சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு விசாரணை சிபிஐக்கு மாற்றம்: உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: அண்ணாநகரில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்றம் செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது குறித்து அவரது பெற்றோர் பக்கத்து வீட்டில் வசிக்கும் சிறுவன் மீது அண்ணாநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்றுள்ளனர்.

அப்போது காவல் ஆய்வாளர் தங்களை தாக்கியதாகவும், சிறுவனின் பெயரை புகாரிலிருந்து நீக்க வற்புறுத்தியதாகவும் சிறுமியின் பெற்றோர் வீடியோ வெளியிட்டிருந்தனர். இந்த விவகாரம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது. அதேபோல, இந்த விவகாரம் தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் ஆட்கொணர்வு மனுதாக்கல் செய்திருந்தார்.

இந்த இரண்டு வழக்குகளும் நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், வி.சிவஞானம் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தன. அப்போது, வழக்கறிஞர் ஏ.பி.சூரியபிரகாசம் ஆஜராகி, பாதிக்கப்பட்ட சிறுமிக்கு உரிய இழப்பீடு வழங்குமாறு உத்தரவிட வேண்டும். போலீசார் பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோரை தாக்கியுள்ளனர் என்றார்.

பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சம்பத், சிறுமியிடம் பெறப்பட்ட வாக்கு மூலத்தை யூடியூப்பில் வெளியிட்டுள்ளனர். பத்திரிகையிலும் செய்தி வந்துள்ளது. இந்த வாக்குமூலத்தை யார் சமூக வலைத்தளத்திற்கு அனுப்பியது என்று கேள்வி எழுப்பினார். அப்போது, ஆஜரான தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, பாதிக்கப்பட்ட சிறுமியின் ஆடியோ வெளியானது தொடர்பாக யூடியூபர் மாரிதாஸ் மற்றும் பத்திரிகையாளர் செல்வராஜ் ஆகியோர் மீது தனித்தனியாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், பாதிக்கப்பட்ட சிறுமியிடம் வாக்குமூலம் பெற்றது யார்? எங்கு வைத்து வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது என்று கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த தலைமை குற்றவியல் வழக்கறிஞர், பெண் ஆய்வாளர் அவரது செல்போன் மூலம் மருத்துவமனையில் வைத்து பதிவு செய்துள்ளார். உடனடியாக வழக்குப் பதிவு செய்வதற்காகவே மருத்துவமனையில் வைத்தே வாக்குமூலம் பெறப்பட்டது என்றார். இதைக்கேட்ட நீதிபதிகள், அந்த காவல்துறை ஆய்வாளர் மீது ஏன் வழக்குப் பதிவு செய்யப்படவில்லை என்று கேட்டனர். இதற்கு பதிலளித்த தலைமை குற்றவியல் வழக்கறிஞர், இது தொடர்பாக விசாரணை நடத்தப்படுவதாக கூறினார்.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், போக்சோ சட்டத்தின்கீழ் வழக்கை விசாரிக்கும் போலீசாருக்கு உரிய பயிற்சி அளிக்க வேண்டும். வழக்கின் விசாரணையை உயர் அதிகாரிகள் மேற்பார்வை செய்ய வேண்டும். பாதிக்கப்பட்டவர்களின் அடையாளங்களை பாதுகாக்க வேண்டும். இதுபோன்ற புகார் மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்ய வேண்டும்.

இந்த வழக்கை பொறுத்தவரை போக்சோ விதிகள் மீறப்பட்டுள்ளது. மருத்துவமனை லிப்ட் அருகே வைத்து வாக்குமூலம் பதிவு செய்தது தவறு. பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் முறையாக நடத்தப்படவில்லை. இந்த வழக்கில் காவல்துறை விசாரணை மீது பெற்றோருக்கு நம்பிக்கை இல்லை என்பது அவர்கள் தரப்பு வாதங்கள் மூலம் தெரிய வருகிறது. வழக்கை வேறு விசாரணை அமைப்புக்கு மாற்றுவதற்கான முகாந்திரம் உள்ளது.

எனவே, இந்த வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்றம் செய்து உத்தரவிடுகிறோம். பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோருக்கு போலீசார் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு கூடுதல் இழப்பீடு பெறுவது குறித்து பெற்றோர் உரிய நீதிமன்றத்தை அணுகலாம் என்று உத்தரவிட்டனர்.

Related posts

வர்த்தக காஸ் சிலிண்டர் விலை ₹48 அதிகரிப்பு: தீபாவளி நேரத்தில் உயர்வால் வியாபாரிகள் அதிருப்தி

உபி கோயில்களில் இருந்து சாய்பாபா சிலைகளை அகற்றிய இந்து அமைப்பு

ரஷ்யா பீரங்கி தாக்குதலில் 7 பேர் பலி