சிறுமி பலாத்கார வழக்கில் வாலிபரிடம் கைப்பற்றிய செல்போன்களில் லட்சக்கணக்கான ஆபாச போட்டோ ஆயிரக்கணக்கில் ஆபாச வீடியோ: ஆய்வுக்கு கூடுதலாக நிபுணர்களை நியமிக்க நீதிபதி உத்தரவு

மதுரை: சிறுமி பாலியல் பலாத்கார வழக்கில் கைப்பற்றப்பட்ட செல்போன்களில் பல்லாயிரக்கணக்கான ஆபாச வீடியோக்கள், படங்கள் நிரம்பி வழிவதால், ஆய்வுக்கென கூடுதல் அறிவியல் பரிசோதனை நிபுணர்களை நியமிக்க ஐகோர்ட் மதுரை கிளை நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானையை சேர்ந்த கவின் என்பவர் ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த ஜாமீன் மனுவில், ‘‘ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த சிறுமி கொடுத்த பாலியல் புகாரில் என்னை 3வது குற்றவாளியாக திருவாடானை காவல்துறை சேர்த்துள்ளது. என் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

இந்த வழக்கில் எனக்கு ஜாமீன் வழங்க வேண்டும்’’ என்று தெரிவித்திருந்தார். இவ்வழக்கு நீதிபதி பரத சக்கரவர்த்தி முன் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது அரசு தரப்பில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் அன்புநிதி ஆஜராகி, ‘‘இந்த வழக்கில் 8 குற்றவாளிகள் உள்ளனர். இவ்வழக்கில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து வீடியோ பதிவு செய்து மிரட்டி மேலும் சில நண்பர்களுடன் சேர்ந்து தொடர்ந்து பாலியல் வல்லுறவு செய்துள்ளார்கள். எனவே மனுதாரருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது’’ என வாதிட்டார்.

அப்போது நீதிபதி, ‘‘இவ்வழக்கில் குற்றவாளிகளிடமிருந்து 3 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. முதல் செல்போனில் 79,701 போட்டோக்கள் மற்றும் 8,446 வீடியோக்கள் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இரண்டாவது செல்போனில் 39,195 போட்டோக்கள் மற்றும் 359 வீடியோக்களும், மூன்றாவது செல்போனில் 96,353 போட்டோக்கள் மற்றும் 2,820 வீடியோக்கள் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வளவு வீடியோக்கள், படங்கள் உள்ள நிலையில் இதில் பாதிக்கப்பட்ட பெண்ணின் வீடியோக்கள், படங்கள் உள்ளதா என கண்டறிய நேரமாகும்.

ஆகையால் தடயவியல் இணை இயக்குநர் ஆஜராகவேண்டும்’’ என உத்தரவு பிறப்பித்தார். இதன்பேரில் மதுரை மண்டல தடயவியல் இணை இயக்குநர் நீதிமன்றத்தில் ஆஜரானார். அவரிடம் நீதிபதி, ‘‘குறிப்பிட்ட பெண்ணின் புகைப்படம், வீடியோ உள்ளதா என கண்டறிந்து அறிக்கை தாக்கல் செய்வதில் கால தாமதம் ஏன்? இந்த வழக்கு மட்டுமல்லாமல் பல்வேறு வழக்குகளில் தடயவியல் அறிக்கை வர தாமதமாவதன் காரணம் என்ன?’’ என கேள்வி எழுப்பினார்.

அதற்கு அவர் பதிலளிக்கையில், ‘‘எனக்கு கீழ் ஒரு உதவி இயக்குநர், 2 பரிசோதனை அலுவலர்கள் மற்றும் 2 இளநிலை பரிசோதனை அலுவலர்கள் மட்டுமே உள்ளனர். தற்போது ஒவ்வொரு குற்ற வழக்குகளில் குற்றவாளிகளின் செல்போன் பறிமுதல் செய்யப்பட்டு ஆய்வுக்கூடத்திற்கு அனுப்பப்படுகிறது. இதனால் பணி சுமை அதிகரிக்கிறது. ஆள் பற்றாக்குறையே அறிக்கை வழங்க தாமதம் ஏற்பட காரணம்’’ என தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து நீதிபதி, ‘‘ஒவ்வொரு வழக்கிலும் தடயவியல் அறிக்கை வர தாமதமானால் வழக்கின் விசாரணை பாதிக்கப்படும். மதுரை மண்டலத்தில் 10 தென் மாவட்ட வழக்குகளின் பொருட்கள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு வருகின்றன. அவ்வாறு இருக்கும் போது இவ்வளவு குறைவான ஆட்களை வைத்து பணி செய்வது சிரமம். எனவே இந்த வழக்கில் உள்துறைச் செயலாளர் உடனடியாக மதுரை மண்டலத்திற்கு தேவையான அறிவியல் பரிசோதனை நிபுணர்களை நியமனம் செய்ய வேண்டும்.

குற்ற வழக்குகளில் புலனாய்வுத் தன்மை அதிகரிக்க தேவையான கூடுதல் பதவிகளையும் உருவாக்க வேண்டும். இதன் மூலம் குற்ற வழக்குகளை விரைந்து முடிக்க உதவியாக இருக்கும்’’ என தெரிவித்து, மனுதாரர் சிறையில் இருந்த காலத்தை கருத்தில் கொண்டு நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி உத்தரவு பிறப்பித்தார்.

* இவ்வளவு வீடியோக்கள், படங்கள் உள்ள நிலையில் இதில் பாதிக்கப்பட்ட பெண்ணின் வீடியோக்கள், படங்கள் உள்ளதா என கண்டறிய நேரமாகும்.

Related posts

மயிலாப்பூர் நிதி நிறுவனத்தில் ரூ.525 கோடி மோசடி தேவநாதன் மீது 4,100 புகார்கள் குவிந்தன: 4 சொகுசு கார்கள், ரூ.1 கோடி மதிப்பிலான பத்திர ஆவணங்கள் பறிமுதல்

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்கள் நீக்கப்பட்டவர்கள்தான்: எடப்பாடி பழனிசாமி ஆவேசம்

கிண்டி ரேஸ் கிளப் மைதானத்தில் 118 ஏக்கரில் பசுமைவெளி சுற்றுச்சூழல் பூங்கா: தமிழக அரசாணை வௌியீடு