வேடிக்கை ஆணையம்

இந்திய பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்ற நாளில் இருந்தே, நம் நாட்டின் சுதந்திர அமைப்புகளில் வெளிப்படை தன்மைகள் இல்லாமல் போனது. நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட வேண்டிய சூழலில், தேர்தல் ஆணையம் அதன் அதிகாரிகளை தேடி கொண்டிருப்பதுதான் வேடிக்கை. மக்களவை தேர்தல் தேதிகள் இவ்வாரத்தில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், தேர்தல் ஆணையர் அருண் கோயல் திடீரென ராஜினாமா செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் ஒரு தலைமை தேர்தல் ஆணையர், 2 தேர்தல் ஆணையர்கள் பதவிகள் முக்கியமானவை. தற்போது தேர்தல் ஆணையத்தில் தலைமை தேர்தல் ஆணையராக ராஜீவ்குமார் இருந்து வருகிறார். 2 தேர்தல் ஆணையர்களில் ஒரு பணியிடம் காலியாக உள்ளது. மற்றொரு தேர்தல் ஆணையர் அருண் கோயலும் ஆளை விட்டால் போதும் என ராஜினாமா செய்துவிட்டு இப்போது வெளியேறிவிட்டார். தலைமை தேர்தல் ஆணையர் மட்டுமே இருந்து மக்களவை தேர்தலை நடத்துவது என்பது மிகப்பெரிய சவாலாகும்.

இதன் பின்னணியில் ஆளும் பாஜ இருக்குமோ என்கிற சந்தேகம் அனைவருக்குமே எழுகிறது. அருண் கோயல் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டபோதே பல சர்ச்சைகள் எழுந்தன. பஞ்சாப்பை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரியான அருண் கோயல், ஒன்றிய அரசு செயலாளராகவும், கனரக தொழில்துறை செயலாளராகவும் பணியாற்றினர். அவரது பதவிக்காலம் 2022ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதியுடன் முடிவடைய இருந்தது. ஆனால் அவர் 2022ம் ஆண்டு நவம்பர் 18ல் தனது பதவியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்றார்.

விருப்ப ஓய்வு பெற்ற அடுத்த நாளே, அதாவது நவம்பர் 19ம் தேதியே இந்திய தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டார். அருண் கோயல் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. அவரது நியமனத்தில் பல்வேறு சட்ட விதிகள் மீறப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. மின்னல் வேகத்தில் அவர் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்ட விவகாரம் புயலை கிளப்பியது. தொடர்ந்து இந்த வழக்கு நடந்தபோது ஒரு நீதிபதி விலகி கொண்டார்.

கடைசியில் அருண் கோயலை நியமித்ததை எதிர்த்து தொடரப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 4ம் தேதி தள்ளுபடி செய்து பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்தது. இந்நிலையில், பதவி காலம் நிறைவடையும் முன்பே தேர்தல் ஆணையர் அருண் கோயல் திடீரென ராஜினாமா செய்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். அவரது பதவி காலம் 2027ம் ஆண்டு வரை உள்ளது. அவரது ராஜினாமாவும் அவசரம் அவசரமாக ஏற்கப்பட்டு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையத்தை ஒன்றிய பாஜ அரசு கைப்பாவையாக நடத்துகிறதோ என்கிற சந்தேகம் எழாமல் இல்லை. இந்நிலையில் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமாருக்கும், அருண் கோயலுக்கும் சில கோப்புகளில் கையெழுத்திடுவது தொடர்பாக எழுந்த கருத்து வேறுபாடுகளே ராஜினாமாவுக்கு காரணம் என்றும் கூறப்படுகிறது.

ஆளும் கட்சிக்கும், பிரதமருக்கும் அனைத்து அதிகாரங்களும் வழங்கப்பட்டுள்ள நிலையில், தேர்தல் ஆணையர் பணியிடங்களை ஒன்றிய பாஜ அரசு காலியாக வைத்திருப்பதும் நகைப்புக்குரியது. எல்லாவற்றிலும் ஒரே கோஷத்தை புகுத்தும் பாஜ இப்போது ஒரே நாடு ஒரே தேர்தல் ஆணையர் என்ற முறையை கொண்டு வந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கியுள்ளன. இப்படியே போனால் மக்களவை தேர்தல் வெளிப்படையாக நடக்குமா என்பதே கேள்வி.

Related posts

ஒன்றிய அரசின் குற்றவியல் சட்டத்தை எதிர்த்து; திமுக சார்பில் நாளை உண்ணாவிரத போராட்டம்: சட்டத்துறை செயலர் என்.ஆர். இளங்கோ அறிவிப்பு

சென்னை பெரம்பூரில் பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டி படுகொலை

கட்டுமான தொழில் கடுமையாக பாதிப்பு; ஆந்திராவில் இருந்து மணல் எடுத்து வர அனுமதி: முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு லாரி உரிமையாளர்கள் சங்கம் கடிதம்