காசாவின் ஜபாலியா அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் தாக்குதல்.. 100க்கும் மேற்பட்டோர் பலி; ஹமாஸ் தலைவர் மரணம்

காசா: காசாவின் ஜபாலியா அகதிகள் முகாம் மீது மீண்டும் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 100க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இஸ்ரேல் – ஹமாஸ் இடையிலான யுத்தம் ஒரு மாதத்தை எட்ட உள்ள நிலையில், காசா மீது இரவு பகல் பாராது இஸ்ரேல் குண்டு மழை பொழிந்து வருகிறது. ஹமாஸ் அமைப்பினர் பதுங்கி இருப்பதாக கூறி, குடியிருப்புகள் மீது இஸ்ரேல் நடத்தி வரும் வான்வழி தாக்குதலால் மக்கள் கொத்து கொத்தாக கொல்லப்பட்டு வருகின்றனர். இதனிடையே தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளாகி சிதைந்து வரும் ஜபாலியா அகதிகள் முகாமில் ஹமாஸ் கமாண்டர் பதுங்கி இருப்பதாக கூறி இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 100க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

ஜபாலியா முகாம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் தளபதி இப்ராஹிம் பியரி மரணம் அடைந்துள்ளார். அகதிகள் முகாமில் குழந்தைகள் உட்பட உயிரிழந்த பலரின் உடல்கள் இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டனர். மீட்கப்பட்ட உடல்களை கண்டு உறவினர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். கடந்த சில நாட்களாக தரைவழி தாக்குதலையும் தீவிரப்படுத்தி இருக்கும் இஸ்ரேல் ராணுவம், காசாவில் தொடர்ந்து முன்னேறி வருகிறது. ஹமாஸ் இயக்கத்திற்கு ஆதரவாக யுத்தத்தில் இறங்கிய லெபனான் நாட்டுக்குள்ளும் புகுந்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது.

இதனிடையே மேற்கு கரையில் இருந்த ஹமாஸ் தலைவர் ஒருவரின் வீட்டை இஸ்ரேல் ராணுவ வீரர்கள் வெடி வைத்து தகர்த்த காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இஸ்ரேல் தங்கள் குடிமக்களை பாதுகாப்பதற்காக யுத்தம் நடத்துவதாக ஆதரவு தெரிவித்து வரும் அமெரிக்கா, நிதியையும் வாரி வழங்குகிறது. இஸ்ரேலுக்கு நிதி வழங்குவது தொடர்பாக அமெரிக்க நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தப்பட்டு இருந்த போது, போருக்கு எதிரான போராட்டக் காரர்கள் திடீரென அவைக்குள் புகுந்து இருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அவைக் காவலர்கள் போராட்டக் காரர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றினர்.

Related posts

திருக்கோவிலூரில் இன்று அதிகாலை மின்மாற்றி வெடித்து பயங்கர தீ விபத்து

தாராபுரம் அருகே தந்தம், மான் கொம்பு பறிமுதல்..!!

ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து 4 ஆயிரம் கனஅடியாக நீடிப்பு