பொது சிவில் சட்டம் மூலம் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைவதை பிரிக்க முடியும் என பாஜக நினைத்தால் நிச்சயம் பாஜகவினர் ஏமாந்து போவார்கள்: கி.வீரமணி

சென்னை: பொது சிவில் சட்டம் மூலம் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைவதை பிரிக்க முடியும் என பாஜக நினைத்தால் நிச்சயம் பாஜகவினர் ஏமாந்து போவார்கள் என திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார். சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தலைமையில் திராவிட கழகத்தின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த ஆசிரியர் கி.வீரமணி, “ஆளுநர் பதவி விலக வேண்டும், நீட் மற்றும் நெக்ஸ்ட் தேர்வுகளை நிரந்தரமாக நீக்க வேண்டும் உள்ளிட்ட 12 தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

ஆளுநர் ஆர்.என்.ரவி பதவி விலக வேண்டும் இல்லையென்றால் மத்திய அரசு ஆளுநரை திரும்ப பெற வேண்டும். இதுவரை ஆளுநரை ஆதரித்து வந்த அண்ணாமலை கூட ஆளுநர்கள் அரசியல் பேசக்கூடாது. கடமையை செய்ய வேண்டும் எனக் கூறுகிறார். வங்கிகளில் கிளார்க் பணிகளில் வேண்டுமென்றே வட மாநிலத்தை சேர்ந்தவர்களை பணியமர்த்தம் செய்கிறார்கள். எனவே அரசுடமையாக்கப்பட்ட வங்கிகளின் கிளார்க் பணிகளில் தகுதி படைத்த தமிழ்நாட்டு இளைஞர்களின் வேலைவாய்ப்பு பறிக்கப்படுவதை கண்டித்து ஜூலை 14 ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், மணிப்பூர் கலவரம் போன்ற பிரச்சனைகளை சமாளிக்க முடியாமல் பிரதமர் வெளிநாடு செல்கிறார். பாஜக அரசின் பலவீனம் நாளுக்கு நாள் வெளி வருகிறது. பொது சிவில் சட்டம் சிறுபான்மையினரை வஞ்சிக்கும் வகையில் கொண்டு வரப்படும் சட்டம். பொது சிவில் சட்டம் மூலம் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைவதை பிரிக்க முடியும் என பாஜக நினைத்தால் நிச்சயம் பாஜகவினர் ஏமாந்து போவார்கள்” என்றார்.

Related posts

பாலியல் தொல்லை தந்த ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்காததால் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்

எதிர்கட்சிகளின் எதிர்ப்பு, சுப்ரீம் கோர்ட்டில் புதிய மனு தாக்கலுக்கு மத்தியில் 3 புதிய கிரிமினல் சட்டங்கள் நாளை மறுநாள் அமல் : பாதிக்கப்பட்டவர்கள் புகாரளிக்க புதிய தொழில்நுட்ப வசதிகள்

காஞ்சிபுரம் அருகே ஓடும் காரில் தீ