வீண் பிடிவாதம்

இந்தியாவில் மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு ஒன்றிய பாஜ அரசால் திணிக்கப்பட்டது. மாநில பட்டியலில் இருந்த கல்வியை, ஒத்திசைவு பட்டியலுக்கு மாற்றியதோடு, மாநில அரசுகளின் அதிகாரங்களை மெல்ல மெல்ல பறிப்பதும் பாஜ ஆட்சியில் அடிக்கடி அரங்கேறி வருகிறது. தமிழ்நாட்டு மாணவர்கள் பெரும்பாலும் மாநில பாடத்திட்டத்தில் பயின்று வருகின்றனர். ஆனால் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் நீட் தேர்வை எழுத வேண்டும் என்கிற கட்டாய சூழலை ஒன்றிய அரசு திணித்தது. இதனால் அனிதா உள்ளிட்ட அப்பாவி மாணவிகளின் உயிர்பலியும் நடந்தது. மாநில பாடத்திட்டத்தில் மிகச்சிறந்த சாதனை படைக்கும் மாணவர்கள், நீட் என்னும் அரக்கனால் கொடூரமாக தாக்கப்படுவது ஆண்டுதோறும் நடந்து வருகிறது.

நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கும் மசோதாவும் தொடர்ந்து சோதனைக்குள்ளாக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் நீட் தேர்வு குறித்து கருத்து தெரிவித்த ஆளுநர் ரவி, ‘நான் நீட் தேர்வு ரத்துக்கு ஒருபோதும் அனுமதி அளிக்க மாட்டேன். கல்வி பொதுப்பட்டியலில் உள்ளது. நீட்தேர்வு ரத்து மசோதா குடியரசு தலைவரிடம் உள்ளது.’ என வெளிப்படையாக தெரிவித்துள்ளார். ஆளுநர் தனது அதிகாரத்தை தாண்டி போய்விட்ட ஒரு மசோதா குறித்து இப்போது பேசி சர்ச்சையை மீண்டும் கிளப்பியுள்ளார். அதிரடி அரசியலுக்கு பெயர் போன ஆளுநர் மீண்டும் நீட் தேர்வை பொதுவெளியில் விவாத பொருளாக்கும் முயற்சிகளில் இறங்கியுள்ளார்.

தமிழ்நாட்டில் நீட் தேர்வை ரத்து செய்திட திமுக மேற்கொண்ட முயற்சிகள் கணக்கில் அடங்காதவை. 2010ம் ஆண்டு நீட் தேர்வு முன்மொழியப்பட்டபோதே, முன்னாள் முதல்வர் கலைஞர் அதை கடுமையாக எதிர்த்தார். நீட் தேர்வை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் திமுக சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன. அதையும் மீறி அதிமுக ஆட்சிக்காலத்தில், அவர்களது மென்மையான போக்கால் நீட் தேர்வு அறிமுகம் செய்யப்பட்டது. நீட் தேர்வுக்கு எதிராக தமிழகம்தான் முதன்முதலில் வழக்கு போட்டது. மாணவர்களின் உயிரை பறிக்கும் பலி பீடமாக கருதப்படும் நீட் தேர்விற்கு விலக்கு அளிக்கும் மசோதா சட்டசபையில் நிறைவேற்றப்பட்டும், அதற்கு ஆளுநர் தனது பிடிவாதம் காரணமாக கையெழுத்திட மறுத்தார்.

சட்டசபையில் நிறைவேற்றப்படும் ஒரு மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்பது நடைமுறை. ஆனால் வீம்பு செய்வதற்கென்றே தமிழகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள ஆளுநர் ரவி தொடர்ந்து நீட் தேர்வை தனது அதிகாரத்திற்கான பகடைக்காயாக பயன்படுத்தி வருகிறார். ஆளுநர் மூலம் ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டுள்ள நீட் விலக்கு மசோதா, உள்துறையின் பரிசீலனையில் உள்ளது. உள்துறை அமைச்சகம் ஆயுஷ்துறை, கல்வி மற்றும் சுகாதார துறைகளிடம் தொடர்ந்து சில கேள்விகளுக்கு விளக்கம் கேட்டு வருகிறது. ஒவ்வொரு முறையும் தமிழக அரசு அதற்கு தெளிவான விளக்கங்களை அளித்து, நீட் விலக்கை அமல்படுத்த போராடி வருகிறது.

தமிழக அரசின் விளக்கங்களை ஏற்று ஜனாதிபதி நீட் விலக்கு மசோதாவிற்கு ஒப்புதல் வழங்கும் பட்சத்தில், ஆளுநருக்கு எவ்வித வேலையும் இல்லை. இருப்பினும் நான் கையெழுத்து போட மாட்டேன் என ஆளுநர் மீண்டும் முருங்கை மரம் ஏறுவது பொதுமக்களை வியப்பில் ஆழ்த்துகிறது. மக்களின் எண்ணங்களுக்கு மதிப்பளிக்க மறுக்கும் ஆளுநர், தமிழ்நாட்டில் அடிக்கடி தானும் இருக்கிறேன் என்பதற்காக சில பிரச்னைகளை கிளப்புவது வழக்கம். தற்போது நீட் தேர்வை கையில் எடுத்து கொண்டு குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க பார்க்கிறார். தமிழகம் அவரது கருத்துகளை ஒருபோதும் செவிமெடுக்க போவதில்லை.

Related posts

முதல்வர் பதவியை ராஜினாமா செய்கிறார் கெஜ்ரிவால்

செப் 17: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் விபரீதம் அரிவாளால் வெட்டி மனைவி படுகொலை: கணவன் கைது, ஸ்ரீபெரும்புதூர் அருகே பயங்கரம்