சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் கட்டிட தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

*ஈரோடு மகிளா நீதிமன்றம் தீர்ப்பு

ஈரோடு : ஈரோடு மாவட்டம் கோபி கூகளூர் கொன்னமடை வீதியை சேர்ந்தவர் சிவலிங்கம் மகன் குமார் (26). கட்டிட தொழிலாளி. திருமணமானவர். குடும்ப தகராறு காரணமாக, குமாரின் மனைவி பிரிந்து சென்றுவிட்டார். குமார் கட்டிட கான்ட்ராக்டர் ஒருவரின் கீழ் வேலை பார்த்து வந்தார். இதனால், அந்த கட்டிட கான்ட்ராக்டர் அவரது வீட்டின் அருகே குடிசை அமைத்து அதில் குமாரை தங்க வைத்திருந்தார். கட்டிட கான்ட்ராக்டருக்கு 8ம் வகுப்பு படிக்கும் 13 வயது மகள் உள்ளார். அச்சிறுமியிடம் குமார் நட்பாக பழகி வந்தார்.

பள்ளி விடுமுறையில் அந்த சிறுமி ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி சாவடிப்பாளையம் புதூரில் உள்ள அவரது தாத்தா வீட்டிற்கு சென்றார். அப்போது, சிறுமியிடம் இருந்த செல்போன் எண்ணில் குமார் தொடர்பு கொண்டு, திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார். அதன்பேரில், கடந்த 2019ம் ஆண்டு மே மாதம் 14ம் தேதி இரவு சிறுமி வீட்டைவிட்டு வெளியே வந்தபோது, குமார் அவரது டூவீலரில் சிறுமியை கடத்தி வந்து, ஈரோடு ரயில்வே ஸ்டேஷனில் டூவீலரை நிறுத்திவிட்டு, பஸ்சில் கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டம் நாகமங்கலா கிராமத்திற்கு அழைத்து சென்றார்.

அங்கு ஒரு வீட்டில் வைத்து சிறுமியை குமார் பாலியல் பலாத்காரம் செய்தார். இந்நிலையில், சிறுமியை காணவில்லை என மொடக்குறிச்சி போலீசில் அவரது பெற்றோர் அளித்த புகாரின்பேரில், போலீசார் தேடி வந்தனர். கடந்த 2019ம் ஆண்டு மே மாதம் 17ம் தேதி ஈரோடு மாவட்டம் பண்ணாரி சோதனைச்சாவடி அருகே நின்றிருந்த சிறுமியையும், குமாரையும் பிடித்து போலீஸ் ஸ்டேஷன் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது குமார், சிறுமியை கடத்தி, கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்ததை போலீசார் உறுதி செய்தனர். இதையடுத்து குமார் மீது போக்சோ, கடத்தல் வழக்குப்பதிந்து கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு விசாரணை ஈரோடு மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

வழக்கின் இறுதி விசாரணை நடத்தி நீதிபதி மாலதி நேற்று தீர்ப்பளித்தார். இதில், குமாருக்கு சிறுமியை கடத்திய குற்றத்திற்காக 3 ஆண்டு சிறை தண்டனையும், பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக 20 ஆண்டு சிறை தண்டனையும், இந்த தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார். மேலும், அபராதமாக ரூ.8 ஆயிரம் செலுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார்.

பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நிவாரண உதவியாக ரூ.1 லட்சம் வழங்க வேண்டும் என நீதிபதி மாலதி தமிழக அரசுக்கு பரிந்துரைத்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் ஜெயந்தி ஆஜரானார்.

Related posts

மாநில சுயாட்சி கொள்கையை வென்றெடுக்க உறுதி ஏற்போம்

திருச்சூரில் இருந்து வந்த ஏடிஎம் கொள்ளையர்கள் வெப்படை அருகே பிடிபட்ட பரபரப்பு காட்சி வெளியானது!

மராட்டிய சட்டப்பேரவைக்கு நவம்பர் மாதம் 26-ம் தேதிக்குள் தேர்தல்!