கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டி காலப்பேழை புத்தகத்தை முதல்வர் வெளியிட்டார்

சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில், முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டி-2023 குறித்து விளக்கும் வகையில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் தயாரிக்கப்பட்ட “Future is Here – Khelo India Youth Games 2023” என்ற காலப்பேழை புத்தகத்தை வெளியிட்டார். தமிழ்நாடு முதலமைச்சரின் சீரிய வழிகாட்டுதலின்படி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சரால் 2023ம் ஆண்டிற்கான கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் 19.1.2024 முதல் 31.1.2024 வரை சென்னை, மதுரை, திருச்சி, கோயம்புத்தூர் ஆகிய நகரங்களில் சிறப்பாக நடத்தப்பட்டது.

இந்த போட்டிகளில், 31 மாநிலங்களிலிருந்து (யூனியன் பிரதேசம் உள்பட) 2875 ஆண்கள் மற்றும் 2755 பெண்கள் என மொத்தம் 5,630 விளையாட்டு வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். குறிப்பாக, தமிழ்நாட்டிலிருந்து 570 விளையாட்டு வீரர், வீராங்கனைகள் 26 போட்டிகளில் கலந்துகொண்டு 38 தங்கப்பதக்கம், 21 வெள்ளிப் பதக்கம், 39 வெண்கலப் பதக்கம் என மொத்தம் 98 பதக்கங்களை பெற்று தேசிய அளவில் இரண்டாம் இடத்தை தமிழ்நாடு அணி பெற்றுள்ளது. 1,020 விளையாட்டு தொழில்நுட்ப வல்லுநர்கள், 1,331 அணி மேலாளர்கள், 480 விளையாட்டு தன்னார்வலர்கள் மற்றும் 1,450 தன்னார்வலர்கள் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் சிறப்பாக நடத்துவதற்கு உறுதுணையாக இருந்தனர்.

அனைத்து விளையாட்டு வீரர், வீராங்கனைகள், உயர் அலுவலர்கள் மற்றும் விளையாட்டு தொழில்நுட்ப வல்லுநர்கள் நட்சத்திர ஓட்டல்களில் தங்கவைக்கப்பட்டு, தரமான உணவுகள் வழங்கப்பட்டன. கேலோ இந்தியா போட்டிகளின் தொடக்க விழா பிரதமரால் சென்னையில் 19.1.2024 அன்று தொடங்கி வைக்கப்பட்டது. தொடக்க விழாவில், தமிழ்நாடு முதல்வர், ஒன்றிய இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர், தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இப்போட்டிகள் அனைத்தும் சிறப்பாக நடத்தப்பட்டு 31.1.2024 அன்று முடிக்கப்பட்டது. இந்த போட்டிகளை விளக்கும் வகையில் “Future is Here – Khelo India Youth Games 2023” என்ற காலப்பேழை புத்தகம் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் தயாரிக்கப்பட்டது. இந்த காலப்பேழை புத்தகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டார்.

Related posts

ஹெலிகாப்டரில் எரிபொருள் இல்லாமல் ராஜ்நாத்சிங் தவிப்பு

போட்டி தேர்வுகளுக்காக ஜார்க்கண்டில் இன்டர்நெட் தடை: பாஜ கடும் விமர்சனம்

அரசு உருவாக்கி உள்ள வேலை வாய்ப்புகளில் முஸ்லிம் சமுதாயத்திற்கு உரிய பிரதிநிதித்துவம்: முதல்வருக்கு ஜவாஹிருல்லா கோரிக்கை