ஆடு வளர்ப்பில் அசத்தும் ஆர்க்கிடெக்ட்!

விவசாயத் தொழில் என்பது கத்தி மேல் நடப்பது போன்றது. காலநிலையோ, மற்ற காரணிகளோ கைகொடுக்கா விட்டால் இழப்பை சந்திக்க வேண்டியிருக்கும். இதனால் அதைப் பார்த்துப் பார்த்து செய்ய வேண்டியிருக்கிறது. அதேவேளையில் கால்நடை வளர்ப்பில் ஈடுபடும் பலர் தங்களின் வருமானத்தை உறுதி செய்துவிடுகிறார்கள். அதுவும் ஆடு வளர்ப்பில் ஈடுபடுகிறவர்கள் இன்று நிச்சயம் நல்ல நிலையில்தான் இருக்கிறார்கள். ஆடு வளர்ப்பை திட்டுமிட்டு செய்தால் வெற்றி நிச்சயம்தான் என பலர் நிரூபித்து வருகிறார்கள். அந்த வரிசையில் மயிலாடுதுறை மாவட்டம் உக்கடை கிராமத்தைச் சேர்ந்த கனிமொழி என்பவரும், அவரது கணவர் சிவக்குமாரும் ஆடு வளர்ப்பு மூலம் தங்களுக்கு ஒரு அடையாளத்தை உருவாக்கி இருக்கிறார்கள். இதற்கு தனது உழைப்போடு, அனுபவ அறிவையும் பகிர்ந்து வருகிறார் கனிமொழியின் தந்தை ஆசைத்தம்பி. இவர்களைச் சந்திப்பதற்காக மயிலாடுதுறைக்குப் பயணமானோம். ஆட்டுக் கொட்டகையில் சில பணிகளை மேற்கொண்டிருந்த கனிமொழியும், அவரது தந்தை ஆசைத்தம்பியும் நம்மை மகிழ்ச்சியோடு வரவேற்று பேசத்தொடங்கினர்.

“நான் டிப்ளமோ ஆர்கிடெக்ச்சர் படித்திருக்கிறேன். எனது கணவர் சிவக்குமார் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்திருக்கிறார். தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்த நாங்கள் கடந்த இரண்டரை வருடமாக எங்களுக்கு சொந்தமான 4500 சதுரஅடி நிலத்தில் கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டு வருகிறோம். அப்பா ஆசைத்தம்பியின் அறிவுரையோடுதான் ஆடு வளர்ப்பில் ஈடுபடத் துவங்கினோம். தற்போது எங்களிடம் பெட்டை ஆடு, குட்டி ஆடு, கடுவன் ஆடு என்று கிட்டதட்ட 350 ஆடுகள் வரை இருக்கு. இதில் 155 தலச்சேரி தாய் ஆடுகள், 10 தலச்சேரி இனப்பெருக்க கிடா ஆடுகள் இருக்கு. போயரில் 3 பெட்டை ஆடுகளும், போயரில் இனப்பெருக்க கிடா ஆடுகள் 2, செம்மறியில் 16 ஆடுகளும் இருக்கு. அதேபோல் உஸ்மனாபாரியில் 150 ஆடுகளும், நாட்டு ஆட்டு ரகத்தில் 15 ஆடுகளும் வைத்திருக்கிறோம். மேலும் சிறிய பால் குடிக்கும் கிடா மற்றும் பெட்டை ஆட்டுக்குட்டிகள் என 60க்கும் மேற்பட்ட ஆடுகள் வைத்திருக்கிறோம்.

ஆடுகள் அனைத்தையும் வெளியூர்களில் இருந்து வாங்காமல் அருகில் இருப்பவர்களிடம் இருந்தே வாங்கி வளர்க்கத் துவங்கினோம். முதன்முதலில் 60 பெட்டை ஆடுகளும், 3 கிடா ஆடுகளும் மட்டுமே வாங்கி வந்து வளர்க்கத் துவங்கினோம். இந்த ஆடுகளை வாங்குவதற்கே கிட்டதட்ட 7 லட்சத்திற்கும் மேல் முதலீடு செய்தோம். இந்தத் தாய் ஆடுகள் மூலம்தான் இன்றைக்கு 400 ஆடுகள் பெருகியிருக்கின்றன. ஆட்டுப் பண்ணையில் கவனிக்க வேண்டிய முக்கியமான ஒன்று ஆடுகளுக்கான இருப்பிடம். நாம் வாழ்வதற்கு எப்படி ஒரு வீட்டைக் கட்டி சுத்தமாக வைத்திருக்கிறோமோ, அதேபோலத்தான் ஆடுகள் தங்குவதற்கும் ஒரு ஷெட் அமைத்து பாதுகாப்பாக பார்த்துக் கொள்ள வேண்டும். ஆடுகளுக்கான பட்டி சுத்தமாக இல்லாவிட்டால் ஆடுகளுக்கு பல நோய்கள் வரக்கூடும். ஆடுகளுக்கு ரோமங்கள் அதிகமாக இருக்கும். அதனால் அவற்றைக் கீழே தரையில் வளர்த்தால் ஒரு ஆட்டின் கழிவுகள் மற்ற ஆடுகளின் ரோமங்கள் மூலம் மேலேயே ஒட்டிக்கொள்ளும். இதனைக் கருத்தில் கொண்டு பரண் அமைத்து, அதன்மேல் ஆடுகளை வளர்க்கலாம் என்று முடிவு செய்தோம்.

இதற்காக இரண்டு கொட்டகைகளை அமைத்தோம். ஒரு கொட்டைகையில் 60 அடி நீளம், 40 அடி அகலம் கொண்ட ஒரு பரணும், மற்றொரு கொட்டகையில் 30 அடி நீளம், 40 அடி அகலத்திற்கு ஒரு பரணும் அமைத்தோம். ஒவ்வொரு பரணையும் நிலத்தில் இருந்து 13 அடி மேலே இருப்பது போல அமைத்து இருக்கிறோம். இதன்மூலம் ஆடுகளின் கழிவுகள் பரண் மேலே தேங்காமல் கீழே கொட்டி விடும். நானும், அப்பா ஆசைத்தம்பி, இரண்டு வேலையாட்கள் என 4 பேரும் சேர்ந்து காலை, மாலை என இரு வேளை பண்ணையை சுத்தம் செய்கிறோம். இந்த முறையை நாங்கள் கடைப்பிடிப்பதன் மூலம் ஆடுகளை நோய்களில் இருந்து சிறப்பான முறையில் பாதுகாக்கிறோம். வருடம் ஒருமுறை ஆடுகளுக்கு ஆட்டுக் கொல்லி நோய் தடுப்பூசியை (பி.பி.ஆர்) அரசு கால்நடை மருத்துவர் மூலம் போடுகிறோம். இந்தத் தடுப்பூசியை மழைக்காலம் தொடங்குவதற்கு முன் போட வேண்டும். அதேபோல் சீசனை கவனித்து ஆடுகளுக்குத் தேவையான தீவன வகைகளை மாற்றிக்கொண்டே இருக்க வேண்டும். ஆடுகளுக்கு நோய்கள் எதுவும் தாக்காமல் இருக்க இடி-டிடி என்ற தடுப்பூசியும் மருத்துவர்களின் ஆலோசனைப்படி போட்டு வருகிறோம். ஒவ்வொரு 3 மாதத்திற்கு ஒரு முறை குடல்புழு நீக்க மருந்தும் ஆடுகளுக்கு வழங்கி வருகிறோம்” எனக்கூறிய கனிமொழியைத் தொடர்ந்து, நம்மிடம் பேசத்துவங்கினார் அவரது தந்தை ஆசைத்தம்பி.

“ஆடுகளுக்குத் தேவையான தீவனப் பயிர்களை எங்களுக்கு சொந்தமான நிலத்திலேயே பயிரிட்டு இருக்கிறோம். வேலி மசால், முயல் மசால், குதிரை மசால் உள்ளிட்ட பசுந்தீவனங்களைக் கொடுக்கிறோம். இந்தப் பசுந்தீவனங்களை இயந்திரம் மூலம் அரைத்து ஆடுகளுக்கு கொடுக்கிறோம். பசுந்தீவனத்தை ஆடுகளுக்கு கொடுப்பது எந்த அளவிற்கு முக்கியமோ, அதேபோல அடர்தீவனம் கொடுப்பதும் முக்கியமான ஒன்று. அந்த வகையில் ஆடுகளுக்கு அடர் தீவனமாக நவதானியங்களை அரைத்துத் தருகிறோம். வயிற்றுப்போக்கு, வயிறு உப்புசம் போன்ற பிரச்சனைகள் இருக்கும் குட்டி ஆடுகளுக்கு 4 மில்லி லிட்டர் தண்ணீரில் 1 மில்லி லிட்டர் சோடா உப்பு கலந்து கொடுக்கிறோம். பெரிய ஆடுகளுக்கு இதே மருந்தை இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை கொடுக்கிறோம்.

பொதுவாகவே ஆடுகள் 6 மாதத்தில் இனப்பெருக்கத்திற்கு தயாராகிவிடும். ஆனால் நாங்கள் ஆடுகளை 8 மாதத்தில்தான் இனப்பெருக்கத்திற்கு விடுவோம். கிடாக்களை அமாவாசை மற்றும் பவுர்ணமியில் பெட்டை ஆடுகளுடன் இனப்பெருக்கத்திற்காக விடுவோம். 8வது மாதத்தில் இனப்பெருக்கத்திற்கு பெட்டை ஆடுகளை கிடாவுடன் விடும்போது பிறக்கும் குட்டிகள் நல்ல ஊட்டமாக பிறக்கும். இனப்பெருக்கத்திற்கு விட்ட 6வது மாதத்தில் பெட்டை ஆடுகள் குட்டிகளை ஈன்றெடுக்கும். பிறக்கும் குட்டிகளில் கிடாவை மட்டுமே விற்பனை செய்வோம். பெட்டைக் குட்டிகளை விற்பனை செய்வது கிடையாது. பண்ணையின் உற்பத்திக்காக நாங்களே வைத்துக்கொள்வோம். கிடா ஆடுகளையும், 20 கிலோ வந்த பிறகுதான் விற்பனை செய்வோம். ஒரு ஆடு குட்டி போட்ட மூன்றாவது மாதத்திலேயே அடுத்த ஈற்றுக்குத் தயாராகிவிடும்.

நாங்கள் இரண்டரை வருடத்தில் 250 கிடாக்கள் வரை விற்பனை செய்திருக்கிறோம். நாங்கள் ஆடுகளைப் பெரும்பாலும் உயிருடன் விற்பனை செய்வதால் ஒரு கிலோ ரூ.550 லிருந்து ரூ.850 வரை ரகத்தைப் பொருத்து விற்பனை செய்கிறோம். சராசரியாக ஆண்டு ஒன்றுக்கு 125 கிடாய்கள் வரை விற்பனை ஆகும். இதனை ஒரு கிலோ ரூ.560க்கு விற்பனை செய்கிறோம். இதன்மூலம் வருடத்திற்கு எங்களுக்கு ரூ.14 லட்சம் வருமானமாக கிடைக்கிறது. இதில் அடர்தீவனம் வாங்கும் பணம் ரூ.5 லட்சம் போக வருடத்திற்கு எங்களுக்கு ரூ.9 லட்சம் லாபமாக கிடைக்கிறது. இதுபோக சிறுவிடை, பெருவிடை, கருங்கோழியும் வளர்த்து வருகிறோம். இதற்கு நாங்கள் தனியாக தீவனம் எதுவும் வாங்குவது கிடையாது. நெல்லுக்கு பாயுற தண்ணீர் புல்லுக்கும் பாயும் என சொல்லுவது போல ஆடுகளுக்கு கொடுக்கும் தீவனத்தையே கோழிகளுக்கும் கொடுக்கிறோம். கோழிகள் ஆடுகளின் கழிவுகளில் இருந்து கிடைக்கும் பூச்சி, புழுக்களையும் சாப்பிட்டு நல்ல ஊட்டமாக வளர்கின்றன.

ஒரு மாதத்தில் கோழிகள் மற்றும் முட்டைகளை விற்பனை செய்வதன் மூலம் ரூ.15 ஆயிரம் கூடுதல் வருமானமாக கிடைக்கிறது. அருகில் ஒரு சிறிய குளம் போல் அமைத்து அதில் மீன்களையும் வளர்த்து வருகிறோம். இதுபோக 5 பசு மாடு, 3 கன்று, 1 காளை மாடு ஆகியவற்றையும் வளர்த்து வருகிறோம். இவற்றின் மூலம் கிடைக்கும் பாலை வீட்டுத் தேவைக்கு பயன்படுத்திக் கொள்கிறோம். மாடுகள் மற்றும் ஆடுகள் மூலம் கிடைக்கும் கழிவுகளான சாணம், புழுக்கை மற்றும் கோமியத்தை எங்கள் வயலுக்கு உரமாகப் பயன்படுத்திக் கொள்கிறோம். உரம் அனைத்தையும் நாங்கள் பயன்படுத்துவதில்லை. பெரியளவில் உபரியாகவே உரம் கிடைக்கும். அவ்வாறு மீதமாகும் உரத்தை அருகில் இருக்கும் விவசாயிகளுக்கு விற்பனை செய்து விடுகிறோம். இப்படி பல வகையிலும் வருமானம் பார்க்கிறோம்’’ என மகிழ்ச்சியுடன் கூறி முடிக்கிறார் ஆசைத்தம்பி.
தொடர்புக்கு:
ஆசைத்தம்பி: 90923 65888.

Related posts

அதானி குழுமம் தொடர்பான பங்குச்சந்தை முறைகேடு: செபி தலைவர் மாதவி ஆஜராக சம்மன்

முன்னாள் பிரதமர் இம்ரான்கானின் சகோதரிகள் கைது

ஹரியானா மாநிலத்தில் உள்ள 90 சட்டமன்ற தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.!