கன்னியாகுமரி கடலில் அமைய உள்ள கண்ணாடி கூண்டு பாலம் பொருத்தும் பணி ஒரு வாரத்தில் தொடங்கும்

கன்னியாகுமரி : சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். கடலில் உள்ள 133 அடி உயர திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் நினைவு மண்டபம் ஆகியவற்றை பூம்புகார் போக்குவரத்து கழக படகில் சென்று சுற்றுலா பயணிகள் கண்டுகளித்து வருகின்றனர்.விவேகானந்தர் நினைவு மண்டபத்திற்கான படகு தளம் ஆழம் அதிகமான பகுதியில் உள்ளது. திருவள்ளுவர் சிலைக்கான படகு தளம் ஆழம் குறைவானதாகவும், அதிகப்படியான பாறைகள் நிறைந்த இடமாகவும் உள்ளது. ஆகவே கடலில் நீர் மட்டம் குறையும் போது திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து நிறுத்தப்படுகிறது.

இதனால் ஆண்டின் பாதி நாட்கள் சுற்றுலா பயணிகள் திருவள்ளுவர் சிலையை அருகில் சென்று காண முடியாத நிலை இருந்து வருகிறது. இதனால் விவேகானந்தர் நினைவு மண்டபத்திற்கும், திருவள்ளுவர் சிலைக்கும் இடையே பாலம் அமைக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்தனர். இந்த கோரிக்கையை ஏற்று விவேகானந்தர் நினைவு மண்டபம் – திருவள்ளுவர் சிலைக்கு இடையே கண்ணாடி கூண்டு பாலம் அமைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.

அதன்படி நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை சார்பில் தமிழ்நாடு கடல்சார் வாரிய வைப்பு நிதியாக ₹37 கோடி நிதியில் கண்ணாடி கூண்டு பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இந்த கண்ணாடி கூண்டு பாலம் 97 மீட்டர் நீளம், 4 மீட்டர் அகலம் கொண்டதாக அமைக்கப்படுகிறது. கடந்த ஆண்டு மே மாதம் 24ம் தேதி அமைச்சர் மனோதங்கராஜ் முன்னிலையில் அமைச்சர் எ.வ.வேலு கண்ணாடி கூண்டு பாலம் அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார்.

முதற்கட்டமாக திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் நினைவு பாறையின் பக்கத்தில் அடித்தள கம்பிகள் பொருத்தப்பட்டு தூண்கள் அமைக்கப்பட்டன. இதன் மீது பொருத்தப்படவுள்ள ஆர்ச் பீம்கள், குறுக்கு பீம்கள், நீள பீம்கள், டை பீம்கள் ஆகியவற்றை வடிவமைக்கும் பணி மற்றும் கட்டமைக்கும் பணி பாண்டிச்சேரியில் தனியார் கம்பெனியில் நடந்தது.

இந்த பணிகள் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு நிறைவடைந்தன. இதற்கான ஆர்ச் மொத்தம் 222 டன் எடை கொண்டதாகும். துருப்பிடிக்காத வகையிலான ஸ்டீல் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. மொத்தம் 101 துண்டுகளாக இவை தயாரிக்கப்பட்டு இணைக்கப்பட உள்ளன. இவற்றை பகுதி பகுதியாக கன்னியாகுமரிக்கு கொண்டு வரும் பணிகள் நடந்தன. இவை ஆரோக்கியபுரத்தில் வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் கண்ணாடி கூண்டு பாலம் அமைப்பதற்காக நிறுவப்பட்டுள்ள தூண்கள் இடையே, தற்போது சாரம் போன்ற அமைப்பை கட்டமைக்கும் பணி நடக்கிறது. இது முடிந்ததும் ஒரு வாரத்தில் கண்ணாடி கூண்டு பாலம் பொருத்தும் பணி தொடங்கும் என தெரிகிறது. இந்த கண்ணாடி கூண்டு பாலத்தில் நடந்து சென்று கடலின் அழகை சுற்றுலா பயணிகள் ரசிக்க முடியும்.

Related posts

திருச்சி என்ஐடி கல்லூரியில் படிக்கும் மத்திய பிரதேச மாநில மாணவி காணாமல் போனதாக புகார்

சென்னையில் காவல்நிலையத்தில் அதிகாலையில் புகுந்த நபர் பெண் காவலரிடம் தகராறு

உத்திரபிரதேச மாநிலம் மதுரா அருகே நிலக்கரி ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து