இறைவன் நம்மை நினைக்க என்ன வழி?

இஸ்லாமிய வாழ்வியல்

இறைவன் நம்மை நினைக்க வேண்டுமானால் அதற்கு ஒரே வழி – நாம் இறைவனை அதிகம் நினைப்பதுதான். வேதம் கூறுகிறது:

“இறைநம்பிக்கை கொண்டோரே.. நீங்கள் இறைவனை அதிகமாக நினைவு
கூருங்கள். காலையிலும் மாலையிலும் அவனைத் துதியுங்கள்.” (குர்ஆன் 33:41-42)

இறைவனை நினைவுகூர்வதன் சிறப்புகள் பற்றி ஏராளமான நபிமொழிகள் உள்ளன.

ஒருமுறை இறைவனின் தூதர்(ஸல்) தம் தோழர்களிடம், “நீங்கள் செய்யும் நல்லறங்களிலேயே சிறந்த ஒன்று உள்ளது. அது உங்கள் இறைவனிடம் மிகவும் தூய்மையானது; உங்கள் தகுதிகளை உயர்த்தக் கூடியது; தங்கத்தையும் வெள்ளியையும் (தானமாகக்) கொடுப்பதைவிடவும் சிறந்தது; அறப்போரில் (தர்ம யுத்தத்தில்) கலந்துகொள்வதைவிடவும் சிறந்தது” என்று கூறினார்கள்.

நபித்தோழர்கள் ஆர்வத்துடன், “அத் தகைய நல்லறச் செயல் என்ன இறைத்தூதர் அவர்களே?” என்று கேட்டனர். அப்போது நபியவர்கள், “ஆற்றலும் மகிமையும் மிக்க இறைவனை நினைவு கூர்வதுதான்” என்று பதில் அளித்தார்கள். ஒருவர் இறைத்தூதரிடம் வந்து, “நபியவர்களே, நான் எப்போதும் தவறாமல் கடைப் பிடிக்கும் அளவுக்கு எனக்கு ஒரு நற்செயலைக் கற்றுத் தாருங்கள்” என்று கேட்டார். அதற்கு நபியவர்கள், “உயர்ந்தவனாகிய இறைவனின் நினைவிலேயே எப்போதும் உன் நாவு நனைந்திருக்கட்டும்” என்று கூறினார்கள்.

“நீங்கள் நிற்கும்போதும், உட்காரும்போதும், படுக்கும்போதும் இறைவனை நினைவுகூருங்கள்.” (குர்ஆன் 4:103) இதே போல் இன்னொரு வசனம், “நீங்கள் காலை நேரத்தை அடையும்போதும், மாலை நேரத்தை அடையும்போதும், இறைவனைத் துதியுங்கள்” என்கிறது.(30:17) ஒரு நாளின் எல்லா நேரங்களிலும் இறைவனைத் துதிக்கலாம் என்றாலும், காலையிலும், மாலையிலும் அவனைத் துதிப்பது மிகவும் சிறப்பானதாகும். காலையில் பணிகளைத் தொடங்குவதற்கு முன்பாக இறைவனை நினைவுகூரும்போது அன்றைய செயல்களை இறைவன் எளிதாக்கித் தருவான்.

அதே போல், மாலையில் இறைவனை நினைவுகூரும்போது காலை முதல் மாலை வரை நம்மையும் மீறி ஏதேனும் நம் பணிகளில் தவறுகள் ஏற்பட்டிருந்தால் உடனுக்குடன் இறைவனிடம் மன்னிப்பு கேட்கவும் ஏதுவாக அமையும். இறைவன் கூறியதாக நபியவர்கள் அறிவித்துள்ளார்கள்:

“யார் என்னைத் தம் உள்ளத்தில் நினைவுகூர்கிறாரோ அவரை நானும் என் உள்ளத்தில் நினைவுகூர்கிறேன். என்னை அவர் ஓர் அவையில் நினைவுகூர்ந்தால் அதைவிடச் சிறந்த உயர்ந்த அவையில் அவரை நான் நினைவுகூர்வேன்.”

தூய மனத்துடன் அவனுடைய திருப்பெயர்களை உச்சரித்து அவனைத் துதிக்கும்போது அவனும் நம்மை நினைத்துப் பார்க்கிறான் என்பது எத்துணைப் பெரிய செய்தி. இறைவனுடைய சிறப்புக் கவனத்தில் – அவடைய தூய அடியார்களின் பட்டியலில் நம்முடைய பெயரும் இருக்குமேயானால் அதைவிடச் சிறந்த நற்பேறு வேறு என்ன இருக்க முடியும்?

– சிராஜுல் ஹஸன்

இந்த வாரச் சிந்தனை

“என்னை நீங்கள் நினைவுகூருங்கள். நானும் உங்களை நினைவு கூர்வேன். எனக்கு நன்றி செலுத்துங்கள். நன்றி கொல்லாதீர்கள்.” (குர்ஆன் 2:152)

Related posts

ஏழ்கடலை அழைத்த காஞ்சனா மாலை

சுகமான வாழ்விற்கு சுஞ்சனகட்டே கோதண்டராமர்

அற்புதம் தருவாள் அகிலாண்டேஸ்வரி