கண்ணாடி மாளிகை மீண்டும் திறப்பு: சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பு

ஊட்டி: ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகள் கூட்டம் சற்று குறைந்துள்ளதால் கண்ணாடி மாளிகையை காண சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவிற்கு தினமும் பல ஆயிரம் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகள் அங்குள்ள மலர் செடிகளில் பூத்துள்ள மலர்களை கண்டு ரசித்து செல்வது வழக்கம். கோடை சீசன் என்பதால் தற்போது பூங்காவில் மலர் கண்காட்சிக்காக மாடங்களில் பல்வேறு வகையான மலர்களை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. மேலும், இத்தாலியன் பூங்கா, புதிய பூங்கா போன்றவைகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள மலர் அலங்காரத்தையும் கண்டு ரசித்து செல்கின்றனர்.

குறிப்பாக, பூங்காவில் உள்ள கண்ணாடி மாளிகைக்குள் சென்று புகைப்படங்களை எடுத்துச் செல்வது வழக்கம். இந்நிலையில், கண்ணாடி மாளிகையில் ஏராளமான தொட்டிகளில் மலர் செடிகள் வைக்கப்பட்டுள்ளது. பல வடிவங்களில் இங்கு வைக்கப்பட்டுள்ள மலர் அலங்காரத்தை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்வது வழக்கம். இந்த மலர் அலங்காரங்களை காண செல்லும் சுற்றுலா பயணிகள் சிலர் புகைப்படம் எடுக்கும் மோகத்தில் தொட்டிகளை தட்டி விட வாய்ப்புள்ளதாக கருதி மலர் கண்காட்சி நடந்த தினங்களில் கண்ணாடி மாளிகை தற்காலிகமாக மூடப்பட்டது.

இதனால், பூங்காவிற்கு வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். மலர் கண்காட்சி முடிந்த நிலையில், சுற்றுலா பயணிகள் வருகை சற்று குறைந்து காணப்படுகிறது. எனினும், சாதாரண நாட்களை விட தற்போது அதிகமாக சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இருப்பினும், சுற்றுலா பயணிகள் பார்வையிடும் வகையில் தற்போது பூங்காவில் உள்ள கண்ணாடி மாளிகை திறக்கப்பட்டுள்ளது. மேலும், பல வகையான லில்லியம் மலர்கள் உட்பட பல்வேறு வகையான மலர்களை கொண்டு அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளது. நேற்று முதல் இந்த கண்ணாடி மாளிகையில் உள்ள மலர் அலங்காரங்களை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர்.

Related posts

குனோ தேசிய பூங்காவில் சிவிங்கி புலிகளை காக்க தென்ஆப்பிரிக்காவில் இருந்து தைலம் இறக்குமதி

பாஜவை நாட்டை விட்டு வெளியேற்றுவோம்: ஹேமந்த் சோரன் சூளுரை

பனி லிங்கத்தை தரிசிக்க 6,619 பக்தர்கள் அடங்கிய 3வது குழு அமர்நாத் பயணம்