காசாவில் 2000 குழந்தைகள் பலி.. பாலஸ்தீன மக்கள் 56 ஆண்டுகளாக ஆக்கிரமிப்புகளை எதிர்கொண்டு வருவதாக ஐ.நா.கவலை!!

நியூயார்க் : இஸ்ரேல் -ஹமாஸ் போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அதுபற்றி விவாதிக்க ஐ.நா. பொது சபை நாளை கூடுகிறது. போருக்கு முற்றுப்புள்ளி வைக்க ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் முயற்சி தோல்வி அடைந்ததால் உறுப்பு நாடுகளுக்கு அவசர கூட்டத்திற்கான அழைப்பு விடுக்கப்பட்டது. இஸ்ரேல்-ஹமாஸ் அமைப்பு இடையே அக்.7ம் தேதி தொடர்ந்த போர் 19வது நாளாக நீடித்து வருகிறது. இருதரப்பிலும் பலி எண்ணிக்கை 7,000ஐ கடந்துள்ளது. போரில் இதுவரை 5,087 பேர் உயிரிழந்துள்ளதாக காசா சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. 2,055 குழந்தைகள், 1,119 பெண்கள், 217 முதியவர்கள் உயிரிழந்துள்ள நிலையில், 15,273 பேர் காயமடைந்துள்ளனர்.1,500 பேர் காணாமல் போனதாகவும், அதில் 830 பேர் குழந்தைகள் எனவும் காசா சுகாதாரத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே ஐக்கிய நாடுகள் சபை பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் பேசிய ஐ.நா. பொதுச் செயலாளர் அண்டானியோ குட்டரஸ், பாலஸ்தீன மக்கள் 56 ஆண்டுகளாக மூச்சுத் திணறும் அளவிற்கு ஆக்கிரமிப்புகளை எதிர்கொண்டு வருவதாகவும் ஹமாஸின் தாக்குதல்கள் வெற்று இடத்தில் நடத்தவில்லை என்பதை அங்கீகரிப்பது முக்கியம் எனவும் பேசினார். மேலும் சர்வதேச மனிதாபிமான சட்டங்கள் காசாவில் தெளிவாக மீறப்படுவதை நாம் கண்கூடாகப் பார்த்து வருவது கவலை அளிப்பதாக குறிப்பிட்ட நிலையில், அதே நேரம் ஹமாஸ் தாக்குதலை தாம் நியாயப்படுத்தவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஐ.நா. பொதுச் செயலாளரின் பேச்சு ஒருதலைப்பட்சமாக இருப்பதாக கண்டனம் தெரிவித்துள்ள இஸ்ரேல், அவர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி உள்ளது.

Related posts

வங்கி ஆவணங்களை கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்ந்த வழக்கில் ஜூலை 8-ம் தேதி உத்தரவு

ஜார்க்கண்ட் முதலமைச்சராக இன்று மாலை 5 மணிக்கு மீண்டும் பதவியேற்கிறார் ஹேமந்த் சோரன்

கோயம்பேட்டில் பேருந்து உள்பட வாகனங்கள் எரிந்த சம்பவம்: கூலித் தொழிலாளி பழனிமுத்துவிடம் போலீஸ் தீவிர விசாரணை