பொது அறிவை வளர்த்துக்கொள்ள மாணவர்கள் நல்ல நூல்களை படிக்க வேண்டும்: அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அறிவுரை

சென்னை: பொது அறிவை வளர்த்துக் கொள்ள மாணவ, மாணவிகள் நல்ல நூல்களை படிக்க வேண்டும் என்று அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கூறினார். சென்னை, மாநிலக் கல்லூரி, திருவள்ளுவர் அரங்கத்தில் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை சார்பில் “தமிழ்நாடு நாள்” விழா நேற்று நடந்தது. விழாவில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தமிழன்னை, அண்ணா, கலைஞரின் உருவ படங்களுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். தமிழ்நாடு நாள் விழாவை முன்னிட்டு சென்னை மாநில கல்லூரி, திருவள்ளுவர் அரங்கத்தில் நேற்று பள்ளி மாணவர்களுக்கு நடந்த மாநில அளவிலான பேச்சு மற்றும் கட்டுரை போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுத்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்கினார். மேலும், முதலமைச்சர் கணினி தமிழ் விருதுகளையும் வழங்கினார். விழாவில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சிறப்புரையாற்றினார்.

நிகழ்ச்சியில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசியதாவது: அண்ணா தமிழ்நாட்டின் முதல்வராக பொறுப்பேற்றபொழுது, அன்றைக்கு கலைஞரும் அந்த அமைச்சரவையில் இடம்பெற்றிருந்தார். அன்றைக்கு இதே நாளில் 1967ம் ஆண்டு சட்டமன்றத்தில் “தமிழ்நாடு” என்று நாம் இனிமேல் அழைப்போம் என்று அறிவித்தார். அந்த அறிவிப்பின் அடிப்படையில் தான், முதல்வர் அதை கடைபிடிக்கின்ற வகையில் இந்த அரசாணை வெளியிட்டார். அந்த வகையில், இது இரண்டாவது ஆண்டாக இந்த நிகழ்ச்சி நடக்கிறது. இந்த ஆண்டு முதல், ஒவ்வொரு மாவட்டத்தினுடைய தலைநகரங்களில் இந்த விழா நடக்கிறது.

இன்றைக்கு மாணவ செல்வங்கள் பொது அறிவை வளர்த்துக் கொள்ளுகிற வகையில் நல்ல நூல்களை படிக்க வேண்டும். அந்த வகையில் தான், கலைஞர் சென்னையில் அண்ணா நூற்றாண்டு நூலகத்தை எழுப்பி தந்தார். அதேபோல, இன்றைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை உருவாக்கி தந்திருக்கிறார். இன்றைக்கு ஆங்காங்கே இருக்கக்கூடிய நூலகங்களையும், செய்திகளையும், வரலாறுகளையும் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும் என்றார். விழாவில் மாநில கல்லூரி முதல்வர் இரா.ராமன், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் செல்வராஜ், செய்தி மக்கள் தொடர்பு துறை இயக்குநர் மோகன், சென்னை மாநகராட்சி துணை மேயர் மகேஷ்குமார் மற்றும் ஆழி செந்தில்நாதன், ம.ராசேந்திரன், சுப.வீரபாண்டியன், அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related posts

சாத்தான்குளம் கொலை வழக்கு: காவலர் தாமஸுக்கு ஜாமின் வழங்கியது ஐகோர்ட் கிளை

தமிழகத்தில் 12ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

முதலமைச்சருக்கு பிரிட்டன் எம்.பி. உமா குமரன் நன்றி..!!