Saturday, September 14, 2024
Home » மிதுன ராசிக்காரர்களின் வீட்டுக் கனவை நனவாக்கும் பெருமாள்

மிதுன ராசிக்காரர்களின் வீட்டுக் கனவை நனவாக்கும் பெருமாள்

by Lavanya

நெறிப்படுத்தப்பட்ட புதனை அதிபதியாகக் கொண்டது மிதுன ராசி. எவ்வளவு பெரிதாக சாதித்தாலும், ‘‘இன்னும் நல்லா பண்ணியிருக்கலாம்னு தோணுது’’ என்பீர்கள். மிதுன ராசியின் குறியீடே இரட்டைத் தன்மையைத்தான் குறிக்கிறது. அதனால், எத்தனை சரியாக யோசித்தாலும், ‘சரியில்லையோ’ என்கிற தடுமாற்றத்தைத் தவிர்க்க முடியாது. அப்படித்தான் வீட்டு விஷயங்களிலும் நடக்கும். அதில் இந்த ராசிக்குள் வரும் திருவாதிரை மட்டும் கொஞ்சம் விதிவிலக்கானது. மிதுன ராசியின் அதிபதி புதன். மேலும் வீட்டு யோகத்தை அளிக்கும் நான்காம் இடத்திற்கு அதிபதியும் புதன்தான். ‘‘எனக்கு வீடு வாங்கறதுதான் லட்சியம்’’ என்றெல்லாம் சொல்ல மாட்டீர்கள். எங்கும் உதவி கேட்கப் பிடிக்காது. லோனுக்கு அலைவதற்கு யோசிப்பீர்கள். ‘‘அமையும்போது எல்லாம் அமையும். அதுக்காக இப்ப இருந்தே வாயைக் கட்டி, வயித்தைக் கட்டி அவஸ்தைப்படணுமா’’ என்று கேட்பீர்கள். ‘‘நமக்குத்தான் வீடு அடிமையே தவிர, நாம வீட்டுக்கு அடிமையாகக் கூடாது. சொந்த வீடு இல்லையேன்னு கவலைப்படறது எனக்குப் பிடிக்காது’’ என்பீர்கள். ஆனால், நெருங்கிய நண்பர்கள் நெருக்கினால் யோசிப்பீர்கள். ‘‘இந்தக் காலத்துல செங்கல், மண்ணு விக்கற விலைக்கெல்லாம் கடன் வாங்காம வெறும் சேமிப்புல வீடு வாங்க முடியாது. சட்டு புட்டுனு ஏதாவது ஒரு வீட்டைப் பார்த்து முடி’’ என்கிறபோது கொஞ்சம் விழித்துக் கொள்வீர்கள். உங்களுக்கு நல்லதைச் செய்யும் பூர்வ புண்யாதிபதியும், கட்டிடகாரகனுமாக சுக்கிரன் வருகிறார்.

உங்கள் ராசிநாதனான புதன் கொஞ்சம் பலமிழந்திருந்தாலும், வீட்டு ஆசையைத் தூண்டும் சுக்கிரன் வலுவாக இருந்து அந்த ஆசையை நிறைவேற்றுவார். கவலைப்படாதீர்கள். பூமிகாரகன் என்று செவ்வாயை சொல்கிறோம். அந்த செவ்வாய் உங்கள் ராசிக்கு ஆறாம் வீட்டின் அதிபதியாக வருகிறார். ஆறாம் வீடு என்பது கடன், நோய், எதிரிகளைப் பற்றி சொல்வதாகும். எனவே வெறும் இடமாக வாங்கிப் போடாதீர்கள். முதன்முதலில் சொத்து வாங்கும்போது கட்டிய வீடாகவோ, அபார்ட்மென்ட்ஸ் மாதிரியோ வாங்குங்கள். ‘முதல்ல இடத்தை வாங்கிப் போடுவோம். அப்புறமா வீடா கட்டிக்கலாம்’ என்று நினைத்தால், ஆறாம் இடத்து செவ்வாய் உங்களுக்கு எதிர்மறையாக இருப்பதால் வீட்டைக் கட்ட விடாது. மிதுன ராசிக்கு பொதுவாக இப்படி சில விஷயங்கள் இருந்தாலும், அதற்குள் வரும் நட்சத்திரக்காரர்களுக்கு எப்படி? மிருகசீரிஷம் நட்சத்திரத்தின் முதல் இரண்டு பாதங்கள் ரிஷபத்திலும், அடுத்ததாக வரும் 3, 4 பாதங்கள் மிதுனத்திலும் வருகின்றன. இந்த நட்சத்திரத்தை செவ்வாய்தான் ஆட்சி செய்கிறது. ஆனால், ஏனோ உங்களுக்கு அவ்வளவு எளிதில் வீடு அமைவதில்லை.

‘நாம வாங்கற சம்பளம்தான் அவரு வாங்கறாரு. அவருக்கு அம்சமா வீடு அமைஞ்சிடுச்சு. நமக்கு ஒண்ணுமே அமையலையே’ என்று உள்ளுக்குள் ஆதங்கப்படுவீர்கள். பொதுவாகவே 41, 42 வயதில்தான் வீடு அமையும். அதற்குப் பிறகு இன்னும் சில வீடுகளாக 55, 56 வயதில் வாங்கும் யோகம் ஏற்படும். பிள்ளைகளுக்கு சொத்து சேர்ப்பதற்காக உங்களில் சிலர் வீட்டுக் கடனில் சிக்கிக் கொள்வீர்கள். ஆரம்பத்தில் அதனால் கொஞ்சம் கஷ்டப் படுவீர்கள். ‘வீட்ல இருந்து பார்த்தா, அதோ அந்த மலையடிவாரம் தெரியும்’ என்பது மாதிரியான இடங்களில் வீடு வாங்கினால் அது அதிர்ஷ்டத்தைத் தரும். கல்லும், மண்ணும் கலந்த பூமியே உங்கள் நட்சத்திரத்திற்கு நல்லது. மலையடிவாரத்தில் அமையவில்லையெனில் மருத்துவமனை, கெமிக்கல் கம்பெனி, மெடிக்கல் ஷாப், ரேஷன் கடை, அரிசி மண்டி போன்றவற்றின் அருகில் வாங்குங்கள். இவையெல்லாமுமே செவ்வாயின் ஆளுகைக்கு உட்பட்ட இடங்கள். வீட்டின் தலைவாசலை தெற்கு, தென்கிழக்கு பக்கமாக வைத்துக் கட்டினால் வளம் பெருகும். எப்போதுமே உங்களுக்கு சொந்த ஊரிலுள்ள சொத்து தங்காது. பிள்ளைகள் பெயரில் சொத்து வாங்குவது நல்லது. சிறிய வயதுப் பிள்ளைகளாக இருந்தால் வாழ்க்கைத்துணை பெயரில் வாங்குங்கள்.

நீங்கள் மிருகசீரிஷ நட்சத்திரத்தில் பிறந்த பெண்ணாக இருந்தால் கணவரின் பெயரில் வீடு இருக்கட்டும். இதையும் மீறி வாங்குகிறீர்கள் என்றால், ‘‘பையனை மெடிக்கல் காலேஜ் சேர்க்கணும். அதுக்காக வீட்டை வித்துட்டேன்’’ என்று பின்னாளில் சொல்வீர்கள். நாலைந்து சேமிப்பு பாலிஸி, பத்திரம் என்று வைத்திருந்து அதில்தான் இடத்திற்கான முன்தொகையைக் கொடுப்பீர்கள். அஸ்வினி, மகம், மூலம், உத்திரம், உத்திராடம், ரோகிணி, ஹஸ்தம் போன்ற நட்சத்திரங்கள் நடக்கும் நாளில் பத்திரப் பதிவும், புதுமனை புகுவிழாவும் வைத்துக் கொள்ளுங்கள். வீடு விருத்தியாகும். திருவாதிரை நட்சத்திரக்காரர்கள், ‘வீடு வேண்டும்… இன்னும் அதில் நிறைய வசதி வேண்டும்…’ என்று வீட்டைப் பற்றி வண்ண வண்ணக் கனவுகளைக் காண்பீர்கள். ஆகாயக் கோட்டைகள் கட்டுவீர்கள். ‘‘சுப்ரமணி வீடு கட்டணும்னுகேட்டான். அவனுக்கு ரெண்டு லட்சம் கொடுத்தேன். சொக்கலிங்கம் கேட்டான். அவனுக்கு மூணு கொடுத்தேன். இப்போ எனக்குன்னு ஒரு இடம் பார்க்கும்போது யாரும் கொடுத்து உதவலை’’ என்று எடுத்து வைத்த பணம் கரைவதற்கு முன்பு வீடு வாங்கிவிட வேண்டும். தெருப் பெயர் முதல் அதன் அமைப்பு வரை எல்லாமே பழமையானதாக இருக்க வேண்டுமென்று விரும்புவீர்கள். தேரடித் தெரு, தெற்கு சந்நதி வீதி, பெருமாள் கோயில் வடக்கு தெரு என்றெல்லாம் பெயர் இருந்தால் நல்லது.

ஆனால், அதில் உங்கள் வீடு நவீனமாக இருக்கும்படி கட்டுவீர்கள். நீங்கள் ராகுவின் நட்சத்திரத்தில் பிறந்திருப்பதால் சந்து குத்து, தெருக் குத்து, வாஸ்து அம்சம் குறைந்த வீடுகள் கிடைத்தாலும் வாங்குவீர்கள். அதனால் உங்களுக்கு எந்தப் பிரச்னையும் வராது. நீங்கள் வாங்கும் வீட்டின் உரிமையாளர், வாழ்க்கைத் துணையை இழந்தவராக இருப்பதற்கு நிறைய வாய்ப்புகள் உண்டு. அரசு வங்கிக் கடனைவிட தனியார் வங்கிக் கடன் சீக்கிரம் கிடைக்கும். பழைய நண்பர்கள் மற்றும் உங்களால் பயனடைந்தவர்கள் தேடிவந்து உதவுவார்கள். வீட்டின் தலைவாசலை வடக்கு, வடகிழக்கு திசையை நோக்கி வைத்துக் கட்டுங்கள். ‘‘அட்வான்ஸ் கொடுத்த அப்புறமா ஒரு சதுரடிக்கு ஐநூறு ரூபா தர்றேன்னு வர்றாங்க. நான் தரமுடியாதுன்னு சொல்லிட்டேன். இப்போ கூட டிமாண்ட் இருக்கு’’ என்று வீட்டை வாங்குவதற்கு முன்பாகவே பெருமை பொங்க பேச ஆசைப்படுவீர்கள். வீட்டை கட்டிவிட்டு அடிக்கடி நிறத்தை மாற்றிக் கொண்டே இருப்பீர்கள். 27, 39, 42 வயதுகளில் சொந்த வீடு கட்டுவீர்கள். பூர்வீகச் சொத்தை, ‘‘அண்ணன் இருக்காரு… அக்கா பார்த்துக்கறாங்க…’’ என்று விட்டுக் கொடுப்பீர்கள்.வாங்கியதை அவ்வளவு சீக்கிரம் விற்க மாட்டீர்கள். ‘‘முதல்ல இந்த இடத்துல வாங்கும்போது ஆட்டோக்காரர் கூட வரத் தயங்கினாரு. ஆனா, இப்போ சிட்டி மாதிரி ஆயிடுச்சி. எனக்குத் தெரியும், எந்த ஏரியா எழும்; எந்த ஏரியா விழும்னு’’ என்று பேசுவீர்கள். எதையுமே பெரிதாகச் செய்ய நினைப்பீர்கள்.

கட்டினால் பெரிய வீடு. இல்லையென்றால் பெரிய வீட்டில் வாடகைக்கு இருப்பீர்கள். கூட்டுக் குடும்பம் பிடிக்கும். ஆனாலும், ‘‘தங்கச்சி கல்யாணம் லேட்டானதுனால வீடு கட்டறதும் லேட்டாயிடுச்சி’’ என்று சொல்லவும் மறக்க மாட்டீர்கள். பத்திரப்பதிவோ அல்லது புதுமனை புகுவிழாவோ ரோகிணி, மிருகசீரிஷம், ஹஸ்தம், சித்திரை போன்ற நட்சத்திரங்கள் நடைபெறும் நாட்களில் வைத்துக் கொள்ளுங்கள். புனர்பூசம் 1, 2, 3 பாதங்களில் பிறந்தவர்கள் கொஞ்சம் வித்தியாசமானவர்கள். ‘‘வரும்போது ஒன்றும் கொண்டு வருவதில்லை. போகும்போதும் எதையும் கொண்டுபோகப் போவதில்லை’’ என்று சொல்லியே காலத்தை கடத்துவீர்கள். தங்களை வருத்திக் கொண்டு வீடு வாங்கும் வழக்கம் இருக்காது. வாழ்க்கைத்துணையின் வற்புறுத்தலின் பேரில்தான் வீட்டுக் கடனுக்கு சம்மதிப்பீர்கள். ‘‘இப்போதான் பூமி பூஜை போட்டிருக்காங்க. கட்டி முடிச்சு சாவியைக் கையில் கொடுக்கறதுக்கு எப்படியும் மூணு வருஷம் ஆயிடும்’’ என்று எவரேனும் சொன்னால் நீங்கள் அந்த இடத்தை வாங்கிப்போடுவது நல்லது. எப்போதுமே மலைப்பு இருந்தால் அந்த காரியத்தை தள்ளிப் போடும் குணம் உண்டு. ‘‘முதல்ல அஞ்சு லட்சம் கொடுங்க… அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா கொடுங்க’’ என்றால் உடனே ஒப்புக் கொள்வீர்கள். எதற்குமே போதுமான நேரம் வேண்டுமென்று கேட்பீர்கள். புனர்பூசத்தில் நிறைய பேருக்கு வெளிநாடுகளில் வீடு வாங்கும் வாய்ப்பு உண்டு.

அங்கு வீட்டை விற்றுவிட்டு இந்தியாவிற்கு வந்து விடுவீர்கள். உங்களுக்கு சில விஷயங்கள் தங்காமலேயே போய்விடும். எனவே வாழ்க்கைத் துணையின் பெயரில் பதிவு செய்யுங்கள். வடக்கு, வடகிழக்கு, தென் கிழக்கு திசையை நோக்கி தலைவாசல் இருப்பது நல்லது. 28, 32, 33 வயதில் வீடு கட்டுவீர்கள். நீங்கள் எந்த ஊரில் இருக்கிறீர்களோ அந்த ஊரின் வடக்கு, வடகிழக்கு திசையிலேயே வீடு வாங்குங்கள். பள்ளி, கோயில், வங்கி அதிகாரிகள் குடியிருப்பு பகுதிக்கு அருகில் வீடு அமைந்தால் நல்லது. மூன்று வகையான மண் உள்ள பூமி அமையும். மேல் மண் மணல் போலவும், களிமண் மற்றும் சுண்ணாம்பு பாறை தெரியும் பூமியும் கிடைத்தால் விட்டு விடாதீர்கள். பெரும்பாலும் மொட்டை மாடி வருகிற தளத்திற்கு அருகில்தான் வசிக்க விரும்புவீர்கள். பூசம், அனுஷம், உத்திரட்டாதி, உத்திரம், சித்திரை, சுவாதி போன்ற நட்சத்திர நாட்களில் பத்திரப் பதிவையும், புதுமனை புகுவிழாவையும் வைத்துக் கொள்ளுங்கள். வாழ்க்கை வளம் பெறும்.மிதுன ராசிக்கு வீட்டு யோகத்தை நிர்ணயிக்கும் புதனைவிட, பூர்வ புண்ணியத்தை அளிக்கும் சுக்கிரன்தான் வீட்டு யோகத்தை அளிப்பார்.

எனவே, குபேரன் வழிபட்ட தலங்களுக்குச் சென்று வழிபட்டு வாருங்கள். அப்படி நீங்கள் செல்ல வேண்டிய தலமே திருக்கோளூர் ஆகும். குபேரன் ஒன்பது வகையான நவநிதிகளுக்கும், எண்ணிலடங்கா பெருஞ்செல்வத்துக்கும் தலைவனாகி தனது அளகாபுரியை ஆண்டான். பார்வதி தேவியின் சாபத்தால் நவநிதிகளையும் இழந்தான். திருமால் நவநிதிகளையும் தன் அருகே வைத்து பாதுகாப்பளித்து அதன் மீது சயனம் கொண்டார். அதனாலேயே அவருக்கு வைத்தமாநிதிப் பெருமாள் எனும் திருநாமம் உண்டாயிற்று. குபேரன் பார்வதியிடம் மன்னிப்புக் கோரினான். திருக்கோளூர் வந்து பெருமாளைக் குறித்து பெருந்தவம் புரிந்து மன்றாடினான். திருமால் குபேரனை மன்னித்து நவநிதிகளைத் தந்தருளினார். ‘‘கையில பத்து பைசா இல்லை. ஆனா, வீடு வாங்கணும்னு ஆசையா இருக்கு’’ என்று தவிப்போர் இங்கு செல்லலாம். இத்தலம் திருநெல்வேலி – திருச்செந்தூர் சாலையில் 31 கி.மீ. தொலைவில் உள்ளது.

 

You may also like

Leave a Comment

14 − 6 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi