குடித்துவிட்டு வந்து தகராறு: பெட்ரோல் ஊற்றி எரித்து தந்தையை கொன்ற மகன்

விருதுநகர்: பால் விற்ற பணத்தில் தினசரி குடித்துவிட்டு வந்து தகராறு செய்ததால், தந்தையை மகனே பெட்ரோல் ஊற்றி எரித்து கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகே உள்ள டி.கோட்டையூரைச் சேர்ந்தவர் கிருஷ்ணசாமி (60). பால் வியாபாரி.

இவரது மனைவி மாரியம்மாள் (55). இவர்களுக்கு கருப்பசாமி (35), சஞ்சீவ்குமார் என்ற மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இதில் சஞ்சீவ்குமார் ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். கருப்பசாமி தனது தந்தையுடன் பால் வியாபாரம் செய்து வந்தார்.

இந்நிலையில், கிருஷ்ணசாமி பால் விற்று கிடைக்கும் பணத்தில் தினமும் குடித்து வந்து வீட்டில் தகராறு செய்துள்ளார். இதனால், கிருஷ்ணசாமிக்கும் கருப்பசாமிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், நேற்றிரவு கிருஷ்ணசாமி குடித்துவிட்டு வந்ததால் தந்தை-மகன் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. பின் இருவரும் தூங்கச் சென்றனர்.

இருப்பினும் ஆத்திரம் தீராத கருப்பசாமி, நள்ளிரவு 12 மணியளவில் போதையில் தூங்கி கொண்டிருந்த தந்தை கிருஷ்ணசாமி மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்தார். இதில், வலி தாங்க முடியாமல் கிருஷ்ணசாமி அலறினார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து தீயை அணைத்து அவரை மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி கிருஷ்ணசாமி இறந்தார். இச்சம்பவம் குறித்து வெம்பக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து கருப்பசாமியை கைது செய்தனர். தந்தையை மகன் பெட்ரோல் ஊற்றி எரித்து கொன்ற சம்பவம் ஏழாயிரம்பண்ணை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவருக்கு அரிவாள் வெட்டு

கட்டுமான தொழில் கடுமையாக பாதிப்பு; ஆந்திராவில் இருந்து மணல் எடுத்து வர அனுமதி: முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு லாரி உரிமையாளர்கள் சங்கம் கடிதம்

உமா குமரன் வெற்றி பெற்றதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து