சூதாட்ட கிளப்பிற்கு அனுமதி நகராட்சி ஆணையர் சஸ்பெண்ட்: ஏனாம் கலெக்டர் உத்தரவு

புதுச்சேரி: புதுச்சேரி, ஏனாமில் சூதாட்ட கிளப் அனுமதி கொடுக்கப்பட்ட விவகாரத்தில் நகராட்சி ஆணையரை அதிரடியாக சஸ்பெண்ட் செய்து மாவட்ட கலெக்டர் வல்லவன் உத்தரவிட்டுள்ளார். புதுச்சேரி மாநிலம், ஏனாம் பிராந்தியத்தில் புதிதாக சூதாட்ட கிளப் திறக்கப்பட்ட விவகாரம் கடந்தாண்டு இறுதியில் அங்கு புயலை கிளப்பியது. அரசியல் கட்சிகள் எதிர்ப்பு கிளப்பவே, கிளப் மூடப்பட்டது. இவ்விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தில் சூதாட்ட கிளப் நிறுவனம் சார்பில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், இடைக்கால தடை விதிக்கப்படாததால் மீண்டும் கிளப் செயல்படத் தொடங்கியது.

இவ்விவகாரத்தில் அங்கு நகராட்சி ஆணையராக பணியாற்றிய அருள்பிரகாசம், முதல்வர் ரங்கசாமியின் உத்தரவை மீறியும், விதிகளை கடைபிடிக்காமலும் முறைகேடாக சூதாட்ட கிளப் நடத்த அனுமதி வழங்கியதாக புகார் எழுந்தது அதன்பிறகு சூதாட்ட கிளப்புக்கான அனுமதி ரத்து செய்யப்பட்ட நிலையில் இவ்விவகாரம் தொடர்பாக விரிவான அறிக்கை தருமாறு உள்ளாட்சித்துறை இயக்குனர் தரப்பில், ஏனாம் மண்டல அதிகாரியிடம் கோரப்பட்டது. அதன்படி மண்டல நிர்வாகியான முனுசாமி, ஏனாம் பகுதியில் விதிகளை மீறி சூதாட்ட கிளப்புக்கு அனுமதி கொடுத்தது சம்பந்தமாக விசாரணை நடத்தி அனைத்து தகவல்களையும் துறை இயக்குனருக்கு அனுப்பினார். அவரிடமிருந்து துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கைக்காக உயர் அதிகாரிக்கு கடிதம் அனுப்பப்பட்டது. இதனால் ஏனாம் நகராட்சி ஆணையர் விரைவில் சஸ்பெண்ட் செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகின. இந்நிலையில் ஏனாம் நகராட்சி ஆணையர் அருள் பிரகாசத்தை அதிரடியாக நேற்று சஸ்பெண்ட் செய்து மாவட்ட கலெக்டர் வல்லவன் உத்தரவிட்டுள்ளார்.

Related posts

பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் கூடிய கலைஞர் நூற்றாண்டு பூங்கா நாளை திறப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்கள்!

மெரினா கடற்கரையில் விமான சாகச நிகழ்ச்சியை பார்க்க வந்த நபர் உயிரிழப்பு

மனைவிக்கு டார்ச்சர் கணவன் அதிரடி கைது