முழு எழுத்தறிவு பெற்ற கிராம பஞ்சாயத்துகளை உருவாக்க நடவடிக்கை: கல்வி அலுவலர்களுக்கு உத்தரவு

சென்னை: பாரத எழுத்தறிவு திட்ட செயல்பாடுகள் குறித்து நடைபெறும் கிராம சபைக் கூட்டத்திற்கான உரிய நடவடிக்கைகளை அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் தவறாது மேற்கொள்ள வேண்டும். தமிழ்நாட்டில் புதிய பாரத எழுத்தறிவு திட்ட செயல்பாடுகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த திட்டம் வாயிலாக 15 வயதுக்கும் மேற்பட்ட எழுதப் படிக்க தெரியாத அனைவரையும் முழுமையாக கண்டறிந்து, அவர்கள் அனைவருக்கும் அடிப்படை எழுத்தறிவு கல்வி வழங்கிடும் செயல்பாடுகள் கடந்த ஜூலை மாதம் முதல் முன்னெடுக்கப்படுகின்றன.

மாநிலத்தை முழு எழுத்தறிவு பெற்ற மாநிலமாக விரைவில் மாற்றிட பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்வது மிகவும் அவசியமான ஒன்று என்றும், இதனை கருத்தில் கொண்டு அடுத்த மாதம் (அக்டோபர்)2ம் தேதி (புதன்கிழமை) அனைத்து நகர மற்றும் கிராம பஞ்சாயத்துகளிலும் நடக்கும் கிராம சபைக் கூட்டங்களில் முழு எழுத்தறிவு பெற்ற நகர, கிராம பஞ்சாயத்து என்கிற இலக்கை விரைவில் அடைவோம் என தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.

இதற்கு முன்னதாக ஏற்கனவே கடந்த மாதம் (ஆகஸ்ட்) நடந்த கிராம சபை கூட்டங்களில் இதே போல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதேபோல், இந்த மாத கிராம சபைக் கூட்டத்திலும் தீர்மானம் நிறைவேற்றுவதற்கான உரிய நடவடிக்கைகளை அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் தவறாது மேற்கொள்ள வேண்டும். இதற்கான தொகுப்பு அறிக்கையை அடுத்த மாதம் 30ம் தேதிக்குள் பள்ளிக்கல்வி இயக்ககத்துக்கு அனுப்பி வைக்கவேண்டும் என கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

Related posts

மக்களுக்கு எந்தவித தட்டுப்பாடுமின்றி பால் விநியோகம் செய்யும் நிலையை உருவாக்கியது மன நிறைவு தருகிறது: முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜ் பதிவு

ஒசூரில் அமையவிருக்கும் டாடா எலக்ட்ரானிக்ஸ் மூலமாக ஐபோன் தயாரிக்கும் ஆலை மூலம் 20,000 பேருக்கு வேலைவாய்ப்பு: டாடா சன்ஸ் நிறுவன தலைவர் சந்திரசேகரன் தகவல்

எந்த விமர்சனங்களுக்கும் ஆளாகாமல் மாநிலத்தை வளப்படுத்த வேண்டும்: புதிய அமைச்சர்களுக்கு முதல்வர் அறிவுரை