மனம் நிறைந்தது

கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டசபை தேர்தலின்போது, திமுக தனது தேர்தல் வாக்குறுதியாக மகளிருக்கு தலா 1,000 ரூபாய் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அறிவித்தது. அதன்படி அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் காஞ்சிபுரத்தில் இத்திட்டத்தை தொடங்கி வைத்தார். இத்திட்டத்துக்கு 1 கோடியே 6 லட்சத்து 52 ஆயிரம் குடும்பத்தலைவிகள் தகுதியானவர்களாக தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது. மாதம் ரூ.1000 என பெண்களுக்கு ஒரு வருடத்துக்கு ரூ.12 ஆயிரம் இத்திட்டத்தின் மூலம் கிடைக்க உள்ளது.

ஏழை, எளிய பெண்கள், சிறு சிறு உதவிக்கு யாரையும் எதிர்பார்க்க தேவை இல்லாத பொருளாதார விடுதலையை இத்திட்டம் கொடுத்துள்ளது. சிறு வியாபாரம், வணிகம் செய்து பிழைப்பு நடத்தும் பெண்கள், விளிம்பு நிலை பெண்கள் என பல தரப்பினரும் இத்திட்டத்தால் பலன் அடைந்துள்ளனர். தகுதியுடைய அனைத்து பெண்களுக்கும் இந்த திட்டம் சென்றடையவேண்டும் என்பதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதியாக இருந்தார். எனவேதான் மகளிர் உரிமைத்திட்டத்துக்கு விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்டவர்கள், மேல்முறையீடு செய்யலாம் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, 11 லட்சத்து 85 ஆயிரம் பேர் மீண்டும் விண்ணப்பம் செய்தனர்.

இவர்களது விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, தகுதியானவர்களுக்கு குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டன. மேலும் அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை கிடைப்பதற்கு நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டது. இத்திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று தொடங்கி வைத்தார். அப்போது, மேல்முறையீடு செய்து தேர்வானவர்களுக்கு ரூ.1,000 வழங்கப்பட்டது. இத்திட்டம் குறித்து அன்று, தமிழ்நாடு சட்ட
மன்றத்தில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், ஒரு கோடி பெண்களுக்கு இத்திட்டம் பலனளிக்கும் என்றார். ஆனால், இன்று 1 கோடியே 13 லட்சத்து 84 ஆயிரத்து 300 பேர் இந்த திட்டத்தில் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள்.

இத்திட்டம் இந்தியாவுக்கே முன்மாதிரி திட்டமாக உள்ளது. இத்திட்டத்திற்கான விண்ணப்ப பதிவு முகாமை முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த ஜூலை மாதம் தர்மபுரி மாவட்டம் தொப்பூரில் தொடங்கி வைத்தார். அப்போது அவர், 1989-ம் ஆண்டு அப்போதைய முதல்வர் கருணாநிதி தருமபுரியில் தொடங்கி வைத்த மகளிர் சுயஉதவிக் குழு திட்டத்தின் வெற்றியை குறிப்பிட்டார். அதாவது, தர்மபுரியில் விதைத்தால் தமிழ்நாடு முழுவதும் முளைக்கும் என்ற நம்பிக்கையில்தான் மகளிருக்கான உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தை இங்கே தொடங்கி வைக்கிறேன் எனக் குறிப்பிட்டார்.

அதுபோல், இந்த திட்டம் இப்போது தமிழ்நாடு முழுவதும் விரிவடைந்துள்ளது. ‘‘தொண்டை வலி இருந்தாலும், தொண்டு செய்வதில் தொய்விருக்கக்கூடாது என்பதால் வந்திருக்கிறேன். உங்களை பார்க்கும்போது என்னுடைய உடல்வலி குறைந்து, மன மகிழ்ச்சியில் நிறைந்திருக்கிறேன்’’ என முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்றைய விழாவில் நெகிழ்ச்சிபட பேசினார். அவரது மனம் மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழ்நாடு மக்களின் மனமும் நிறைந்திருக்கிறது.

Related posts

சென்னை அடுத்த ஆவடி, திருநின்றவூர், பட்டாபிராம் உள்ளிட்ட இடங்களில் கனமழை!

ஜனநாயகத்தில் வெற்றி, தோல்வி சகஜம்: இங்கிலாந்து இந்நாள், முன்னாள் பிரதமர்களுக்கு ராகுல் கடிதம்

அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தொடர்புடைய 12 இடங்களில் நடந்த சிபிசிஐடி சோதனை நிறைவு