கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீசுவரர் கோயில்

தமிழ்நாட்டின் அரியலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள கங்கைகொண்ட சோழீச்சுவரம் என்று சொல்லப்படும் கங்கைகொண்ட சோழபுரம் சிவன் கோயில் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்டது. கங்கை ஆறுவரை படையெடுத்துச் சென்று வெற்றிபெற்றதன் நினைவாக, கங்கைகொண்ட சோழபுரம் என்ற நகரத்தை முதலாம் ராஜேந்திரன் அமைத்து அங்கு இக்கோயிலையும் கட்டினான் என்பது வரலாறு. இக்கோயில், ஐராவதேஸ்வரர்கோயில், பெருவுடையார்கோயில் ஆகிய மூன்றும் அழியாத சோழர்காலத்துப் பெருமையை பறை சாற்றும் பெருங்கோயில்கள் எனப்படுகின்றன. முற்றத்துடன்கூடிய உயர்ந்த மேடைமீது இக்கோயில் அமைக்கப்பட்டுள்ளது. நடுக்கருவறையில் இக்கோயிலின் முதன்மை இறைவனான பிரகதீசுவரர் லிங்கவடிவில் உள்ளார். கருவறைக்கு முன் அர்த்தமண்டபமும் தூண்களமைந்த முன்மண்டபமும் உள்ளன. கருவறையின் முன் இருபுறமும் 6 அடி (1.8 m) உயரமுள்ள துவாரபாலகர்கள் சிலைகள் காணப்படுகின்றன. கருவறையின் மீதுள்ள விமானத்தின் உயரம் 55 மீ. இவ்விமானம் தஞ்சாவூர் பெருவுடையார் கோயில் விமானத்தைவிட 3 மீ உயரம் குறைவானது. பெருவுடையார் கோயில் விமானத்தின் அடுக்குகள் நேரானவையாகும். இக்கோயில் விமான அடுக்குகள் வளைவாகவும் உள்ளன.மற்றெந்த சிவன்கோயில்களிலும் உள்ள லிங்கங்களைவிட இக்கோயில் லிங்கம் மிக உயரமானதாகும்.கருவறைக்குள் சூரியஒளியை எதிரொளிக்கும் வகையில் கருவறையை நோக்கியவாறு நந்தி அமைக்கப்பட்டுள்ளது.

கருவறை எப்போதும் குளிர்ச்சியாக இருக்கும் வகையில் அங்கு சந்திரக்காந்தக் கல் பதிக்கப்பட்டுள்ளது. தெற்குநோக்கிய அம்மன் சன்னதியிலுள்ள பெரியநாயகி அம்மன் திருஉருவச் சிலையின் உயரம் 9.5 அடி ஆகும். பிரகதீசுவரர் கருவறையைச் சுற்றி ஐந்து கருவறைகளும் சிம்ம வடிவிலான கிணறும் உள்ளன. அண்மையில் இக்கோயிலில் கொடி மரம் அமைக்கப்பட்டது. முதன்மைக் கருவறைச் சுவரின் வெளிப்புற மாடங்களில் அர்த்தநாரீசுவரர், நடராசர் போன்ற சிவனின் திருவுருவங்கள், மேலும் பிரம்மன், துர்க்கை, திருமால், சரசுவதி என ஐம்பதுக்கும் மேற்பட்ட சிற்பங்கள் உள்ளன. அவற்றில் ஒன்று சிவன் ஒரு அடியாருக்கு மாலை சூட்டுவதுபோல் செதுக்கப்பட்டுள்ளது. சிலர் அந்த அடியார் 63 நாயன்மார்களில் ஒருவரான சண்டீஸ்வரர் என்றும், வேறுசிலர் அவ்வுருவம் கோயிலைக் கட்டிய முதலாம் ராஜேந்திரன் என்றும் கருதுகின்றனர். சோழர் கலைக்குச் சான்றாக விளங்கும் 11 ஆம் நூற்றாண்டு காலத்திய வெண்கலச் சிலைகள் இக்கோயிலில் காணப்படுகின்றன. அவற்றுள் குறிப்பிடத்தக்கது சுப்பிரமணியர் திருவுருவ வெண்கலச் சிலையாகும். ஒன்பது கோள்களைக் குறிக்கும் ஒற்றைக் கல்லாலான நவக்கிரகம் இக்கோயிலில் அமைந்துள்ளது.தஞ்சைப் பெருவுடையார் கோயிலைக் கட்டிய முதலாம் ராஜராஜ சோழனின் மகனான ராஜேந்திர சோழனால் இக்கோயில் கட்டப்பட்டது. முதலாம் ராஜேந்திரன் ஆட்சிக்குவந்த ஆறாம் ஆண்டில் கட்டப்பட்டதாகச் சில வரலாற்று ஆய்வாளர்கள் கருதினாலும், கல்வெட்டுகளின்படி இக்கோயில் கட்டப்பட்ட ஆண்டு முதலாம் ராஜேந்திரன் ஆட்சிக்குவந்த இருபதாம் ஆண்டு கட்டப்பட்டதாகும்.

தஞ்சைப் பெருவுடையார் கோயிலுக்குரிய நன்கொடைகளையெல்லாம் ராஜேந்திரன் இக்கோயிலுக்குத் திருப்பிவிட்டானென்றும், பெருவுடையார் கோயிலைக் கட்டிய கட்டடக் கலைஞர்களையும் சிற்பிகளையும் தஞ்சாவூரிலிருந்து இங்கு வரவழைத்து இக்கோயிலைக் கட்டச் செய்தான் என்றும் கருதப்படுகிறது.கங்கைவரை சென்று போரிட்டு வெற்றிகொண்ட முதலாம் ராஜேந்திரன், தன் தந்தை கட்டிய கோயிலைப் போன்று தானும் ஒரு கோயில் கட்ட விரும்பினான். இடைக்காலச் சோழத் தலைநகராக விளங்கிய தஞ்சாவூரிலிருந்துதான் புதிதாக நிர்மாணித்த கங்கைகொண்ட சோழபுரம் ஊரைத் தனது தலைநகராக முதலாம் ராஜேந்திரன் மாற்றியதிலிருந்து தொடர்ந்து அடுத்த 250 ஆண்டுகளுக்குக் கங்கைகொண்ட சோழபுரமே சோழர்களின் தலைநகரமாக விளங்கியுள்ளது. 1987-ல், பெருவுடையார் கோயில் யுனெஸ்கோ அமைப்பால் உலகப் பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்டது. பின்னர் 2004-ல் கங்கைகொண்ட சோழபுரம் கோயிலும் மற்றும் ஐராவதேஸ்வரர் கோயிலும் உலகப் பாரம் பரியச் சின்னங்களாக அறிவிக்கப்பட்டன. 10 -12ஆம் நூற்றாண்டுகளில், வெவ்வேறு மூன்று சோழ அரசர்களால் கட்டப்பட்ட இம்மூன்று கோயில்களும் அதிகளவிலான ஒற்றுமை அமைவுகளைக் கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

கடல்சார் சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் ராமேஸ்வரம்-கன்னியாகுமரிக்கு படகு சவாரி: ₹13 கோடியில் மிதவை ஜெட்டி பாலமும் அமைகிறது

அருமனை அருகே குளித்த போது தண்ணீர் இழுத்து சென்றது; இரவு முழுவதும் ஆற்றின் நடுவே இருந்த பாறையில் தூங்கிய போதை வாலிபர்: இறந்ததாக நினைத்து தேடிய தீயணைப்புத்துறையினர்

அரசு உதவிப்பெறும் பள்ளிகளுக்கும் 7.5% உள் ஒதுக்கீட்டை கொடுங்கள்: ஐகோர்ட் கிளை