குர்தீஸ் லவ்வருக்கான கார்மென்ட்ஸ்!

நன்றி குங்குமம் தோழி

நீங்க குர்தீஸ் லவ்வரா? ஃபிட்டா உடை உடுத்தணுமா? அப்படீன்னா உங்களுக்கானதுதான் இது…‘‘கிரியேட்டிவ் வாய்ப்பு பெண்கள் உடைக்குதான் அதிகம். நாம எவ்வளவு பேட்டர்ன்களை பெண்களுக்கு டிசைன் செய்தாலும், புதுசா என்ன டிசைன்? என்ன பேட்டர்ன் இருக்கு என்று தான் பெண்கள் தேடி வருவார்கள்.

டிசைனிங்ஸ் பொறுத்தவரை ஆண்கள் உடைக்கு 10 சதவிகிதம் என்றால் பெண்கள் உடைக்கு 90 சதவிகிதமும் கிரியேட்டிவிட்டி தேவைப்படுகிறது. நான் 90 சதவிகிதத்தை தேர்ந்தெடுத்தேன்’’ எனப் பேச ஆரம்பித்தவர், கிராஸ் கலர்ஸ் (cross colors) என்கிற பெயரில் கார்மென்ட் யூனிட்டை நடத்தியபடியே, பெண்களுக்கு பிரத்யேகமான காட்டன் குர்த்திகளை விதவிதமாக வடிவமைத்து விற்பனை செய்து வரும் ராஜேஷ்.

‘‘நான் நெசவாளர் குடும்பத்தில் பிறந்தவன். காலம் காலமாக நெசவுதான் எங்கள் தொழில். தமிழ்நாட்டையும், ஆந்திராவையும் பிரிக்கும்போது நாங்கள் ஆந்திரா சென்றுவிட்டோம். அதனால் எனக்கு தாய்நாடு ஆந்திரா என்றாலும் தாய் மொழி தமிழ்தான்.எனது குடும்பத்தில் நான்தான் கடைசி நெசவாளி. கலம்காரி, இக்கட், மங்களகிரி காட்டனில் நான் ஸ்பெஷலிஸ்ட். கலம்காரியில் சென்னையில் நம்பர் ஒன் இடத்தில் இருக்கிறேன்’’ என்றவர், ‘‘வெரைட்டியான பேப்ரிக்ஸ் கலந்து ப்யூஷன்ஸ் முறையில் குர்த்திகளை பிரத்யேகமாக வடிவமைப்பதில் நான் ஸ்பெஷலிஸ்ட்’’ என்கிறார்.

‘‘நெசவு செய்யும் வெள்ளைத் துணியினை அடுத்தவர்களுக்கு கொடுப்பது, அவர்கள் அதனை வாங்கி இன்னொருவருக்கு கைமாற்றுவதுமாக எங்கள் குடும்பம் தொடர்ந்து நெசவுத் தொழிலில்தான் இருந்தது. சிலர் நூலை மொத்தமாக வாங்கிக் கொடுப்பார்கள். அவர்களுக்கு கூலிக்கு மட்டும் நெசவு ஓட்டுவோம். இந்த நிலையை மாற்றி வேறு என்ன செய்யலாம் என மாற்றி யோசிக்க ஆரம்பித்தேன்.

காட்டன் துணியின் முக்கிய பிரச்னையே கலர் போகும். துணி சுருங்கும். இதை அடுத்த கட்டத்திற்கு மேலே கொண்டு சென்று மதிப்புக்கூட்டுவது குறித்த விஷயங்களை ஆராயத் தொடங்கினேன்.சில டெக்னாலஜியை புகுத்தி நெய்ததில், இருப்பதிலே சிறப்பான குவாலிட்டி பேப்ரிக்கை எனக்கே தெரியாமல் நான் வெவ்வேறு இடங்களுக்கு ரீச் செய்யத் தொடங்கி, அது ஃபேப் இந்தியாவரை சென்று, அவர்களிடம் இருந்து நேரடியாக எனக்கே ஆர்டர்கள் வர ஆரம்பித்தது. ரேக்கில் அடுக்கிய பிறகு என் பேப்ரிக்ஸ் 97 சதவிகிதமும் விற்றுத் தீர்ந்திருந்தது. எனவே என் தயாரிப்பு பேப்ரிக்கிற்கு டிமான்ட் ரொம்பவே அதிகமானது’’ என்கிறார் ராஜேஷ்.

‘‘வேல்யூம் வேல்யூமாக எனது பேப்ரிக்கை ஃபேப் இந்தியாவிற்கு சப்ளை செய்ய ஆரம்பித்தேன். மிகப் பெரிய ஆடை நிறுவனத்திற்கு நான் பேப்ரிக் சப்ளை செய்வதைப் பார்த்து வேறுசில முக்கிய நிறுவனங்களும் என்னை அணுகத் தொடங்கினர். மிக விரைவிலேயே மிகப்பெரிய பிராண்ட்களுக்குப் சப்ளை செய்யும் இடத்தை அடைந்தேன். அப்போது பெரிய டிசைனர்களோடு நெருங்கி பழகும் வாய்ப்பு ஏற்பட்டது. கலந்து ஆலோசித்து அவர்கள் ஆடைகளை டிசைன் செய்கிற விதத்தை நேரடியாக என்னால் பார்க்க முடிந்தது. Nothing for men.. everything for women.. என்பதே பெரிய டிசைனர்களிடத்தில் நான் கற்றது.

என்னுடையது எல்லாமே அனுபவ அறிவுதான். மனீஷ் மல்கோத்ரா மாதிரியான மிக முக்கியமான லீடிங் டிசைனர்ஸ்களுடன் வேலை செய்யும் வாய்ப்பும் எனக்கு என் பேப்ரிக்கால் அமைந்தது. பெரிய பிராண்டுகளான ஃபேப் இந்தியா, வெஸ்டிசைடு, பீபா, அருலியா, கோ கலர்ஸ் போன்ற நிறுவனங்களுக்கு பேப்ரிக் சப்ளை செய்யும்போது, அந்த பிராண்ட் டிசைனர்ஸ்களுடன் அமர்ந்து பேப்ரிக்ஸ் குறித்து விவாதித்ததில் அவர்களிடமும் நிறைய கற்றுக்கொண்டேன். நான்கு ஐந்து யுனிவர்சிட்டியில் படித்த ஃபீலை அவை எனக்கு கொடுத்தது. இந்த அனுபவ அறிவுதான் துணிந்து கார்மென்ட் ஸ்டார்ட் செய்யவும் உதவியது.

நல்ல குவாலிட்டி காட்டன் குர்தீகளை நடுத்தர குடும்பத்திற்கும் கிடைப்பது மாதிரி மலிவு விலையில் கொடுக்க வேண்டும் என்பதே என் சிந்தனை. பேப்ரிக்கை சப்ளை செய்து கொண்டிருந்தவன், கார்மென்டாக மாற்றும் முயற்சியை அடுத்து கையிலெடுத்தேன். சென்னை ராமாபுரத்தில் க்ராஸ் கலர்ஸ்(cross colors) என்கிற பெயரில் மிகப்பெரிய கார்மென்ட் யூனிட் ஒன்றைத் தொடங்கியபோது, பெரிய டிசைனர்களிடம் நான் கற்றது முழுமையாய் கை கொடுக்க ஆரம்பித்தது. கார்மென்ட் தொழிலில் வெற்றியும் கிடைத்தது. பெண்கள் அணியும் காட்டன் குர்த்திகான டிசைன்களை நானே முன் நின்று செய்யத் தொடங்கினேன்.

என் முன்னோர்கள் முதலில் வெள்ளைதான் நெய்தார்கள். அதை தாண்டி ஒரு விஷயத்தை மல்டி கலரில் செய்ய வேண்டுமெனில் பாவு ஒரு கலர், ஊடு கலர் ஒன்று போட்டு விதவிதமான கலரில் வித்தியாச வித்தியாசமாக முயற்சித்து 100 ஷேட்ஸ் வரை கலர்களை நானே கண்டுபிடித்தேன். இதில் என்னால் என் ஊருக்கும் நல்ல பெயர் கிடைத்தது.

ஒரு கலரின் மேல் இன்னொரு கலரை கிராஸ் செய்யும் கான்செப்டை அர்த்தப்படுத்தும் விதமாக, எனது கார்மென்ட் யூனிட்டிற்கு கிராஸ் கலர் எனப் பெயரிட்டேன்’’ என்றவர், ‘‘சாதாரண விலையில் குவாலிட்டியான குர்தீஸ் தயாரிப்புதான் எங்களுடையது. குறைந்து 350ல் தொடங்கி குர்தீஸ் கிடைக்கும். நீள லெங்த்… ஆங்கிள் லெங்த்… அனார்கலி மாடல் குர்த்தியும் எங்களிடம் உண்டு. இந்தியன், எத்னிக், இந்தோ வெஸ்டர்ன் உடைகளை, இந்தியன் பேப்ரிக்கில், எத்னிக் டச்சில், இந்தோ வெஸ்டர்ன் ஸ்டைலில் கலந்து நாங்கள் தயாரிப்பதுடன், குர்த்திகளை ஷார்ப்பிட்
செய்யாமல், மாடரேட் பிட்டிங்ஸ் மற்றும் ஷேப்ஸ் தெரியும்விதமாகவும் வடிவமைக்கிறோம்’’ என்கிறார்.

‘‘குர்த்தியில் அதிகமான வேலைப்பாடுகளை டீட்டெய்லாக கொடுக்காமல், எளிமையாய் இருப்பது மாதிரி தயாரிப்பது பெண்களை அதிகம் கவர்கிறது. இத்துடன் பெண்கள் அணியும் பட்டியாலா பேன்ட், லெக்கின்ஸ், துப்பட்டாவும் கிடைக்கும்.எங்களின் தயாரிப்பு குர்த்திகள் அமேசான் மாதிரியான ஆன்லைன் வெப்சைட்டிலும் கிடைக்கும். தவிர ஃபேப் இந்தியா (fab India) மாதிரி மிகப்பெரிய பிராண்ட் நிறுவனத்திற்கும் எங்கள் தயாரிப்பு செல்கிறது. வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கும் எங்கள் கார்மென்டில் கஸ்டமைஸ்ட் செய்து தருகிறோம். தவிர, எங்களிடம் மொத்த விற்பனை சில்லரை விற்பனை என எல்லாமும் உண்டு.

கார்மென்ட் தொழிலில் கஸ்டமர் சேட்டிஸ்பாக் ஷன் மிகமிக முக்கியம்’’ என்றவர், ‘‘எல்லா மீடியத்தைவிட ஹுயுமன் மீடியமே மிகவும் பவர் நிறைந்தது. ஒரு வாடிக்கையாளர் திருப்தி அடையாமல் நமது கடையை விட்டு வெளியேறினாலும், 10 வருடத்தில் அவர் ஆயிரம் வாடிக்கையாளர்களை நேரடியாகவும் மறைமுகமாகவும் தடுத்துவிடுவார்’’ என்கிறார் மிக அழுத்தமாக.
‘‘கோவிட் நோய்த் தொற்று என் தொழிலுக்கு மிகப்பெரிய அடியை கொடுத்தது.

நூற்றுக்கும் மேற்பட்ட என் வாடிக்கையாளர்களின் கடைகள் ஒரேநாளில் ஸ்டாக்குடன் மூடப்பட்டது. இது எனக்கு மிகப் பெரிய இழப்பை கொடுத்தது’’ என்ற ராஜேஷ், ‘‘தற்போது கொஞ்சம் கொஞ்சமாக மீண்டெழுந்து வருகிறேன். விரைவில் எனது தயாரிப்புகளை தமிழகம் முழுவதும் ஆன்லைன் பிரான்சைஸிஸ் செய்ய இருக்கிறேன்’’ என்றவர், ‘‘பிரான்சைஸிஸ் எடுப்பதற்கு மிகக் குறைந்த முதலீடு போதுமானது. அத்துடன் வீட்டில் வைத்தும் செய்யலாம். வாடிக்கையாளர் விரும்பும் பெயரில் பிராண்ட் நேம் வழங்குவதுடன், விலையும் அவர்களே முடிவு செய்து கொள்ளலாம். மேலும் ஊழியர்களுக்கு விற்பனையில் பயிற்சி மற்றும் ஐடியா இத்துடன் விற்காத உடைகளும் எங்கள் நிறுவனத்தில் மாற்றியும் கொடுக்கப்படும்’’ என்கிறார்.

‘‘பெண்கள் இப்பவெல்லாம் டாப்ஸைவிட பாட்டம் வேர்க்கு (bottom ware) அதிக முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்துள்ளார்கள். இந்த டாப்ஸிற்கு என்ன பாட்டம் போட்டால் நன்றாய் இருக்கும் என்பதே பெண்களின் தற்போதைய டிரெண்டாக மாறியிருக்கிறது. காட்டன் பாட்டம் வேரிலும் இனி இல்லாத கலர்களே இல்லை என்கிற அளவுக்கு எல்லா கலர்களையும், பல்வேறு பேட்டனில் கொண்டுவரும் முயற்சியை கையிலெடுத்திருக்கிறேன்’’ என்றவாறு விடைபெற்றார்.

ஒரு உடை முழுமை பெற 6 மாதம் எடுக்கும்!

‘‘நல்ல உடை நமக்கு தன்னம்பிக்கை கொடுக்கும்தான். ஆனால் பல நிலைகளைத் தாண்டி பல பேரோட உழைப்பைத் தாண்டிதான் நமது கைகளுக்கு வருகிறது. உடை தயாரிப்புக்கு பின்னிருக்கும் நெசவாளர்களின் துயரங்களை நாம் ஒரு நாளும் உணர்வதில்லை. ஒரு உடையை நெசவு செய்ய மிகப் பெரிய உழைப்பு இங்கே தேவைப்படுகிறது.

பருத்தி விதையினை பூமியில் போட்டு அது விளைய 3 முதல் 4 மாதம் எடுக்கும். பிறகு பிரித்து ஜின்னிங் பிராசஸிற்குள் கொண்டு வந்து, விதைகளை நீக்கி சுத்தம் செய்து, நூலாக்குவர். பிறகு நூலில் சாயம் ஏற்றி… கஞ்சி போட்டு… பாவாக ஓட்டி… பிறகு தறியில் ஏற்றி… நெசவு செய்து… தரத்தை சோதனை செய்து… தண்ணீரில் சுத்தம் செய்து… மீண்டும் தரம் பார்த்து… பேட்டர்ன் செய்து… ஆடையாக வடிவமைத்து… கடைக்கு வருவதற்குள் குறைந்தது ஆறு மாதம் எடுக்கும். இதில் 250 ஜோடி கரங்கள் தொடர்ந்து ஈடுபடுகிறது. 300 முதல் 500 லிட்டர் தண்ணீர் இதற்கு செலவாகிறது.’’

தொகுப்பு: மகேஸ்வரி நாகராஜன்

Related posts

நுண்ணூட்டச் சத்துகளில் அடங்கி உள்ளது ஆரோக்கியம்!

உன்னத உறவுகள்-நெருக்கம் காட்டும் உறவுகள்

தொகுப்பாளர் முதல் பெண் தொழில்முனைவோர் வரை!