ரஞ்சி கோப்பை சாய் சுழலில் சுருண்டது கோவா

கோவா: தமிழ்நாடு அணியுடனான ரஞ்சி கோப்பை எலைட் சி பிரிவு லீக் ஆட்டத்தில், கோவா முதல் இன்னிங்சில் 241 ரன்னுக்கு சுருண்டது. போர்வோரிம், கோவா கிரிக்கெட் சங்க அகடமி மைதானத்தில் நேற்று தொடங்கிய இப்போட்டியில், டாஸ் வென்ற கோவா பேட்டிங்கை தேர்வு செய்தது. இஷான் கடேகர் 0, மந்தன் குட்கர் 4 ரன்னில் அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால் கோவா தொடக்கத்திலேயே சரிவைக் கண்டது. எனினும், தொடக்க வீரர் சுயாஷ் பிரபுதேசாய் – சித்தார்த் கிருஷ்ணமூர்த்தி ஜோடி 3வது விக்கெட்டுக்கு பொறுப்புடன் விளையாடி 151 ரன் சேர்த்தது.

சித்தார்த் 69 ரன், சுயாஷ் 104 ரன் (192 பந்து, 17 பவுண்டரி) விளாசி ஆட்டமிழந்தனர். மற்றவர்கள் தமிழ்நாட்டு வீரர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் குறைந்த ரன்னில் வெளியேற… கோவா முதல் இன்னிங்சில் 241 ரன்னுக்கு (75.5 ஓவர்) சுருண்டது. தமிழ்நாடு தரப்பில் கேப்டன் சாய் கிஷோர் 4, அஜித்ராம் 3, சந்தீப் வாரியர் 2 விக்கெட் வீழ்த்தினர். முதல் நாள் ஆட்ட நேர முடிவில் தமிழ்நாடு முதல் இன்னிங்சில் விக்கெட் இழப்பின்றி 20 ரன் எடுத்துள்ளது (7 ஓவர்). சுரேஷ் லோகேஷ்வர் 15, நாராயண் ஜெகதீசன் 3 ரன்னுடன் களத்தில் உள்ளனர். இன்று 2வது நாள் ஆட்டம் நடைபெறுகிறது.

 

Related posts

சர்ச்சை சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு

தருமபுரி மாவட்டத்தில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்பட உள்ளது: தமிழ்நாடு அரசு தகவல்

ராமநாதபுரம் அருகே அரசு பேருந்து மீது கார் மோதி 5 பேர் உயிரிழப்பு