காசாவில் இருந்து பத்திரிகையாளர் வெளியிட்டுள்ள வீடியோ: தஞ்சமடைய வேறு இடமே இல்லை என பதட்டத்துடன் கூறிய பெண்

காசா: இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் படைகள் இடையேயான போரில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3000 கடந்த நிலையில் 5வது நாளாக இருதரப்பிலிருந்தும் தாக்குதல் தொடர்ந்து வருகிறது. கடந்த 7ம் தேதி இஸ்ரேல் மீது காசாவிலிருந்து ஹமாஸ் படைகள் திடீரென ஏவுகணை தாக்குதலை நடத்தினர். அதனை தொடர்ந்து இஸ்ரேல் காசா மீது பதில் தாக்குதலை தொடங்கியது இதனால் அங்கு போர் மூண்டுள்ளது.

5வது நாளாக தாக்குதல் நடந்து வருகிறது. இரவு நேரத்தில் காசா முனை மீது இஸ்ரேலின் ஏவுகணை தாக்குதல் தொடர்ந்தது. இஸ்ரேலின் தாக்குதலில் காசாவில் உள்ள கட்டடங்கள் பெரும்பாலும் இடிந்து நாசமாகியுள்ளது. அங்கிருந்து லட்சக்கணக்கானோர் வேறு இடத்தில் தஞ்சமடைந்தனர். 75 ஆண்டுகாலத்தில் இல்லாத அளவுக்கு காசா முனையில் மோசமான சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில் தரை வழி தாக்குதலை தொடங்க உள்ளதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.

இதற்காக காசா எல்லையில் இஸ்ரேல் நாட்டு ராணுவத்தினர் குவிக்கப்பட்டுவருவதாக அந்நாட்டு பாதுகாப்பு துறை அமைச்சர் யோகலன்ட் தெரிவித்துள்ளார். இந்நிலையில் காசாவிலிருந்து அந்த பகுதியை சேர்ந்த பத்திரிகையாளர் ஒருவர் பகிர்ந்த வீடியோ அதிகம் பகிரப்பட்டு வருகிறது. அல்காத் என்ற அந்த பெண் பகிர்ந்துள்ள வீடியோவில் அவர் தங்கியுள்ள கட்டடத்தில் சுற்றியுள்ள மற்ற கட்டடங்கள் சேதமடைந்துள்ள காட்சி பதிவாகியுள்ளது.

இதுவரை மூன்று முறை இடம்மாறி சென்றுவிட்டதாகவும் இனி தப்பி செல்ல இடமே இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். இஸ்ரேல் மீது ஹமாஸ் படை நடத்திய தாக்குதலில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1,008ஆக உயர்ந்துள்ளது. 3400 பேர் காயமடைந்துள்ளனர். இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 900 பொதுமக்கள் உயிரிழந்த நிலையில் 4,250 பேர் காயமடைந்தனர். மேலும் இஸ்ரேலுக்குள் நுழைந்த 1,500 ஹமாஸ் படையினரும் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் அமெரிக்காவின் ராணுவ கப்பல்கள் மற்றும் விமானங்கள் இஸ்ரேலுக்கு அருகே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இஸ்ரேலுக்கு ஆதரவை காட்டும் வகையில் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இந்நிலையில் இஸ்ரேல் அதிபர் நெடன்யாகுவுடன் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தொலைபேசி வாயிலாக பேசினார். அமெரிக்கா அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக இருப்பதாக அவர் உறுதியளித்துள்ளார்.

ஐஎஸ்ஐஎஸ் அமைப்பைவிட ஹமாஸ் மோசமானவர்கள் என பைடனிடம் நெடன்யாகு கூறினார். மேலும் காசாவில் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்த வேண்டாம் என அமெரிக்கா வலியுறுத்தியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது இந்நிலையில் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிலிங்கன் இஸ்ரேலுக்கு பயணம் மேற்கொள்ள இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு

தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

பருவமழை முன்னெச்சரிக்கையாக சாலை, பாலங்கள் பராமரிப்பு பணி தீவிரம்