பொன் வண்டு சோப்பு நிறுவனம் ஆக்கிரமித்து வைத்திருந்த ரூ.150 கோடி மதிப்பு 14.5 ஏக்கர் அரசு நிலம் மீட்பு: வருவாய்த்துறை அதிகாரிகள் நடவடிக்கை

புழல்: சோழவரம் அருகே பொன்வண்டு சோப்பு நிறுவனத்தின் ஆக்கிரமிப்பில் இருந்த ₹150 கோடி மதிப்பிலான 14.5 ஏக்கர் அரசு நிலம் மீட்கப்பட்டது. கிராம நத்தம் புறம்போக்கு நிலமான இது போலி பட்டா மூலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த நிலையில், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பே ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு மீட்கப்பட்டது. பின்னர் தற்போது மீண்டும் ஆக்கிரமிக்கப்பட்டதால் வருவாய்த்துறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் தனியார் வசமுள்ள ஆக்கிரமிப்பு நிலங்களை வருவாய்த்துறை அதிகாரிகள் அதிரடியாக மீட்டு வருகின்றனர். அப்படி ஆக்கிரமிப்பு நிலங்களை அதிகாரிகள் மீட்கச் செல்லும்போது சம்பந்தப்பட்ட ஆக்கிரமிப்பாளர்கள் சார்பில் எதிர்ப்பு கிளம்புகிறது. இதனால் காவல்துறை உதவியுடன் சேர்ந்து, அதிகாரிகள் பொக்லைன் இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்பு இடங்களை இடித்து அகற்றி வருகின்றனர்.

இந்நிலையில், சோழவரம் அடுத்த ஒரக்காடு கிராமத்தில் 14.5 ஏக்கர் கிராம நத்தம் புறம்போக்கு நிலம், பொன்வண்டு சோப்பு நிறுவனத்தால் ஆக்கிரமிக்கப்பட்டு கட்டிடங்கள் கட்டப்பட்டிருந்தன. 20 ஆண்டுகளுக்கும் மேலாக போலி பட்டா மூலம் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த இந்த நிலம் கடந்த 2022ம் ஆண்டு மீட்கப்பட்டு வருவாய்த்துறை சார்பில் எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டது.

இந்தநிலையில் மீண்டும் அந்த இடம் ஆக்கிரமிக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் தனியார் சோப் நிறுவனம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து ஆக்கிரமிப்பில் கட்டிடங்கள் கட்டி அனுபவித்து வந்தது. இது தொடர்பாக கிராம மக்கள் வருவாய்த்துறையிடம் மீண்டும் புகார் அளித்தனர். இதனையடுத்து நேற்று மீண்டும் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி பொன்னேரி வட்டாட்சியர் மதிவாணன் தலைமையில் நடந்தது. இதில் வருவாய்த் துறையினர் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

பொக்லைன் இயந்திரங்கள் உதவியுடன் தனியார் சோப்பு நிறுவனத்தால் ஆக்கிரமிக்கப்பட்டு கட்டப்பட்ட கட்டிடங்களை இடிக்கும் பணி நடைபெற்றது. தனியார் நிறுவனத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட சுமார் ₹150 கோடி மதிப்பிலான நிலம் வருவாய்த்துறை அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளது. அசம்பாவிதம் நடக்காமல் இருக்க சோழவரம் போலீசார் சார்பில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

 

Related posts

இந்தியாவிலிருந்து வெடிமருந்துகள் உக்ரைன் செல்கிறதா? ஒன்றிய அரசு மறுப்பு 

நந்தனம் ஓட்டலில் உள்ள ஸ்பாவில் பாலியல் தொழில் நடத்திய பெண் கைது: 4 பட்டதாரி இளம்பெண்கள் மீட்பு

திருமணம் செய்வதாக கூறி சிறுமியை கர்ப்பமாக்கிய காதலன்: போக்சோ சட்டத்தில் கைது