சோர்வு நீங்க..!

ஃபாத்திமா மிகவும் சோர்ந்து காணப்பட்டார். பிள்ளைகளைக் கவனித்துக் கொள்ளல், வீட்டு வேலைகளைச் செய்தல், தண்ணீர் சுமந்து வருதல், திருகையில் மாவு அரைத்தல் என்று இடைவிடாத தொடர் வேலைகள்.
யார் இந்த ஃபாத்திமா?

இறைத்தூதர் நபிகள் நாயகம்(ஸல்) அவர்களின் அன்பு மகள். ஃபாத்திமா படும் சிரமங்களைப் பார்த்து அவருடைய கணவர் அலீ மிகவும் வருந்தினார். அவர் பகல் முழுக்க உழைப்பதற்காக வெளியில் சென்றுவிடுவார். உழைத்துப் பொருளீட்டி வந்தால்தான் அன்று இரவு அவர்களின் வீட்டில் அடுப்பு எரியும் என்கிற நிலை. ஒரு முறை ஏதோ ஒரு போர் முடிந்த பிறகு மதீனாவிலுள்ள இஸ்லாமிய அரசிடம் நிறைய போர்க் கைதிகள் கொண்டு வரப்பட்டிருப்பதாக அலீ அறிந்துகொண்டார். உடனே ஃபாத்திமாவிடம் விரைந்து சென்றார்.

“ஃபாத்திமாவே, ஆண்களும் பெண்களுமாய் நிறைய போர்க் கைதிகள் கொண்டுவரப்பட்டுள்ளனர். அரசின் தலைவர் உன் தந்தைதானே…! நீ நேரடியாகச் சென்று அவரிடம், அந்தக் கைதி களில் ஒருவரைத் தரும்படிக் கேள்.

வீட்டுப் பணிகளில் உனக்கு மிகவும் உதவியாக இருக்கும். உன் சிரமமும் குறையும்” என்றார் அலீ.

ஃபாத்திமாவுக்கும் அந்த யோசனை சரியாகப் பட்டது. தந்தையைச் சந்திப்பதற்காகப் புறப்பட்டார். தம் மகள் மீது பெரிதும் பாசம் கொண்டவர் நபிகளார். வெளியூருக்கோ போர்களுக்கோ சென்று திரும்பி வந்ததும், முதல் வேலையாகத் தம் மகளைச் சந்தித்து நலம் விசாரித்துவிட்டுத்தான் தம் வீட்டிற்குச் செல்வார். அந்த அளவுக்குப் பாசம்.

இப்போது மகள் வருவதைப் பார்த்ததும், அன்புடன் வரவேற்று தம் அருகில் அமர வைத்துக் கொண்டார். “நீயே என்னைத் தேடி வந்திருக்கிறாயே, என்ன செய்தி மகளே?” என்று அன்புடன் விசாரித்தார்.

ஃபாத்திமா, வீட்டுப் பணிகளின் சுமைகளை எல்லாம் சொல்லி, கைதிகளில் ஒருவரைத் தம் பணியாளராகத் தரவேண்டும் என்னும் கோரிக்கையை முன்வைத்தார்.

“மகளே ஃபாத்திமா, அந்தப் போர்க் கைதிகள் அனைவரும் அரசுக்குச் சொந்தமானவர்கள். அதில் நமக்கு எந்த உரிமையும் இல்லை. ஆகவே உன் கோரிக்கையை என்னால் ஏற்க முடியாது. ஆயினும் உன் பணிச்சுமையால் ஏற்படும் அலுப்பை அகற்றவும், சோர்வை நீக்கவும் நான் ஒரு வழி சொல்கிறேன். அதுபோல் செய்” என்றார் இறைத்தூதர் அவர்கள். “சொல்லுங்கள் தந்தையே.”

“வீட்டு வேலைகளை எல்லாம் முடித்துவிட்டு, நீ உறங்கச் செல்வதற்கு முன்பு சுப்ஹானல்லாஹ் (இறைவன் தூய்மையானவன்) என்று 33 தடவையும், அல்ஹம்துலில்லாஹ் (எல்லாப் புகழும் இறைவனுக்கே) என்று 33 தடவையும், அல்லாஹு அக்பர் (இறைவனே பெரியவன்) என்பதை 34 தடவையும் ஓதிக் கொள். இந்த இறைதியானம் உன் கவலைகளைத் தீர்க்கும்” என்றார்.

ஃபாத்திமாவும் அதன்படியே செயல்பட்டுவந்தார். நபிகளார் தம் மகளுக்கென்றே சொல்லித் தந்த இறைதியானம் என்பதால், இது ‘தஸ்பீஹே ஃபாத்திமா’ என்றே போற்றப்படுகிறது.

– சிராஜுல்ஹஸன்

இந்த வாரச் சிந்தனை

“அறிந்துகொள்ளுங்கள்.
இறைவனை நினைவுகூர்வதால்
உள்ளங்கள் அமைதி அடைகின்றன.”
(குர்ஆன் 13:28)

Related posts

ருத்ராட்சம் யாரெல்லாம் அணியலாம்!

ஊர்த்துவ நடனம் புரியும் திருவாலங்காடு நடராஜர்!

கலை மணம் கமழும் கிருஷ்ணர் கோயில்