உலகளாவிய ‘தடம்’

தமிழ்நாட்டில் 2021ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றி வாகை சூடியது திமுகழகம். அதன்பிறகு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு கொண்டு வந்த முத்தான திட்டங்கள் அனைத்தும் தற்போது மக்கள் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கிறது. இப்படி திட்டங்களால் மக்களின் குறைகளை போக்கிய முதல்வர் தொழில்துறை முன்னேற்றத்திலும் சீரிய முயற்சிகளால் தனித்துவம் படைத்து வருகிறார். அதேநேரத்தில் தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை 2030ம் ஆண்டுக்குள் 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு உயர்த்த வேண்டும் என்ற மாபெரும் இலக்கோடு முதல்வரின் சாதனை பயணம் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

இதன் ஒரு பகுதியாக வெளிநாட்டின் தொழில்முதலீடுகளை தமிழ்நாட்டிற்கு கொண்டுவருவதில் அவரது செயல்பாடுகள் கவனம் ஈர்த்து வருகிறது. இந்த வகையில் கடந்த ஆகஸ்ட் 27ம் தேதி முதல் 15 நாட்கள் அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார் முதல்வர். அவரது அமெரிக்க பயணமானது ஆயிரமாயிரம் கோடிகளில் தமிழ்நிலத்தில் முதலீடுகளுக்கு வழிவகுத்துபெருமை சேர்த்து வருகிறது. இந்த பயணத்தின்போது திருநெல்வேலியில் உருவாகும் சுற்றுச்சூழலுக்கு உகந்த வாழைநார் கூடை, புலிகாட்டிலிருந்து பனை ஓலை ஸ்டாண்ட், விழுப்புரத்தை சேர்ந்த டெரகோட்டா சிற்பங்கள் (குதிரை), கும்பகோணத்தில் இருந்து பித்தளை விளக்கு, நீலகிரியில் இருந்து தோடா எம்பிராய்டரி சால்வை, பவானியில் இருந்து பவானி ஜமக்காளம் போன்றவற்றை தடம் பெட்டகத்தில் வைத்து முதலீட்டாளர்களுக்கு வழங்கி வியப்பில் ஆழ்த்தி வருகிறார் முதல்வர்.

கண்ணைக்கவரும் வண்ணங்களை கோர்த்து கைகளால் மட்டுமே நெய்யப்படும் பவானி ஜமக்காளம் என்பது ஆண்டுகள் பல கடந்தும் நீடித்து உழைக்கிறது. எடையில் குறைவாகவும், தரத்தில் நிறைவாகவும் இருக்கும் நெல்லைச்சீமையின் வாழைநார் கூடைகள், சுற்றுச்சூழல் மாசுபடுவதை பெருமளவில் தவிர்க்கிறது. விழுப்புரத்தில் தயாராகும் டெரகோட்டா சுடுமண் சிற்பங்கள், நுண்ணிய கலைநுட்பத்தின் உச்சமாக திகழ்கிறது. தோடர்கள் தென்னிந்தியாவின் நீலகிரி பீடபூமியில் எஞ்சியிருக்கும் மிகப்பழமையான பூர்வகுடி மக்கள்.

அவர்களின் தனித்துவமான ஆடை வடிவமாக இருப்பது தோடா எம்பிராய்டரி சால்வை. நூல்களின் எண்ணிக்கையை அடிப்படையாக கொண்டு எளிய வண்ணங்களில் வடிவமைப்பது தோடா சால்வைகளின் தனிச்சிறப்பு. பனை ஓலைகள் என்ற சுவடே தெரியாமல் பார்வையை நிறைப்பது புலிக்காட்டு ஓலை ஸ்டேன்ட். மாமன்னர் ராஜராஜன் குடியமர்த்திய வம்சாவழிகளின் பாரம்பரியமாக தயாரிக்கப்பட்டு வருவதுதான் கும்பகோணம் நாச்சியார்கோயில் குத்துவிளக்குகள். இப்படி தன்னந்தனிச் சிறப்போடு மாநிலத்தின் அரும்பொருட்கள் அனைத்தும் தடம் பெட்டகத்தில் இடம் பெற்றுள்ளது.

தமிழ்நாட்டின் வளமான பண்பாட்டை பாதுகாக்கும் வகையிலும், பாரம்பரியம் மிக்க கைவினைப்பொருட்களுக்கு புத்துயிர் அளிப்பதற்கும், சமகாலத்தில் அதன் முக்கியத்துவத்தை பறைசாற்றுவதற்கும் தடம் திட்டம் உருவாக்கப்பட்டது. பழங்கால கைவினை பொருட்களை சமகால தமிழர் பண்பாட்டுடன் இணைப்பதன் மூலம் அவற்றை உயிர்ப்புடன் வைத்திருப்பதே இந்த திட்டத்தின் முதன்மை நோக்கமாகும். இதனை கருத்தில் கொண்டு அமெரிக்காவின் தொழில் முதலீட்டாளர்களுக்கு தடம் பெட்டகத்தை அன்போடு அளித்து மகிழ்கிறார் முதல்வர். இந்த பெட்டகம் தமிழகத்தின் பாரம்பரியத்தை கடல் கடந்து பறைசாற்றும். அதுவே தமிழ்நிலத்தின் கைவினை பொருட்களின் புகழுக்கு பெரும் மகுடம் சூட்டிட உலகளாவிய தடம் அமைக்கும் என்பது நிதர்சனம்.

Related posts

முடிவுக்கு வருகிறது போராட்டம் நாளை பணிக்கு திரும்பும் கொல்கத்தா டாக்டர்கள்

இந்தியாவிலிருந்து வெடிமருந்துகள் உக்ரைன் செல்கிறதா? ஒன்றிய அரசு மறுப்பு 

நந்தனம் ஓட்டலில் உள்ள ஸ்பாவில் பாலியல் தொழில் நடத்திய பெண் கைது: 4 பட்டதாரி இளம்பெண்கள் மீட்பு