தங்கம் விலை புதிய உச்சத்தை தொட்டது.. ஒரு சவரன் ரூ.160 உயர்ந்து ரூ.56,000ஐ நெருங்கியது : வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி

சென்னை: தங்கம் விலை இன்றும் அதிரடியாக உயர்ந்து ஒரு சவரன் ரூ.56,000ஐ நெருங்கியது. தங்கம் விலை கடந்த மார்ச் மாதம் இறுதியில் இருந்து அதிரடியாக உயர தொடங்கியது. தினம், தினம் புதிய உச்சத்தையும் தொட்டது. கடந்த 13ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.960 உயர்ந்து ஒரு சவரன் ரூ.54,600, 14ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ஒரு சவரன் ரூ.54,920 ஆகவும் உயர்ந்தது. 16ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 அதிகரித்து ஒரு சவரன் ரூ.55,040 ஆக விற்கப்பட்டது. தொடர்ச்சியாக 3 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரன் ரூ.1,400 வரை உயர்ந்தது. அதே நேரத்தில் தங்கம் விலை மீண்டும் சவரன் 55 ஆயிரத்தை தாண்டியது. அதன் பிறகு 17ம் தேதி தங்கம் விலை சவரன் ரூ.54,920, 18ம் தேதி சவரன் ரூ.54800, 19ம் தேதி சவரன் ரூ.54,600 என்றும் குறைந்தது. தொடர்ந்து 3 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.440 வரை குறைந்திருந்தது. இந்த விலை குறைவும் தொடர்ந்து நீடிக்கவில்லை. கடந்த 20ம் தேதி மீண்டும் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.60 உயர்ந்து ஒரு கிராம் ரூ.6,885க்கும், சவரனுக்கு ரூ.480 உயர்ந்து ஒரு சவரன் ரூ.55,080 என்றும் விற்பனையானது.

அதே போல் 21ம் தேதி தங்கம் விலை கிடுகிடுவென உயர்வை சந்தித்தது. அதாவது தங்கம் விலை கிராமுக்கு ரூ.75 உயர்ந்து ஒரு கிராம் ரூ.6960க்கும், சவரனுக்கு ரூ.600 உயர்ந்து ஒரு சவரன் ரூ.55,680க்கும் விற்கப்பட்டது. இந்த நிலையில் இன்று தங்கம் விலை, சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.55,840-க்கு விற்பனை ஆகிறது. ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ஒரு கிராம் ரூ.6980-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதற்கு முன்னர் ஜூலை மாதம் 17ம் தேதி ஒரு சவரன் தங்கம் ரூ.55,360க்கு விற்பனையானது. இது தான் தங்கம் விலை வரலாற்றில் அதிக பட்ச விலையாகும். இந்த விலையை இன்று தங்கம் விலை உயர்வு முறியடித்து, சவரன் ரூ.55,840 என்ற புதிய உச்சத்தை தொட்டது. இதனிடையே சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி, விலை மாற்றமின்றி ரூ.98-க்கு விற்பனை ஆகிறது.இது குறித்து தங்கம் நகை வியாபாரிகள் கூறியதாவது: அமெரிக்க பெடரல் வங்கி வட்டி விகிதத்தை 0.50 சதவீதம் குறைத்துள்ளது. இதே போல ஐரோப்பிய மத்திய வங்கியும் அதன் வட்டியை குறைப்பதாக அறிவித்துள்ளது. இதுபோன்ற சர்வதேச காரணங்களால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அத்துடன், இந்தியாவிலும் வரும் நாட்கள் நவராத்திரி, தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலம் வருகிறது. இது போன்ற காரணங்களும் தங்கம் விலை அதிகரிப்புக்கு காரணமாக கூறப்படுகிறது.

இத்தகைய சூழலில் வரும் நாட்களிலும் தங்கத்தின் விலை மேலும் உயரவே வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர். தங்கம் ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் முக்கிய முதலீடுகளில் ஒன்றாக இருந்து வருவது தான் முக்கிய காரணம். மக்கள் சம்பளத்தில் மீதியிருக்கும் பணத்தை சிறுக, சிறுக சேமித்து பிற்காலத்தில் பயன்படும் என்பதற்காக நகையாக வாங்குவர். அதே நேரத்தில் தீபாவளி உள்ளிட்ட பண்டிகை நாட்களில் வழங்கப்படும் போனஸை பயன்படுத்தி தங்கம் நகை வாங்குவதை வழக்கமாக ெகாண்டுள்ளனர். இந்த நேரத்தில் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து வருவது. போனஸ் உள்ளிட்ட பணத்தை வைத்து நகை வாங்க முடிவு செய்தவர்களுக்கு சற்று கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

குட்கா முறைகேடு வழக்கில் குற்றப்பத்திரிகை தயாராக உள்ளது என சிபிஐ தரப்பில் நீதிமன்றத்தில் தகவல்

கொடைக்கானலில் நிலவெடிப்பு ஏற்பட்ட இடத்தில் அதிகாரிகள் ஆய்வு

மகாராஷ்டிரா மாநிலம் அமராவதி அருகே தனியார் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: 4 பேர் உயிரிழப்பு