தங்க வாய்ப்பு தகர்ந்தது

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் 33வது ஒலிம்பிக் போட்டி கடந்த ஜூலை 26ம் தேதி துவங்கியது. உலக விளையாட்டுகளின் திருவிழாவாக போற்றப்படும் ஒலிம்பிக்கில் இம்முறை 205 நாடுகளில் இருந்து 10,500 வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்திய அணி சார்பில் நீரஜ் சோப்ரா, வினேஷ் போகத், மனு பாகர், தீபிகாகுமாரி, லக்சயா சென், போபண்ணா உட்பட 117 பேர் கலந்து கொண்டனர்.ஒலிம்பிக்கில் இம்முறை மல்யுத்தம், துப்பாக்கி சுடுதல், பேட்மின்டன் போன்ற பிரிவுகளில் தங்கம் அல்லது வெள்ளிப்பதக்கங்களை நமது வீரர்கள் வெல்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. துப்பாக்கி சுடுதல் பிரிவில் வீராங்கனை மனு பாகர் வெண்கலம் வென்று, இந்தியாவின் பதக்க வாசலை திறந்து வைத்தார். இந்தியா இதுவரை 3 வெண்கல பதக்கங்களை வென்றுள்ளது. ஒருவராவது தங்கம் வெல்ல மாட்டாரா என்பது பல கோடி இந்திய மக்களின் கனவாக இருந்து வந்தது. இந்த சூழலில், இந்தியா தங்கம் வெல்வதற்கான பிரகாசமான வாய்ப்பை, மல்யுத்த போட்டியில் பெண்களுக்கான 50 கிலோ எடைப்பிரிவில் பங்கேற்ற வினேஷ் போகத் உறுதி செய்தார்.

அரையிறுதிப் போட்டியில் இவர், கியூபாவை சேர்ந்த நம்பர் ஒன் வீராங்கனையான யூஸ்னிலிஸ் குஸ்மேனை வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றார். நம்பர் ஒன் வீராங்கனையை வீழ்த்தியதன் மூலம் தங்கத்தை தட்டிச் செல்வார்; தவறினாலும் வெள்ளி உறுதி என்ற நிலை இருந்ததால், வினேஷ் போகத்துக்கு இந்திய ரசிகர்கள் பாராட்டுகளை தெரிவித்தவண்ணம் இருந்தனர். அதேநேரம் இது விளையாட்டு போராட்டத்துக்கான வெற்றியாக மட்டும் மக்கள் பார்க்கவில்லை. காரணம், கடந்தாண்டு தங்களை பாலியல்ரீதியாக துன்புறுத்தியதாக இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும், அப்போதைய பாஜ எம்பியுமான பிரிஜ் பூஷண் சரண்சிங் மீது, இந்திய மல்யுத்த வீராங்கனைகள் வினேஷ் போகத், சாக்‌ஷி மாலிக் உள்ளிட்டோர் புகார் தெரிவித்தனர். ஒன்றிய பாஜ அரசு இந்த விவகாரத்தை மூடி மறைக்க முயல்வதாக கூறி, வீராங்கனைகள் வீதிக்கு வந்து போராட்டம் நடத்தினர். இந்த விவகாரம் நாடெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த ரணத்துக்கு மருந்தாகவும், ஒன்றிய அரசின் போதிய ஒத்துழைப்பு இல்லாத சூழலிலும், ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு மிகப்பெரிய பெருமையை தேடித்தந்தார் வினேஷ் போகத். ஆனால், அந்த மகிழ்ச்சி நீண்ட நேரம் நீடிக்காததுதான் அவரது துரதிருஷ்டம்.

நேற்றைய இறுதிப்போட்டிக்கு முன்னதாக அவரது எடை பரிசோதிக்கப்பட்டபோது, 50 கிலோ எடையுடன் 100 கிராம் கூடுதலாக இருந்ததாக கூறி, அவரை தகுதி நீக்கம் செய்வதாக சர்வதேச ஒலிம்பிக் கூட்டமைப்பு அறிவித்து, இந்திய மக்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. முன்னதாக, அரையிறுதிப் போட்டி முடிந்த பின், எடையை வினேஷ் போகத் பரிசோதித்துள்ளார். அப்போது எடை கூடுதலாக இருந்துள்ளது. இதனால் விடிய, விடிய கடும் உடற்பயிற்சிகளை மேற்கொண்டதாகவும், அப்படியும் எடை அதிகரித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. லீக் முதல் அரையிறுதிக்கு முன் வரை 50 கிலோக்குள் இருந்த எடை திடீரென அதிகரித்தது எப்படி? இந்த விஷயத்தில் ஏதேனும் அரசியல் ரீதியாகவோ அல்லது வேறு ஏதாவது சதி நடந்திருக்கலாமோ என்ற சந்தேகமும் எழாமல் இல்லை. இந்திய வீரர்கள், வீராங்கனைகள் வரலாற்று வெற்றியை நோக்கிச் செல்லும்போதெல்லாம் சர்ச்சை எழுவது வழக்கமாகவே உள்ளது. அன்று பாலியல்ரீதியாக பாதிக்கப்பட்ட வீராங்கனைகளை, இன்று மன உளைச்சலில் ஆளாக்கியிருக்கிறது சர்வதேச ஒலிம்பிக் கூட்டமைப்பு. இதற்கு இந்தியா உட்பட பல்வேறு நாடுகளின் விளையாட்டு வீரர்கள், ரசிகர்கள் தங்களது கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.

Related posts

முடிவுக்கு வருகிறது போராட்டம் நாளை பணிக்கு திரும்பும் கொல்கத்தா டாக்டர்கள்

இந்தியாவிலிருந்து வெடிமருந்துகள் உக்ரைன் செல்கிறதா? ஒன்றிய அரசு மறுப்பு 

நந்தனம் ஓட்டலில் உள்ள ஸ்பாவில் பாலியல் தொழில் நடத்திய பெண் கைது: 4 பட்டதாரி இளம்பெண்கள் மீட்பு