பெற்றோர் மதுபோதைக்கு அடிமையானதால் விபரீதம்; 6 மாதமாக 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: பெரியப்பா மகன், டெய்லர் உட்பட 3 பேர் போக்சோவில் கைது

அம்பத்தூர்: வில்லிவாக்கத்தில் கடந்த 6 மாதமாக 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்த பெரியப்பா மகன், டெய்லர், பக்கத்து வீட்டு சிறுவன் ஆகிய 3 பேர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை வில்லிவாக்கம் காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வருபவர் செல்வம் (பெயர் மாற்றப் பட்டுள்ளது). பெயின்டர்.

இவரது மனைவியும், செல்வமும் மதுபோதைக்கு அடிமையானவர்கள் என கூறப்படுகிறது. இவர்களுக்கு 3 பிள்ளைகள் உள்ளனர். 11 வயதான மூத்த மகள் 6ம் வகுப்பு செல்ல உள்ளார். இவள் நேற்று திருவேற்காடு பகுதியில் வசிக்கும் தனது சித்தி வீட்டுக்கு சென்று, வயிறு வலிப்பதாகவும், பெரியப்பா மகன் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாகவும் கூறி அழுதுள்ளாள்.

இதை கேட்டு அதிர்ச்சியடைந்த சித்தி, சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு சிறுமியை பரிசோதனை செய்த மருத்துவர்கள், நீண்ட நாட்களாக சிறுமி பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறினர். இதையடுத்து சிறுமியின் பாட்டி வில்லிவாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி சிறுமியை அழைத்து போலீசார் விசாரித்தபோது பல அதிர்ச்சி தகவல்கள் கிடைத்துள்ளன. சிறுமியிடம் முதல் 16 வயதேயான பெரியப்பா மகன் தின்பண்டங்களை வாங்கி கொடுத்து சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதை பார்த்த எதிர்வீட்டில் வசிக்கும் மற்றொரு 16 வயது சிறுவன் சிறுமியை மிரட்டி பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளான். இதுபோல் அதே பகுதியில் டெய்லர் கடை நடத்தி வரும் குமார் என்பவரும் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

மேலும் பெரியப்பா மகனின் நண்பர்கள் பலர் சிறுமியிடம் தவறாக நடந்துள்ளனர். கடந்த 6 மாதங்களாக வேதனைகளை அனுபவித்து வந்த சிறுமி, தனது பெற்றோரிடம் தெரிவிக்க முயன்றபோது அவர்கள் மதுபோதையில் கண்டுகொள்ளவில்லையாம். நேற்றும் சிறுமியிடம் தவறாக நடந்ததால் வலிதாங்க முடியாமல் தனது சித்தியை சந்தித்து தனக்கு நடந்த கொடுமையை வேதனையுடன் கூறியுள்ளாள் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை செய்யவும், சிகிச்சை அளிக்கவும் போலீசார் முடிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து வில்லிவாக்கம் அனைத்து மகளிர் போலீசார் சிறுமியின் பெரியப்பா மகன், எதிர் வீட்டு சிறுவன், டெய்லர் குமார் ஆகிய 3 பேர் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சிறுமிக்கு யாரெல்லாம் பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர் என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதுபோல் 2018ம் ஆண்டு மாற்றுத்திறனாளியான 11 வயது சிறுமிக்கு ஒரு கும்பல் பாலியல் தொல்லை கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

Related posts

18 மணி நேரம் காத்திருந்து திருப்பதியில் பக்தர்கள் தரிசனம்

கத்தியை காட்டி மிரட்டி கல்லூரி மாணவனிடம் செல்போன் பறிப்பு: ரவுடி, சிறுவன் கைது

புலி நகம், பற்கள் விற்க முயன்ற 3 பேர் சிறையில் அடைப்பு