722ம் ஆண்டு கந்தூரி விழா வரும் 14ம் தேதி துவக்கம் முத்துப்பேட்டை தர்காவில் 95 அடி கொடிமரம் நிறுத்தம்

முத்துப்பேட்டை: முத்துப்பேட்டை அருகே ஷேக்தாவூது ஆண்டவர் தர்கா 722ம் ஆண்டு பெரிய கந்தூரி விழாவை முன்னிட்டு, 95 அடி உயர புனித கொடி மரம் நேற்று நிலை நிறுத்தப்பட்டது. திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அடுத்த ஜாம்புவானோடையில் உலக பிரசித்தி பெற்ற ஷேக்தாவூது ஆண்டவர் தர்காவில் ஆண்டுதோறும் நடைபெறும் பெரிய கந்தூரி விழாவில் வெளிநாடுகள் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும், தமிழகத்தின் பலவேறு மாவட்டங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

இந்நிலையில் இந்த ஆண்டு 722ம் ஆண்டு பெரிய கந்தூரி விழா வரும் 14ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி 14 நாட்கள் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு புனித கொடி மரம் நிலைநிறுத்தும் நிகழ்ச்சி, தர்கா பரம்பரை முதன்மை அறங்காவலர் எஸ்.எஸ்.பாக்கர் அலி சாஹீப் தலைமையில் நேற்று நடைபெற்றது. முன்னதாக காலை 7 மணிக்கு தாவூதியா பள்ளிவாசலில் மௌலூது ஓதப்பட்டது. 8.30க்கு தர்காவில் சிறப்பு பிரார்த்தனை, பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது.

பின்னர் தர்காவிலிருந்து ஊர்வலமாக கொடிமரம் மேடைக்கு சென்ற டிரஸ்டிகள் உரையாற்றினர். அதைத்தொடர்ந்து 9 மணியளவில் புனித துவா ஓதப்பட்டு 95 அடி உயர புனித கொடி மரம் நிலை நிறுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து இதில் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில் வரும் 14ம் தேதி புனித கொடியேற்றும் நிகழ்ச்சியும், 23ம் தேதி புனித சந்தன கூடு ஊர்வலமும், 27ம் தேதி கொடி இறக்கத்துடன் விழா நிறைவு பெறுகிறது.

Related posts

பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி அரசு ஊழியர்கள் போராட்டம்

செம்பரம்பாக்கம் ஏரியில் ஆண் சடலம் மீட்பு

வீட்டில் இருந்து திருடிய ஏடிஎம் கார்டு மூலம் ரூ.70 ஆயிரம் அபேஸ்