எந்த அளவினால் அளக்கிறாய்?

ஒரு விவசாயி தினமும் வீட்டில் இருந்து 500 கிராம் வெண்ணெயை தயார் செய்து, ஒரு பேக்கரி கடையில் கொடுத்து வந்தார். கடைக்காரரும் அவ்வப்போது அதற்குரிய பணத்தை கொடுப்பார். ஒருநாள் கடைக்காரருக்கு விவசாயி கொடுக்கும் வெண்ணெயின் அளவின் மீது சந்தேகம் வந்தது. அதை எடுத்து பார்த்தபோது, அவர் சொன்ன அளவைவிட குறைவாகவே இருந்தது.கோபங்கொண்ட கடைக்காரர், தான் வெகு நாட்களாக ஏமாற்றப்பட்டு வந்ததை அறிந்து, உள்ளூர் நீதிபதியிடம் புகார் செய்தார். வழக்கை விசாரித்த நீதிபதி, விவசாயிடம், ‘‘நீ அளப்பதற்கு ஏதேனும் எடை கருவிகளை உபயோகிக்கிறாயா?’’ என்று கேட்டார். அதற்கு விவசாயி, ‘‘ஐயா, என்னிடம் எடைக் கருவிகள் இல்லை. ஆனால், நான் ஒரு வழிமுறையை கையாளுகிறேன்’’ என்றார்.

‘‘அது என்ன?’’ என்று நீதிபதி கேட்க, விவசாயி தொடர்ந்தார், ‘‘ஐயா நான் வெண்ணெயை அவர்கள் கடையில் கொடுக்கும் நாளிலிருந்து அவர்கள் கடையில் பிரட் வாங்குவதை வழக்கமாக கொண்டுள்ளேன். அதில் பிரட்டின் அளவு 500 கிராம் என்று எழுதி இருந்ததால், அந்த அளவுக்கு நிகராகவே வெண்ணெயை கொடுத்து வந்தேன். ஆகவே, இந்த தவறை அறிந்துச் செய்யவில்லை’’ என்றான். விவசாயிடம் தவறு இல்லை என்று அறிந்த நீதிபதி, பேக்கரி கடைக்காரரை எச்சரித்து அனுப்பினார்.

அன்புக்குரியவர்களே, நாம் எந்த அளவினால் அளக்கிறோமோ, அதே அளவினால்தான் நமக்கும் அளக்கப்படும். மேலும், பிறரை ஏமாற்ற வேண்டும் என ஒருவன் நினைக்கும்போது, அவன் தன்னையே ஏமாற்றிக் கொள்கிறான் என்பதையும் இச்சம்பவம் நமக்கு எடுத்துரைக்கிறது.இந்த உலகில் ‘‘மனிதன் எதை விதைக்கிறானோ, அதையே அறுப்பான் (கலா.6:7) என்றும் ‘‘சிறுக விதைக்கிறவன் சிறுக அறுப்பான், பெருக விதைக்கிறவன் பெருக அறுப்பான்’’ (2 கொரி.9.6) என்றும் திருமறை கூறுகிறது. உப்பு சாப்பிட்டவன் தண்ணீர் குடித்துதானே ஆகவேண்டும் என்பதற்கேற்ப அமைந்துள்ளது, மனித வாழ்க்கை. சொற்ப பணம் தேடி, அற்ப மனம் ஓடி, ஆயுள் வரை வாடி, அடங்குகிறது நாடி என்பது போன்ற வாழ்க்கை வாழ்வதால் என்ன பயன்? ஆகவே நன்மையை விதைத்து, நன்மையை அறுப்போம்.
– அருள்முனைவர்.
பெவிஸ்டன்.

Related posts

திருச்செந்தூர் முருகன் அருளை பெற வழிபடும் முறை..!!

திரு இந்தளூர் பரிமள ரங்கநாதன்

சிதைவிலும் அழகு