ஒரு கையால் அதிவேகமாகத் தட்டச்சு செய்து அசத்தும் பள்ளி மாணவன் ஜிப்ரான்!

‘‘முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை இன்மை புகுத்தி விடும்’’

வள்ளுவரின் குறளுக்கு ஏற்ப மாற்றுத்திறனாளி மாணவர் ஒருவர் தன் வலது கையை இழந்த நிலையிலும் தன்னம்பிக்கை, விடா முயற்சியின் காரணமாக டைப்ரைட்டிங் தேர்வில் அதிவேகமாகத் தட்டச்சு செய்து அசத்திய வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலானது. ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா வட்டம் விஷாரம் பகுதியைச் சேர்ந்தவர் பசூல் உர்ரஹமான். வாலாஜாவில் எசன்ஸ் கடை வைத்துள்ளார். இவரது பதினேழு வயது மகன் ஜிப்ரான்தான் அந்த மாணவன். இதையடுத்து அந்த மாணவரைத் தொடர்புகொண்டு பேசியபோது தனக்கு நிகழ்ந்த விபத்து மற்றும் மீண்டெழ காரணமாக இருந்தவர்கள் பற்றியும் விவரித்தார்.

‘‘கடந்த 2017ம் ஆண்டு ஆற்காட்டில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தேன். அப்போது நான் 5ம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். உறவினர் வீட்டின் பால்கனியில் ஸ்கிப்பிங் விளையாடிக்கொண்டிருந்தேன். அப்போது, ஸ்கிப்பிங் கயிறு வீட்டின் அருகே உள்ள மின் கம்பியின் மீது விழுந்துவிட்டது. அதை எடுக்கச் சென்றபோது மின்சாரம் தாக்கி படுகாயமடைந்தேன். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் என்னை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். மின்சாரம் தாக்கியதில் எனது வலது கை கருகியது. அதேபோல், வலது கால் சரிவர இயங்காத நிலை ஏற்பட்டது. இதில் என் வலது கை அறுவை சிகிச்சை செய்யப்பட்டு அகற்றப்பட்டுவிட்டது. 3 மாதங்கள் தொடர் சிகிச்சையில் இருந்த நான் வீடு திரும்பினேன்.

இதனிடையே வலது கை இழந்த நிலையில், பள்ளிக்கும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டதை எண்ணி வாழ்க்கையே சூனியம் ஆனது போல முடங்கிப்போனேன். இப்படியே இருந்துவிடக்கூடாது என்ற எண்ணம் எனக்குள் தோன்றியது. கடந்த காலத் துயரங்களை மறக்க நினைத்து மீண்டும் பள்ளிக்குச் செல்ல முடிவு செய்து என் விருப்பத்தை பெற்றோரிடம் தெரிவித்தேன். அதனை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்ட எனது தந்தை பள்ளிக்கு செல்வதற்கு ஏற்பாடு செய்து என் விருப்பத்துக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து அனுப்பி வைத்தனர்.’’ என்று விபத்தால் தனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவத்தைக் கூறிய மாணவர் ஜிப்ரான் தனக்கு பள்ளியில் உத்வேகம் அளித்தவர்கள் பற்றியும் நம்மோடு பகிர்ந்து கொண்டார்.

‘‘நான் படித்தது ஒரு தனியார் பள்ளிதான். வீட்டிலேயே முடங்கிவிடாமல் ஆர்வத்துடன் பள்ளிக்குச் சென்றுவந்த எனக்குள் தன்னம்பிக்கை உருவானது. வீட்டுப்பாடங்களை இடது கையால் எழுதும் பழக்கத்திற்கு மாற்ற பெரும் முயற்சி மேற்கொண்டேன். தொடர்ந்து, மேற்கொண்ட பயிற்சியின் காரணமாக இடதுகையில் பாடங்களை எழுதினேன். ஆரம்பத்தில் மிகவும் சிரமமாகத்தான் இருந்தது. ஆனால் தொடர் பயிற்சியின் காரணமாக இடது கையில் எழுதுவது சுலபமானது. எனது முயற்சியைக் கண்ட ஆசிரியர்கள் வெகுவாக பாராட்டினர். பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வை ஸ்க்ரைப் உதவியுடன் எழுதி தேர்ச்சி அடைந்தேன். குடும்பத்தினர் மற்றும் ஆசிரியர்கள் அளித்த ஊக்கத்தின் காரணமாக சக மாணவர்கள் மேற்கொள்ளும் அனைத்து வேலைகளையும், இடது கையால் செய்யத் தொடங்கினேன். இடது கை உதவியுடன் சைக்கிள் ஓட்டவும் கற்றுக்கொண்டேன்.’’ என்றவர் தட்டச்சு பயிற்சிக்கு செல்ல தன் தந்தைதான் காரணம் என்கிறார்.

மேலும் தொடர்ந்த மாணவன் ஜிப்ரான், ‘‘பள்ளிக்குச் சென்று வருவதோடு நின்றுவிடாமல் தனது தனித்திறமையை வளர்த்துக்கொண்டு நல்ல முறையில் கல்வி கற்கும், தனது மகனுக்கு சிறப்பான எதிர்காலத்தை அமைத்துக் கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்த எனது தந்தையின் அறிவுரையை ஏற்று வாலாஜாவில் உள்ள தட்டச்சுப் பயிற்சி மையத்தில் சேர்ந்து டைப்ரைட்டிங் பயிற்சிக்கு சென்றேன். நான் ஒரே கையில் டைப்ரைட்டிங் செய்வதைக் கண்ட சக மாணவர்கள் என்னை உற்சாகப்படுத்தினர். ஒரேகையால் டைப்பிங் செய்ய சிரமமாக இருந்தது. பயிற்சியாளர் முத்தம்மாள் மேடம்தான் எனக்கு தனி கவனம் செலுத்தி பயிற்சி அளித்தார். தற்போது, என்னால் சக மாணவர்களைப் போலவே பிழையின்றி டைப்பிங் செய்யமுடியும். டைப்ரைட்டிங் லோயர் லெவலுக்கான தேர்வு எழுதி உள்ளேன்.

தேர்வு முடிவுக்காக காத்திருக்கிறேன். தேர்ச்சி பெற்ற உடன் ஹயர் லெவல் டைப்ரைட்டிங் வகுப்பில் தொடர உள்ளேன். நல்ல முறையில் கல்வி கற்று சாட்டர்ட் அக்கவுண்டன்ட் ஆகவேண்டும் என்பதே எனது லட்சியம்’’ என்று தளராத தன்னம்பிக்கையுடன் எதிர்காலத்தைத் திட்டமிட்டு செயல்பட்டு வரும் ஜிப்ரான் கனவை எட்டிப்பிடிக்க நாமும் வாழ்த்துவோம். பொதுத்தேர்வில் தோல்வி அடைந்தாலே மனம் உடைந்து தன்னை மாய்த்துக்கொள்ளும் அளவுக்கு தவறான முடிவெடுக்கும் மாணவர்கள் மத்தியில் மனம் தளராத தன்னம்பிக்கையுடன் தன் பாதையை வகுத்து செயல்பட்டு வரும் மாற்றுத்திறனாளி மாணவர் ஜிப்ரானின் விடாமுயற்சி இன்றைய மாணவர்களுக்கு மிகச்சிறந்த உதாரணம் என்றால் அது மிகையாகாது.

செயற்கைக்கை பொருத்த நடவடிக்கை

தட்டச்சுத் தேர்வில் ஒரே கையில் டைப் செய்து அசத்திய மாணவர் ஜிப்ரான் குறித்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவியது. இதனை அறிந்த ராணிப்பேட்டை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சரவணகுமார் ஜிப்ரானின் தந்தையை தொடர்புகொண்டு பேசியுள்ளார். மாவட்ட கலெக்டர் சந்திரகலா உத்தரவின் பேரில் டைப்ரைட்டிங்கில் அசத்திய மாற்றுத்திறனாளி மாணவர் ஜிப்ரானுக்கு செயற்கை கை பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

Related posts

சொல்லிட்டாங்க…

மலராத கட்சியில் உறுப்பினர் சேர்க்கையில் நடக்கும் காமெடிகள் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குச் சொந்தமான 2,000 ஏக்கர் நிலத்தை தீட்சிதர்கள் விற்றுவிட்டதாக அறநிலையத் துறை குற்றச்சாட்டு!