ராட்சத கழிவுநீர் குழாய் உடைந்தது அடையாறு திரு.வி.க பாலம் அருகே திடீர் விரிசல்: போக்குவரத்து நிறுத்தம்

சென்னை: மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட கனமழையால் சென்னை எங்கும் மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. பாதுகாப்பு கருதி செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நேற்று காலை 4000 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் அடையாற்றில் வெள்ளம் கரைபுரண்டுஓடுகிறது. அடையாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள திருவிக பாலம் அருகே வெள்ளம் கரைபுரண்டு முகத்துவாரத்தின் வழியாக கடலில் கலக்கிறது. தற்போது மழை நின்று விட்டதால் போக்குவரத்தை சீர்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில், நேற்று காலை அடையாறு திருவிக பாலத்தின் மீது பலர் நின்று கொண்டு வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதை வேடிக்கை பார்த்துக் ெகாண்டிருந்தனர். அப்போது பாலத்தின் அருகே பூக்கடைகள் வரிசையாக உள்ள பகுதியில் திடீரென விரிசல் ஏற்பட்டு ராட்சத பள்ளம் உருவானது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் உடனே அரசு துறைகளுக்கு தகவல் தெரிவித்தனர். சென்னை மாநகராட்சி அதிகாரிகள், சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள், தீயணைப்பு படையினர் அனுப்பி வைக்கப்பட்டனர். இதை ஆய்வு செய்த போது, திருவிக பாலத்தை ஒட்டி அமைக்கப்பட்டுள்ள ராட்சத கழிவுநீர் குழாயில் விரிசல் ஏற்பட்டதும், இதனால் ராட்சத பள்ளம் உருவாகியுள்ளதும் தெரிந்தது. இதில் கழிவுநீர் ஊற்றெடுத்து வருவதால் சாலையை ஒட்டியுள்ள கடைகளில் தண்ணீர் புகுந்துள்ளது. இந்த பள்ளத்தால் பெரும் பிரச்னை உருவாகிவிடக்கூடாது என்பதற்காக அதிகாரிகள் அதை மூடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.

உடனே அந்த பகுதியை தலைமை செயலாளர் சிவ் தாஸ் மீனா உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு செய்தனர். போர்க்கால அடிப்படையில் ராட்சத குழாயில் ஏற்பட்டுள்ள விரிசலை சரி செய்து, அதனால் உருவான பள்ளங்களை மூடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மத்திய கைலாசில் இருந்து திருவான்மியூர் செல்லும் சாலை ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டது.

Related posts

இலங்கை கடற்படையால் கைது; 13 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை தேவை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடக்கும் நிலையில் ஜூலை 3வது வாரத்தில் இளநிலை ‘நீட்’ கவுன்சிலிங்?: சென்னை ஐஐடி நடத்திய ஆய்வின் அடிப்படையில் முடிவு

கடந்த 7 ஆண்டுகளில் பலமடங்கு உயர்ந்த விலை மாபியாக்களால் அயோத்தி நிலங்கள் அபகரிப்பு: பிரியங்கா காந்தி, அகிலேஷ் பரபரப்பு குற்றச்சாட்டு