இளம்பெண்ணை பலாத்காரம் செய்ய முயற்சித்ததாக புகார்: மலையாள நடிகர் உண்ணி முகுந்தன் மீதான வழக்கு ரத்து

திருவனந்தபுரம்: மலையாள சினிமாவில் முன்னணி இளம் நடிகர்களில் ஒருவர் உண்ணி முகுந்தன். மல்லு சிங், விக்கிரமாதித்தன், மாளிகைப்புரம் உள்பட ஏராளமான மலையாளப் படங்களில் இவர் நடித்துள்ளார். தமிழில் தனுஷுடன் சீடன் என்ற படத்திலும் இவர் நடித்துள்ளார். இந்நிலையில் கடந்த 2017ம் ஆண்டு கோட்டயத்தைச் சேர்ந்த ஒரு இளம்பெண், நடிகர் உண்ணி முகுந்தனுக்கு எதிராக கேரள உயர்நீதிமன்றத்தில் ஒரு புகார் கொடுத்தார். அதில், ஒரு சினிமாவுக்கு கதை சொல்வதற்காக உண்ணி முகுந்தனின் அடுக்குமாடி குடியிருப்புக்கு சென்றபோது ,தன்னை அவர் பலாத்காரம் செய்ய முயற்சித்ததாக குறிப்பிட்டிருந்தார். இது தொடர்பாக உண்ணி முகுந்தன் மீது வழக்கு பதிவு செய்ய போலீசுக்கு கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதற்கிடையே அந்த இளம்பெண் பொய்யான புகார் கொடுத்துள்ளதாகவும், ரூ.25 லட்சம் பணம் தராவிட்டால் பலாத்கார புகார் கொடுப்பேன் என்று தன்னை மிரட்டியதாகவும் கூறி உண்ணி முகுந்தன் கேரள உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். இந்நிலையில் தங்களுக்கு இடையே சமரசம் ஏற்பட்டுள்ளதால் வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று கூறி அந்த இளம்பெண் கேரள உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி கோபிநாத், உண்ணி முகுந்தன் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.

Related posts

ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டது அறிந்து மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்: உதயநிதி ஸ்டாலின்

மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டிருப்பதற்கு காங்கிரஸ் கண்டனம்

பூவிருந்தவல்லி அருகே மேளம் அடிக்கும் இளைஞர் வெட்டிக் கொலை: மேலும் 4 பேர் கைது