தங்கம் விலை தொடர்ந்து சரிவு 1 சவரன் ரூ.51,000க்கு விற்பனை

சென்னை: தங்கம் விலை தொடர்ந்து சரிந்து ஒரு சவரன் ரூ.51 ஆயிரத்துக்குள் வந்துள்ளது. இது நகை வாங்குவோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தங்கம் விலை கடந்த மாதம் 17ம் தேதி அதிரடியாக உயர்ந்து ஒரு பவுன் ரூ.55,360க்கு விற்கப்பட்டது. இது தங்கம் விலை வரலாற்றில் அதிகப்பட்ச விலையாகும். இதன்பிறகு தங்கம் விலை குறைவதும் ஏறுவதுமாக இருந்து வந்தது. இந்த நிலையில் கடந்த 23ம்தேதி தாக்கல் செய்யப்பட்ட ஒன்றிய பட்ஜெட்டில் தங்கம் இறக்குமதிக்கான சுங்கவரி 15 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக குறைக்கப்பட்டது.

இதனால் தங்கம் விலை கிடு, கிடுவென குறைய தொடங்கியது. 23ம்தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,200 குறைந்து ஒரு சவரன் ரூ.52,400க்கு விற்கப்பட்டது. 24ம்தேதி சவரனுக்கு ரூ.480 குறைந்து ஒரு சவரன் ரூ.51,920, 25ம் தேதி சவரனுக்கு ரூ.480 குறைந்து ஒரு சவரன் ரூ.51,440, 26ம்தேதி சவரனுக்கு ரூ.120 குறைந்து ஒரு சவரன் ரூ.51,320 என்றும் குறைந்து வந்தது. நகை விற்பனையும் அதிகரித்தது.
இந்தநிலையில் கடந்த 27ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 அதிகரித்து ஒரு சவரன் ரூ.51,720க்கு விற்கப்பட்டது.

28ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் மார்க்கெட்டுக்கு விடுமுறை ஆகும். இதனால் தங்கம் விலையில் எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை. தொடர்ந்து நேற்று முன்தினம் தங்கம் விலை குறைந்து காணப்பட்டது. அதாவது, கடந்த சனிக்கிழமை ஏறிய வேகத்திலே தங்கம் விலை குறைந்தது.

கிராமுக்கு ரூ.50 குறைந்து ஒரு கிராம் ரூ.6,415க்கும், சவரனுக்கு ரூ.400 குறைந்து ஒரு சவரன் ரூ.51,320க்கு விற்கப்பட்டது. இந்த நிலையில் நேற்றும் தங்கம் விலை மேலும் குறைந்தது. நேற்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.30 குறைந்து ஒரு கிராம் ரூ.6,385க்கும் சவரனுக்கு ரூ.240 குறைந்து ஒரு சவரன் ரூ.51,080க்கு விற்கப்பட்டது. அதே நேரத்தில் நீண்ட மாதங்களுக்கு பிறகு தங்கம் விலை சவரன் 51 ஆயிரத்துக்குள் வந்துள்ளது நகை வாங்குவோரை மகிழ்ச்சியடைய செய்துள்ளது.

Related posts

லெபனானில் பேஜர்களை தொடர்ந்து வாக்கி டாக்கிகள் வெடித்ததில் 20 பேர் உயிரிழப்பு

உத்திரப்பிரதேசத்தில் உயர்அழுத்த மின் கம்பி அறுந்து 20 பேர் காயம்

திருச்சி என்ஐடி கல்லூரியில் படிக்கும் மத்திய பிரதேச மாநில மாணவி காணாமல் போனதாக புகார்