கந்திகுப்பம் அருகே அரசு அலுவலர், மனைவியை கட்டி போட்டு நகைகள், பணம் கொள்ளை: முகமூடி கொள்ளையர்கள் கைவரிசை

கந்திகுப்பம்: கந்திகுப்பம் அருகே அரசு அலுவலர் மற்றும் மனைவியை கட்டி போட்டு நகைகள், பணத்தை முகமூடி கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் தாலுகா கந்திகுப்பம் அருகே அரசு பொறியியல் கல்லூரி உள்ளது. இதன் எதிரில் ஜெ.ஜெ. நகர் உள்ளது. இந்த பகுதியை சேர்ந்தவர் சிலம்பரசன் (37). காசநோய் மேற்பார்வையாளர். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு இவர் அந்த பகுதியில் புதிதாக வீடு கட்டி குடி வந்தார். இந்த நிலையில் நேற்று இரவு சிலம்பரசன், தனது மனைவி தேவிபிரியா மற்றும் குழந்தைகளுடன் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். இந்த நிலையில் இன்று அதிகாலை 3 மணி அளவில் அவரது வீட்டிற்கு முகமூடி அணிந்த நிலையில் 3 கொள்ளையர்கள் வந்தனர்.

அவர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்தனர். சத்தம் கேட்டு எழுந்த சிலம்பரசனை முகமூடி கொள்ளை கும்பல் கட்டி போட்டனர். மேலும் அவர்கள் வீட்டில் இருந்த பீரோவை திறந்து உள்ளே இருந்த 5.5 பவுன் தங்க நகைகள், வெள்ளி பொருட்கள் மற்றும் ஒரு லட்சத்து 6 ஆயிரம் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றனர். இந்த நிலையில் கொள்ளையர்கள் சென்ற சிறிது நேரத்தில் சிலம்பரசன் மற்றும் அவரது மனைவியின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அங்கு வந்தனர். இது குறித்து சிலம்பரசன் கந்திகுப்பம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் மாவட்ட எஸ்.பி.,தங்கதுரை, ADSP சங்கர், பர்கூர் DSP முத்துகிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் வளர்மதி மற்றும் போலீசார் அங்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார்கள். அதே போல கைரேகை நிபுணர்களும் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்கள். அதே போல மோப்ப நாய் கொண்டும் விசாரணை நடத்தப்பட்டது.

கொள்ளை சம்பவம் நடந்தது சென்னை & கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பகுதியாகும். கொள்ளையர்கள் தேசிய நெடுஞ்சாலையில் நோட்டமிட்டு வந்து இந்த கொள்ளையில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக கந்திகுப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கந்திகுப்பம் அருகே தேசிய நெடுஞ்சாலை அருகில் உள்ள வீட்டில், அதிகாலையில் அரசு அதிகாரியை கட்டி போட்டு நகை, பணத்தை முகமூடி கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related posts

ரேசன் அரிசி கடத்தி வந்த கார் மோதி விபத்து: ஒருவர் பலி

ஆடம்பர மின்சார கார்களுக்கு அதிக வரிச்சலுகை!.. இதுதான் நிர்மலா சீதாராமனின் வரி கொள்கை: காங்கிரஸ் குற்றச்சாட்டு!!

ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் 2023-24-ம் நிதி ஆண்டில் ரூ.81,875 கோடி அளவுக்கு ஜிஎஸ்டி வரி மோசடி