போட்டி தேர்வுகளுக்கான பயிற்சிகள், ஆளுமை திறன் மற்றும் பன்மொழி பயிற்சிகள், உயர்கல்விக்கான நுழைவுத்தேர்வு பயிற்சி உள்ளிட்டவை இத்திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம், பிரிட்டிஷ் கவுன்சிலுடன் மாணவர்களின் திறன் மேம்பாட்டுக்கு ஒரு ஒப்பந்தம் செய்துள்ளது.

அதன்படி லண்டனில் நியூகேஸ்டல் பல்கலைக்கழகத்தில் செயற்கை நுண்ணறிவு, தரவு அறிவியல் ஆகிய பாடப்பிரிவுகளில் ஒருவார சிறப்பு திறன் மேம்பாடு பயிற்சி தமிழ்நாட்டு மாணவ, மாணவிகளுக்கு அளிக்கப்பட உள்ளது. இதற்காக கல்லூரி மாணவ, மாணவிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு, திறனாய்வு தேர்வு நடத்தி, 100 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அந்த மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் பயிற்சிகள் வழங்கப்பட்டு, அதில் சிறப்பாக செயல்பட்ட 25 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

தேர்வு செய்யப்பட்ட மாணவர்களோடு, 2 பேராசிரியர்களும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் மூலம் லண்டனுக்கு நேற்று புறப்பட்டு சென்றனர். லண்டன் சென்றுள்ள மாணவ, மாணவிகளுக்கு வரும் 16ம் தேதி வரை அங்கு சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளன. படிக்கும் காலத்திலேயே லண்டன் சென்று பயிற்சி பெறும் வசதிகள் ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் கிடைத்துள்ளதால் மாணவ, மாணவிகள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

தமிழ்நாட்டின் கடந்த காலங்களையும் இப்போது தான் நினைத்து பார்க்க வேண்டும். அப்போதெல்லாம் டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் குறித்து கூட மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வு இருந்ததில்லை. அதற்கு எப்படி படிக்க வேண்டும், விண்ணப்பிப்பது எப்படி என பல மாணவர்கள் திகைத்து திண்டாடிய காலங்கள் உண்டு. அரசு தேர்வுகளுக்குரிய புத்தகங்களை வாங்க முடியாமலும், பொது நூலகங்களில் சென்று அவற்றை நோட்டுக்களில் எழுதி மாணவர்கள் படித்த காலங்களும் உண்டு.

நவீன விஞ்ஞான வளர்ச்சிக்கேற்ப இன்று மாணவர்களின் அறிவும், திறமைகளும் விசாலப்பட்டு கொண்டே செல்கின்றன. திராவிட மாடல் ஆட்சியில் மாணவ, மாணவிகளின் தனித்திறமைகளை கண்டறிந்து, அவற்றை ஊக்குவிக்க அரசே முன்வருகிறது. திறனாய்வு தேர்வுகள் வாயிலாக திறமையுள்ள மாணவர்களை கண்டறிந்து வெளிநாடுகளுக்கு அனுப்பவும், உலகளாவிய தொழில்நுட்பங்களை தமிழ்நாட்டிற்கு கொண்டு வந்து சேர்க்கவும் ‘நான் முதல்வன்’ திட்டம் கைக்கொடுக்கிறது.

வேலைவாய்ப்பு குறித்த சிறப்பு பயிற்சிகள், மாணவர்களுக்கு படித்தவுடன் வேலை என்கிற இலக்கை நோக்கி பயணிக்க வைக்கிறது. குடத்திலிட்ட விளக்குகளை, ஊருக்கே தெரிகிற வகையில் ஓளிவீச வைக்க இத்தகைய திட்டங்கள் பயன்படுகின்றன. அந்த வகையில் இளைய தலைமுறையினரின் வருங்காலம் சிறக்கட்டும்.

Related posts

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்; விழுப்புரம் மாவட்டத்தில் 4 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல்!

காற்று மாசுவால் ஆண்டுதோறும் 10 நகரங்களில் 30 ஆயிரம் பேர் பலி: டெல்லியில் 12,000 பேர் உயிரிழப்பு

திருவான்மியூர் பாம்பன் சுவாமி கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த தடையில்லை: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு