முழுநேர கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சி மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்

சென்னை: சென்னை மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே நேற்று வெளியிட்ட அறிவிப்பு: சென்னை கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் 2024-25ம் ஆண்டுக்கான முழுநேர கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சிக்கு மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. இந்த பயிற்சிக்கான குறைந்தபட்ச கல்வி தகுதி பிளஸ் 2 தேர்ச்சி ஆகும் மற்றும் 1.8.2024 அன்று 17 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பு இல்லை. கூட்டுறவு பட்டயப் பயிற்சி ஓராண்டு 2 பருவ முறைகளாக (முதல் பருவம்/ 6மாதம்/ 5 பாடங்கள்; இரண்டாம் பருவம் / 6 மாதம் /5 பாடங்கள்) நடத்தப்படும். இதற்கான பயிற்சிக் கட்டணம் மொத்தம் ரூ.18,750. தமிழில் மட்டுமே பயிற்சியளிக்கப்படும். பயிற்சிக்கான தேர்வினையும் தமிழில் மட்டுமே எழுத வேண்டும். இந்த பயிற்சி வகுப்புகள் பிராட்வே, தேனாம்பேட்டை மற்றும் செங்குன்றம் ஆகிய 3 பயிற்சி நிலையங்களில் நடைபெறும்.
முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் சேர்க்கை நடந்து வருகிறது.

இதில் சேர விருப்பம் உள்ளவர்கள் www.tncu.tn.gov.in என்ற இணையதள முகவரி வாயிலாக வருகிற ஜூலை 19ம் தேதி மாலை 5 வரை விண்ணப்பிக்கலாம். மேலும் இந்த பயிற்சிக்கு ஏற்கனவே விண்ணப்பித்தவர்கள் பயிற்சி நிலையத்தை நேரில் அணுகி தங்களது அசல் சான்றிதழ்கள் சரிபார்ப்பிற்கு பிறகு பயிற்சி கட்டணம் ரூ.18,750 ஐ அன்றே பயிற்சி நிலையத்தில் UPI Paymentல் ஒரே தவணையாக செலுத்த வேண்டும். பயிற்சி முடிவில் கூட்டுறவு பட்டயப் பயிற்சி, நகை மதிப்பீட்டாளர் பயிற்சி மற்றும் கணினி தொடர்பான சான்றிதழ்கள் வழங்கப்படும். மேலும் கூட்டுறவு பட்டயப் பயிற்சியில் தேர்ச்சி பெற்றவர்கள் கூட்டுறவு நிறுவனங்களில் பணியில் சேர்வதற்கும், தனியார் வங்கிகளில் நகை மதிப்பீட்டாளராக பணிபுரியவும் வாய்ப்புள்ளது. மேலும், விவரங்களுக்கு சென்னை கூட்டுறவு மேலாண்மை நிலையம், எண்.215. பிரகாசம் சாலை, பிராட்வே சென்னை-600001 என்ற முகவரியிலோ அல்லது 044-25360041 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

 

Related posts

செப் 19: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

செந்தில் பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கு: குற்றச்சாட்டுகள் பதிவுக்காக விசாரணை அக்.1ம் தேதிக்கு தள்ளிவைப்பு

பாலியல் புகாருக்குள்ளான டாக்டர் சுப்பையா மீதான வழக்கில் தனி நீதிபதி உத்தரவிற்கு தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு