கோபி அருகே கள்ள நோட்டுக்களை வார சந்தைகளில் புழக்கத்தில் விட்ட தம்பதி உள்பட 4 பேர் அதிரடி கைது

*கலர் ஜெராக்ஸ் மெஷின், 100,200 மற்றும் 500 ரூபாய் கள்ள நோட்டுகள் பறிமுதல்

கோபி : ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள சிறுவலூரை சேர்ந்தவர் சசிகுமார் மனைவி ஸ்டெல்லா(31). காய்கறி வியாபாரி. நேற்று முன்தினம் ஸ்டெல்லா, திங்களூர் சந்தையில் காய்கறி விற்று கொண்டிருந்த போது, இரவு நேரத்தில் காரில் வந்த 4 பேர் ரூ.500ஐ கொடுத்து ரூ.100க்கு காய்கறி வாங்கினர். தொடர்ந்து அந்த நால்வரும் அதே சந்தையில் பழம் வியாபாரியான ராணியிடமும் ரூ.500ஐ கொடுத்து ரூ.100க்கு பழங்கள் வாங்கினர்.

இதே போல சந்தையில் மற்றொரு கடையிலும் ரூ.500 கொடுத்து காய்கறிகளை வாங்கி சில்லறை பெற்றனர். இவர்களின் நடத்தையில் சந்தேகமடைந்த வியாபாரிகள், அவர்களை பிடிக்க முயன்ற போது நான்கு பேரும் காரில் ஏறி தப்பினர்.இதனால் அவர்கள் கொடுத்த 500 ரூபாய் நோட்டுகளை பரிசோதிக்கையில் அவை கள்ள நோட்டுகள் என்பது தெரிய வந்தது.

இதுகுறித்து காய்கறி வியாபாரி ஸ்டெல்லா அளித்த புகாரின் திங்களூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். இந்நிலையில் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போலீசார் சந்தேகமளிக்கும் வகையில் வந்த கார் ஒன்றை நிறுத்தி சோதனை செய்தனர்.அதில் காரில் இருந்தவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசவே, போலீஸ் விசாரணையில், சந்தையில் கள்ளநோட்டுகளை மாற்றிய கும்பல் என்பது தெரிய வந்தது. அதைத்தொடர்ந்து காரில் இருந்த சத்தியமங்கலம் இக்கரை தத்தப்பள்ளியை சேர்ந்த ஜெயராஜ்(40), அவரது தந்தை ஜெயபால்(70),தாயார் சரசு(65), மேட்டுப்பாளையம் இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த சிலுவை தாஸ் மனைவி மேரி மில்டிலா(42) ஆகியோரை கைது செய்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில் ஒரு வருடமாக வீட்டிலேயே கலர் ஜெராக்ஸ் மெசின் மூலமாக கள்ளநோட்டுகளை தயார் செய்து சந்தைகளில் மாற்றியது தெரிய வந்தது.அவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் இரண்டு கலர் ஜெராக்ஸ் மெசின், 2 லட்சத்து 85 ஆயிரம் மதிப்பில் இருந்த 100, 200 மற்றும் 500 ரூபாய் கள்ள நோட்டுகளை பறிமுதல் செய்தனர்.

மேரி மில்டிலா கடந்த 4 வருடங்களுக்கு முன் கணவரை பிரிந்து ஜெயராஜூடன் வாழ்ந்து வரும் நிலையில், நான்கு பேரும் ஒரு வருட காலமாக கள்ள நோட்டுகளை தயார் செய்து, இரவு நேரங்களில் சந்தைக்கு சென்று பொருட்களை வாங்குவது போன்று கள்ளநோட்டுகளை மாற்றி உள்ளனர். ஒரு வருட காலமாக சத்தியமங்கலம், புளியம்பட்டி, மேட்டுப்பாளையம், சிறுமுகை, தாராபுரம், காங்கேயம், சிறுவலூர், கோபி, திங்களூர், பெருந்துறை என பல்வேறு சந்தைகளில் பல லட்சம் ரூபாய் கள்ள நோட்டுகளை மாற்றி இருப்பது தெரிய வந்தது.அதைத்தொடர்ந்து கைது செய்யப்பட்ட நான்கு பேரையும் பெருந்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related posts

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார் இங்கிலாந்தின் மொயின் அலி

சிக்கிமில் ராணுவ வாகனம் விபத்து: ராணுவ மரியாதையுடன் இறுதிச் சடங்கு

வங்கக்கடலில் நிலவிவந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்