சிகிச்சைக்காக வந்தபோது நெருக்கம் ஏற்பட்டு உல்லாசம் தர்மபுரி ராணுவ வீரரின் மனைவியை ஆபாச படம் எடுத்து மிரட்டி கடத்தல்: மருத்துவமனைக்கு வந்த இளம்பெண்களையும் குறிவைத்து சீரழித்த ஊழியர் கைது

* 150க்கும் மேற்பட்ட ஆபாச படம் சிக்கியது
* வேலை வாங்கி தருவதாகவும் பணமோசடி

தர்மபுரி: தர்மபுரி அருகே ராணுவ வீரரின் மனைவி, குழந்தைகளை கடத்திச் சென்ற அரசு மருத்துவமனை ஊழியரை போலீசார் நேற்று கைது செய்தனர். இவர் பல பெண்களிடம் அரசு வேலை வாங்கித் தருவதாக பல லட்சம் மோசடி செய்துள்ளதும் தெரியவந்தது. தர்மபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி அருகே ஆலமரத்துப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சமதர்மம் (46). மிசோரம் எல்லையில் ராணுவ வீரராக (பிஎஸ்எப்) பணியாற்றி வருகிறார். இவரது மனைவி அமலா (35). பிளஸ் 2 வரை படித்துள்ளார். இவர்களுக்கு 17 வயதில் மகன், 15 வயதில் மகள் உள்ளனர். சமதர்மம் 6 மாதத்திற்கு ஒருமுறை ஊருக்கு வந்து செல்வார்.

இந்நிலையில் கடந்த 28ம் தேதி முதல் அமலா மற்றும் அவரது மகன், மகள் மற்றும் அமலாவின் தாயாரையும் காணவில்லை. இதையடுத்து, சமதர்மம் பாப்பாரப்பட்டி போலீசில் புகாரளித்தார். போலீசார் வழக்கு பதிந்து மூவரையும் தேடி வந்தனர். விசாரணையில் திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரில் ராணுவ வீரரின் மனைவி மற்றும் அவரது மகன், மகள் இருப்பதும், அவர்களை தர்மபுரி மாவட்டம் கடத்தூர் அருகே மடதஅள்ளி கிராமத்தைச் சேர்ந்த அதியமான் (36) என்பவர் கடத்திச் சென்று அடைத்து வைத்திருப்பதும் தெரியவந்தது. ஒரு விடுதியில் அதியமானும், அமலாவும் தங்கியிருந்தனர். அங்கிருந்து 2 கிலோ மீட்டர் தூரத்தில் அமலாவின் மகன், மகள் மற்றும் தாயாரை தங்க வைத்துள்ளனர். இதையடுத்து, போலீசார் நேற்று அங்கு சென்று அமலா மற்றும் அவரது மகன், மகளை மீட்டனர். அதியமானை கைது செய்து விசாரணை நடத்தினர். இதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

இதுபற்றி போலீஸ் தரப்பில் தெரிவித்ததாவது: அதியமான் தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் செவிலியர் உதவியாளராக கடந்த 8 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு 2 மனைவிகள். முதல் மனைவி கஸ்தூரி. இவருக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு நர்சிங் பயிற்சிக்கு வந்த ஜோதியை 2வது மனைவியாக திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஒரு மகள் உள்ளார். தற்போது இவர் தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ராணுவ வீரர் மனைவி அமலாவின் தந்தை கணேசன், விபத்தில் காயமடைந்து, தர்மபுரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அமலா தந்தையை அருகில் இருந்து கவனித்து வந்த சமயத்தில், அங்கு பணிபுரிந்த அதியமான் வார்டுக்கு வந்து சென்றபோது, அவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டது. அவருக்கு மருத்துவ ரீதியாக உதவி செய்ததால் இருவருக்குமிடையே நெருக்கம் ஏற்பட்டது. இந்த நெருக்கம் தகாத உறவாக மாறியது. இருவரும் அடிக்கடி சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளனர்.

அப்போது, ரூ.7 லட்சம் தந்தால், உனக்கு அரசு வேலை வாங்கித் தருகிறேன் என ஆசைவார்த்தை கூறியுள்ளார். இதை நம்பி கணவர் அனுப்பும் பணத்தில் சேர்த்து வைத்த ரூ.7 லட்சத்தை அதியமானிடம் அமலா கொடுத்துள்ளார். இருவரும் நெருக்கமாக இருக்கும் நேரத்தில் அமலா தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை பற்றியும் கணவர் 6 மாதத்திற்கு ஒருமுறைதான் வருவார், தன்னை எங்கேயும் அழைத்துச்செல்வதில்லை எனவும் அதியமானிடம் கூறியுள்ளார்.
இதனால் அவருக்கு ஆறுதல் கூறியபடி பல இடங்களுக்கு அழைத்துச்சென்று இருவரும் அடிக்கடி தனிமையில் சந்திப்பது அதிகரித்தது.

மேலும் அமலாவின் உறவினருக்கு நீதிமன்றத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி அவரிடமும் ரூ.7 லட்சம் வாங்கியுள்ளார். ஒரு கட்டத்தில் இருவருக்கும் வேலை வாங்கித் தராததால், கொடுத்த பணத்தை அமலா கேட்டுள்ளார். அப்போது இருவரும் பல்வேறு இடங்களுக்கு சென்று தனிமையில் இருந்தபோது எடுத்த படங்கள், விடியோக்கள், அமலாவுக்கு தெரியாமல் எடுத்த நிர்வாண புகைப்படங்களை காட்டி, சமூக வலைதளங்களில் பரப்பிவிடுவதாக மிரட்டியுள்ளார். இருவரும் வெவ்வேறு சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்பதால், பிசிஆர் பிரிவில் வழக்கு போட வைத்துவிடுவேன் எனவும் மிரட்டியுள்ளார்.

இதனால் வெளியே கூறமுடியாமல் தவித்த அமலாவை கடந்த 28ம் தேதி மகன், மகளுடன் கடத்திச் சென்று திருப்பூரில் தங்க வைத்தது தெரியவந்தது. அமலாவின் குழந்தைகளுக்கு பாதுகாப்பாக அவரது தயாரையும் அழைத்துச்சென்றுள்ளார். மருத்துவமனைக்கு சிகிச்சை வரும் இளம்பெண்களை குறிவைத்து நட்பாக பேசும் அதியமான், தன்னுடைய செல்போன் எண்களை கொடுத்து அரசுத்துறைகள், நீதிமன்றங்களில் வேலை வாங்கித் தருவதாக கூறி லட்சக்கணக்கான பணத்தை பறித்தும், நம்பி ஏமாறும் பெண்களை தனது இச்சைக்கு பயன்படுத்தி ஏமாற்றுவதும் வேலையாக இருந்து உள்ளார்.

மேலும், வேலை வாங்கித் தருவதாக ஏரியூர் பகுதியைச் சேர்ந்த பெண்ணிடம் ரூ.7 லட்சம் பெற்றது, அரசு மருத்துவமனைக்கு உள்நோயாளியுடன் வரும் இளம்பெண்களை பேசி மயக்கி, வேலைவாங்கித் தருவதாக கூறி பல லட்சம் மோசடி செய்தது பற்றிய தகவல்களும் தெரியவந்தது. இவ்வாறு போலீசார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட அதியமானின் செல்போனை போலீசார் பறிமுதல் செய்து ஆய்வு செய்தபோது போலீசாரே அதிர்ச்சியடையும் அளவுக்கு அமலாவின் நிர்வாண படம் உள்பட 150க்கும் மேற்பட்ட படங்கள் இருந்தன.

வேறு சில பெண்களின் படங்களும் அதில் உள்ளன. கைது செய்யப்பட்ட அதியமானை கோர்ட்டில் ஆஜர்படத்தி தர்மபுரி கிளைச்சிறையில் போலீசார் அடைத்துள்ளனர். அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தினால் எத்தனை பெண்களை மயக்கி ஏமாற்றியுள்ளார், எத்தனை பேரிடம் வேலை வாங்கித்தருவதாக கூறி பணம் வாங்கியுள்ளார் என்பது போன்ற தகவல்கள் தெரியவரும். எனவே அவரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

* பலருக்கும் போலி பணி ஆணை
ராணுவ வீரரின் மனைவி அமலாவிற்கு தர்மபுரி அரசு மருத்துவமனையில் அலுவலக உதவியாளர் பணி பெற்று தருவதாக கூறி ரூ.7 லட்சம் பணத்தை பறித்து, அதியமான் போலியான பணியானை வழங்கியிருக்கிறார். இதேபோல பென்னாகரத்தை சேர்ந்த விதவை பெண்ணான காமாட்சியிடமிருந்து ரூ.4.50 லட்சம் பெற்று, ஓசூர் நீதிமன்றத்தில் அலுவலக உதவியாளருக்கான பணி ஆணை என போலி பணி ஆணை ஒன்றை கொடுத்து ஏமாற்றியிருக்கிறார். இதேபோல ஏரியூர் பகுதியை சேர்ந்த சில பெண்களிடம் சுமார் ரூ.7 லட்சம், வேறு சில பெண்கள் என மொத்தமாக சுமார் ரூ.25 லட்சத்திற்கு மேல் ஏமாற்றியும், பணம் கொடுத்த பெண்கள் உள்ளிட்ட பல பெண்களையும் தனது காம இச்சைக்கு அதியமான் இரையாக்கிய சம்பவங்கள் காவல் துறை மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

* நோயாளிகளிடம் கமிஷன் வசூல்
தர்மபுரி அரசு மருத்துவமனைகளில் அவசர மற்றும் தீவிர சிகிச்சை பெறக்கூடிய நோயாளிகளின் உறவினர்களை நோட்டமிட்டு, அவர்களை குறிப்பிட்ட தனியார் மருத்துவமனையில் நல்ல சிகிச்சை வழங்குகிறார்கள் எனக்கூறி தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, அதன் மூலம் தனியார் மருத்துவமனைகளில் அத்யமான் கமிஷன் தொகை பெற்று வந்திருக்கிறார் என்பது விசாரணையில் தெரியவந்து உள்ளது.

Related posts

தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை 99% கூடுதலாக பதிவு..!!

பழங்குடியினர் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 146 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்குகினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிரான வழக்கறிஞர்களின் போராட்டம் மக்கள் போராட்டமாக மாறும்: முத்தரசன் பேச்சு